search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?
    X

    ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?

    • சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
    • பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.

    சுப வினையை எதிர்கொள்ளும் காலங்களில் உற்சாகமாக வாழும் மனிதர்கள் அசுப பலன்கள் நடக்கும் காலங்களில் ஜோதிடத்தின் உதவியை நாடுகிறார்கள். ஜாதகரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சில பரிகாரங்கள் , வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தரும் பரிகாரங்கள் சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஜாதகருக்கு தொடர்ந்து அசுபத்தை மட்டுமே உமிழ்கிறது. இது போன்ற காலகட்டங்களில் பரிகாரங்கள் என்பது உண்டா இல்லையா என்ற தர்க்கமும் அவநம்பிக்கையும் ஏற்படுவது சகஜம். பரிகாரம் நிறைவேறாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்களாம்.

    தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை சரி செய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்ம வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

    இந்த கர்ம வினையை தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம், என இரண்டாக பிரிக்கலாம்.

    தெரியாமல் செய்த பாவத்தின் மூலம் உருவாகும் அசுப பலனை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும். தெரிந்து செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் ஆகியவை தெரியாமல் செய்த வினைகளினால் உருவாகுவது.பெரிய கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகுவது.

    ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின் மூலம் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை கண்டறிய முடியும்.

    வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பரிகாரம், வழிபாட்டு முறைகள் சக்தி வாய்ந்தவை. அவைகளை முறையாகச் கடைபிடிக்கும் போது நிறைவேறும். அதேபோல் பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.

    பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரிய சித்திக்காக நேரம் பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. மனிதர்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்ற செய்யப்படும் பூஜையே பரிகாரமாகும். அதாவது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவை அடங்கும். அதாவது ஹோமம், யாகத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது.

    வழிபாடு என்பது தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான் என்பதை உணர்ந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது. அதாவது காரியசித்திக்காக குல , குடும்ப , உபாசன , இஷ்ட , காவல் தெய்வத்திற்கு தன் எண்ண அலைகளை அனுப்பி தன் விருப்பத்தை சித்தியாக்குவது.

    பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும். வழிபாட்டின் பலன் ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் காவலாக இருக்கும்.சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, பேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அறையை விட்டு வெளியே வந்தாலும் ஏசி, பேன் நம்மை காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற உணவு , நீராகாரம் உண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடம்பை தயார் செய்வது வழிபாடு.

    பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நன்கு அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்கு பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும்.

    மேலும் பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டும்.

    பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்

    தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும் சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.

    நல்ல விஷயத்துக்கான பரிகாரம் வளர்பிறையிலும் மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்

    ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான் தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.

    திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு 6, 8, 12 மாதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்க கூடாது. மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும் போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.

    பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு பரிகாரம் உடனே நிறைவேறும்.

    பரிகாரம் செய்யும் கிரகம் கோட்ச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.

    மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துள் நிச்சயமாக நிறைவேறும்.

    பரிகாரம் பொய்ப்பதற்கான காரணங்கள்

    சுய பரிகாரம் செய்தல், விருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது, வேத விற்பனர் ஏதோ மந்திரம்சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது. ஜோதிடர் பரிகாரம் சொல்லும் போதே எனக்கு அந்த கிழமை , தேதி சரிவராது என்று கூறும் போது பரிகாரம் பலிக்காது.

    ஒரு ஜாதகத்தின் குரு , சனி , செவ்வாய் தொடர்பே ஜாதகருக்கு பரிகாரம் தேவையா? வழிபாடு தேவையா என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணியாகும்.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, ( 1 ) பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (5) மற்றும் பாக்கிய அதிபதி (9) தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனே நிறைவேறும். 6,8,12ம் அதிபதிகளின் தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலிக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரும். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும், பரிகார பூஜைகள் உரிய பலனைத் தரும் என்பது தெளிவாகிறது.

    Next Story
    ×