என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
- பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.
சுப வினையை எதிர்கொள்ளும் காலங்களில் உற்சாகமாக வாழும் மனிதர்கள் அசுப பலன்கள் நடக்கும் காலங்களில் ஜோதிடத்தின் உதவியை நாடுகிறார்கள். ஜாதகரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சில பரிகாரங்கள் , வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தரும் பரிகாரங்கள் சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஜாதகருக்கு தொடர்ந்து அசுபத்தை மட்டுமே உமிழ்கிறது. இது போன்ற காலகட்டங்களில் பரிகாரங்கள் என்பது உண்டா இல்லையா என்ற தர்க்கமும் அவநம்பிக்கையும் ஏற்படுவது சகஜம். பரிகாரம் நிறைவேறாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்களாம்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை சரி செய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்ம வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்த கர்ம வினையை தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம், என இரண்டாக பிரிக்கலாம்.
தெரியாமல் செய்த பாவத்தின் மூலம் உருவாகும் அசுப பலனை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும். தெரிந்து செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் ஆகியவை தெரியாமல் செய்த வினைகளினால் உருவாகுவது.பெரிய கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகுவது.
ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின் மூலம் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை கண்டறிய முடியும்.
வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பரிகாரம், வழிபாட்டு முறைகள் சக்தி வாய்ந்தவை. அவைகளை முறையாகச் கடைபிடிக்கும் போது நிறைவேறும். அதேபோல் பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.
பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரிய சித்திக்காக நேரம் பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. மனிதர்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்ற செய்யப்படும் பூஜையே பரிகாரமாகும். அதாவது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவை அடங்கும். அதாவது ஹோமம், யாகத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது.
வழிபாடு என்பது தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான் என்பதை உணர்ந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது. அதாவது காரியசித்திக்காக குல , குடும்ப , உபாசன , இஷ்ட , காவல் தெய்வத்திற்கு தன் எண்ண அலைகளை அனுப்பி தன் விருப்பத்தை சித்தியாக்குவது.
பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும். வழிபாட்டின் பலன் ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் காவலாக இருக்கும்.சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, பேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அறையை விட்டு வெளியே வந்தாலும் ஏசி, பேன் நம்மை காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற உணவு , நீராகாரம் உண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடம்பை தயார் செய்வது வழிபாடு.
பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நன்கு அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்கு பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும்.
மேலும் பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்
தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும் சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
நல்ல விஷயத்துக்கான பரிகாரம் வளர்பிறையிலும் மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்
ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான் தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.
திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு 6, 8, 12 மாதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்க கூடாது. மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும் போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.
பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு பரிகாரம் உடனே நிறைவேறும்.
பரிகாரம் செய்யும் கிரகம் கோட்ச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.
மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துள் நிச்சயமாக நிறைவேறும்.
பரிகாரம் பொய்ப்பதற்கான காரணங்கள்
சுய பரிகாரம் செய்தல், விருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது, வேத விற்பனர் ஏதோ மந்திரம்சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது. ஜோதிடர் பரிகாரம் சொல்லும் போதே எனக்கு அந்த கிழமை , தேதி சரிவராது என்று கூறும் போது பரிகாரம் பலிக்காது.
ஒரு ஜாதகத்தின் குரு , சனி , செவ்வாய் தொடர்பே ஜாதகருக்கு பரிகாரம் தேவையா? வழிபாடு தேவையா என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணியாகும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, ( 1 ) பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (5) மற்றும் பாக்கிய அதிபதி (9) தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனே நிறைவேறும். 6,8,12ம் அதிபதிகளின் தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலிக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரும். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும், பரிகார பூஜைகள் உரிய பலனைத் தரும் என்பது தெளிவாகிறது.
- இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது
- இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது
பூஜையறையில் விநாயகர் படம், சிவ குடும்ப படம், பெருமாள்-லட்சுமி படங்கள் வைத்து, அருகில் குத்துவிளக்கில் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். நடுநாயகமாக விநாயகர், சரஸ்வதி, லட்சுமி படம் வைக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி மங்கலப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.
வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து துளசி மாதாவைக் கும்பிட வேண்டும்.
எதிர்மறை சொற்களைத் தவிர்த்து இனிமையான சொற்களையே பேச வேண்டும்.
வேண்டாம், போ, இல்லை என்ற எதிர்மறைச் சொற்களையும், விலங்குகளின் பெயர்களைச் சொல்லி அதட்டும் முறையையும் கைவிட வேண்டும்.
முன்னோர்களின் நினைவு நாட்களில் அவர்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரார்த்தனைகள் மூலம் இறைவன் நம் இல்லம் தேடி வந்து அருள் கொடுக்கவும், மகிழ்ச்சியோடு நாம் வாழவும் இங்ஙனம் செய்வது நல்லது.
இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது, இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
- சிக்கலான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள்.
அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் 'கறுப்புக் கயிறு' மந்தரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.
இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை 'சத்ரு சம்கார' (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்தசொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.
வழக்கைத் தீர்க்கும் அம்மன்
ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும் படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, 'இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்' என்றான்.
'யார் குற்றவாளி' என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.
'அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!' என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.
அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி தேவி ஆலயம்.
-பிரபா முத்துக்குமார், திருவனந்தபுரம்.
- இந்த கோவிலில் வழிபட்டால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.
- இன்று (வெள்ளிக்கிழமை) திருமாலின் மச்ச அவதார தினமாகும்.
இன்று (வெள்ளிக் கிழமை) திருமாலின் மச்ச அவதார தினமாகும். திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சஅவதாரம். 'மச்சம்' என்றால் 'மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீ வன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது.
இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.
மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.
அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.
- பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும்.
- குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள்.
படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்புகிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.
புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு, மனை வாங்க இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது- மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் பல லட்சம் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள்.
பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும். ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் உருவாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழில் சார்ந்த நஷ்ட கடன், கூடிக் கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரையம் உண்டாகும். இவர்கள் கடனுக்கு பொருள் விற்பதால் வராக்கடன் கூடும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு.
ஜோதிட ரீதியாக வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலம் எது?
6, 8-ம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசை புத்தி, அந்தரம் நடப்பவர்களுக்கு புதன் தசை நடக்கும் காலங்களில் ஜனன கால ஜாதகத்தில் 7-ம் அதிபதி வக்ரம் பெற்று தசை நடத்தும் போது மேஷம், மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே வராக்கடன் இருக்கும்.
6, 8-ம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கு 7-ம் அதிபதி 6,8-ம் இடத்தோடு சம்பந்தம் இருப்பவர்களுக்கு மேலும் ஜனன கால ஜாதகத்தில் 2,8-ம் இடத்தில் சனி, ராகு/கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ம் இடத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருப்பவர்கள் யாருக்கும் பணம், பொருள் கொடுத்தாலும் திரும்ப வராது.வயதோட்டத்தின் அடிப்படையில் 19, 28, 37,46, 55, 64,73 ஆகிய வயதில் ஏதாவது ஒரு காரணத்தினால் வராக்கடன் உருவாகுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் 'துர் ஸ்தானங்கள்' அல்லது 'மறைவு ஸ்தாதானங்களாகும். ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கும் உண்டு.
தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாகவும் மாரக தசை, புத்தி யோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்களுக்கு சாமானியர்களை கூட உறுத் தெரியாமல் செய்து விடும் வலிமை உண்டு. மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுள். இவர்கள் வராக்கடனால் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். லக்ன அதிபதி 6, 8,12-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் போது ஜாமின் போடுவது, அல்லது ஏலச் சீட்டில் பணம் கட்டி ஏமாறுவது, குறுக்குவழி அதிர்ஷ்டத்தை நம்புதல் போன்ற காரணத்தால் வராக்கடனையும் சத்ருவையும் உருவாக்கி சொல்ல முடியாத துயரத்தை அடைகிறார்கள்.
பொதுவாக மறைவு ஸ்தானத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கநேரும். ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாறோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோக பிரச்சிினைகள் இருக்கும். அடுத்தவருடைய கஷ்டத்திற்கு பாவம் என்று உதவி செய்தால் அந்த பாவம் உதவி செய்தவரை விடாமல் துரத்துகிறது. மிகப் பெரிய வங்கிகள், கார்ப்ரேட் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் வராக்கடனை வசூலிக்க தனியான ஒரு அமைப்பு வைத்து இருக்கிறார்கள்.
சாமானியர்கள் என்ன செய்வது?
செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை.
- ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும்.
நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் படி சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற நிலைக்கு ஏற்ப அதன் தசா புக்திக்கு காலங்களில் சுப, அசுப பலன்கள் ஏற்படுகின்றன.
நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கோவிலை நோக்கி புறப்படுகிறார்கள். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. அதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழி நடத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட எளிய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சூரியன் தோஷம்
சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும் . கோதுமை உணவு சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்ய வேண்டும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாணிக்க மோதிரம் அணிய வேண்டும்.
சந்திர தோஷம்
சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும் பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.
வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.
திருப்பதி சென்று வெங்கடா சலபதியை தரிசிக்கலாம்.
பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.
முத்து மோதிரம் அணிய வேண்டும்.
செவ்வாய் தோஷம் செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
துர்கா கவசம் படிக்க வேண்டும்.
வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணிய வேண்டும்.
செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பசு தானம் செய்ய வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவள மோதிரம் அணிய வேண்டும்.
புதன் தோஷம்
புதன்தோஷம் நீங்க புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். புதன் கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். விஷ்ணு சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.
குரு தோஷம்
இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும் யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும்.
வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கி ழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும். கனக புஷ்பராக கல்லில் மோதிரம் அணியலாம் சுக்கிரன் தோஷம் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தர வேண்டும். வைர மோதிரம் அணிய வேண்டும்.
சனி தோஷம்
சனி தோஷம் விலக சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். சனி தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தில் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு. நீலக்கல் மோதிரம் அணிய வேண்டும்.
ராகு தோஷம்
இத்தோஷம் நீங்க ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். கும்பகோணம் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி வழிபாடு துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.
கேது தோஷம்
தோஷம் விலக கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். விநாயகர் ,ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும் அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட்டால் இன்னல் தீரும்.
- சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
- பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.
- துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
- சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.
இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர்.
துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ெரயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது.
- பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார்.
- பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது.
ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார். அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துபவார். பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது. பாதகாதிபதி சுப வலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுப பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தை செய்வார். பாதகாதிபதியின் தசை அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை வலுப் பெற்ற பாதகாதிபதி தசை நிச்சயம் செய்யும். கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.
பாதகாதிபதி என்ற பெயரே பாதகாதிபதி, பாதகஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும்.அதே போல் பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தை தந்து கொண்டே இருக்க மாட்டார்கள். பாதகம் வேலை செய்யும் காலகட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில் பாதகாதிபதி நீசம்,அஸ்தங்கம் பெற்று பலம் குறைய வேண்டும். ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களை பாதக தோஷம் பெரியதாக பாதிக்காது. பாதகாதிபதிக்கு, பாதக ஸதானத்திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால் ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.
பெரும்பான்மையாக பாதகாதிபதி, பாதகாதிபதியின் நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை,புத்தி காலங்களில் மட்டுமே பாதிப்பு இருக்கும். மற்ற காலங்களில் பாதிப்பு இருக்காது. பாதகாதிபதிகள் தனது தசாபுத்தி காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு. முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும் கலந்தே இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன மற்றும் கோட்சார சனி, ராகு/கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும் போது அசுப விளைவுகள் ஜாதகரை நிதானமிலக்கச் செய்யும். பாதகாதிபதி உச்சம் பெறக் கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் சுய சாரம் பெறக்கூடாது.. ஜனன,கோட்சார ரீதியாக அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பு இருக்கும். குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இது போன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் பரிந்துரைத்துள்ள பரிகாரத்தை கடைபிடித்து வர பாதகம் நீங்கி சாதகம் கிடைக்கும்.
பரிகாரம்
பொதுவாக பாதகாதிபதியின் தசை, புத்தி அந்தர காலங்களில் அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம். கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும். பாதக தோஷத்தால் மிகுதியான அசுப பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வந்தால் சுப பலன் கிடைக்கும். வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் பிரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். சரம்: மேஷம்,கடகம்,துலாம், மகரம் லக்னங்களுக்கான பரிகாரம். தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும். வீண் விரயத்தை தவிர்க்க ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தர வேண்டும். நேரம் கிடைக்கும் போது கோவில்களில் உலவாரப் பணிகளை செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். சனிக்கிழமைகளில் கருவேப்பிலை சட்னி சாப்பிட வேண்டும்.
ஸ்திரம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னங்களுக்கான பரிகாரம்.
வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு,உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.
ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களின் நல்லாசி பெற வேண்டும்.
கோ தானம் செய்ய பல தலைமுறையாக தீராத பித்ரு சாபம் தீரும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளு சாதம் வைக்க வேண்டும்.
உபயம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களுக்கான பரிகாரம்.
பாதகாதிபத்திய தோஷத்தால் திருமணத்தடை, திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகளை நீங்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதுடன் உளுந்து சுண்டல் தானம் தர வேண்டும்.
தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர வேண்டும்.
வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
- இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் பலன் தெரிவதை காணலாம்.
- வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமையிலிருந்து வெளிவர ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம்.
நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் ஒரு தனி அறையில் அல்லது வரவேற்பறையில் கூட தனியாக படுத்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று உங்கள் தலையை சுற்றிய வெண்கடுகை நீங்கள் படுகின்ற இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு விடுங்கள்.
நடுவே பாய் தலையணை மெத்தை போட்டுக் கூட படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் தேய்த்து முகம் கழுவி விட்டு உடனடியாக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி அள்ளி ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். நெருப்பில் இந்த வெண்கடுகு எல்லாம் படபடவென எரிந்து முடிந்துவிடும்.
இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிழமையில் செய்தாலும் சரி. ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்று கிழமைகள், அதே ஞாயிற்றுக்கிழமையில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு கைகூடி வரும்.
இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் கடன் பிரச்சனை நீங்காது. கடனை திருப்பித் தர என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முயற்சிகளில் வரும் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு பணம் வருவதில் இருக்கும் சிக்கல்கள் தீரும். சிக்கல்களை சரி செய்ய தான் பரிகாரமே தவிர, மந்திரம் போட்டால் மாங்காய் என்றைக்குமே வராது.