search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    காட்டுவிளை புனித மங்கள அன்னை ஆலயம்
    X

    காட்டுவிளை புனித மங்கள அன்னை ஆலயம்

    • ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது.
    • திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    500 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுவிளை தன் பெயருக்கேற்ப புன்னையும், மாவும் நிறைந்த காடாக காட்சியளித்தது. அப்போது அங்கு ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்களே வாழ்ந்து வந்தனர்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து முட்டத்திற்கு மகாராஜா பல்லக்கில் செல்லும் முக்கிய வழியாக காட்டுவிளை திகழ்ந்து வந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொட்டவிளை நாடான் என்பவர் வைத்து வணங்கிய கல்குருசு பற்பல புதுமைகளை செய்து கொள்ளை நோய்கள் மற்றும் எந்தவித கேடுகளும் இல்லாமல் மக்களை முன்னேற்ற பாதையில் வளர வைத்தது. காலம் செல்ல, செல்ல புதுமைகள் நிறைந்த அந்த குருசை சுற்றி மக்கள் சிறிய குருசடி ஒன்றை கட்டினர். அதில் தினமும் செபித்து வந்தனர்.

    சிற்றாலயம்

    1860-ம் ஆண்டு மாடத்தட்டுவிளை பங்கின் ஓர் அங்கமாக காட்டுவிளை செயல்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்கள் பின்னணியில் சிற்றாலயம் ஒன்று கட்ட பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி மக்கள் தீர்மானித்தனர். காட்டுவிளை, கொல்லம் ஆயர் பென்சிகரால் 1871-ல் காரங்காடு பங்கோடு இணைக்கப்பட்டது. 11-8-1931-ல் அருட்பணியாளர் இஞ்ஞாசியாரால் சிற்றாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1933-ம் ஆண்டு அருட்பணியாளர் வர்க்கீஸ் அடிகளார் காலத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு புனித மங்கள மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதிய ஆலயத்தில் அருட்பணியாளர் இம்மானுவேல் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இங்கு இறைமக்களின் விடிவெள்ளியாக புனித மங்கள அன்னை திகழ்ந்து வருகிறார். கொள்ளை நோயின் பிடியிலிருந்தும், பயத்தில் இருந்தும் மக்களை காப்பாற்ற கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் வீடு-வீடாக சென்று பஜனை பாடினார்கள். மேலும் நிறைவு நாளில் சப்பரப்பவனி நடைபெறுவது வழக்கம். தற்போதும் ஆண்டு தோறும் பஜனை மற்றும் சப்பரப்பவனி நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆயர் டி.ஆர்.ஆஞ்ஞசாமி 28-4-1940-ல் காரங்காடு பங்கில் இருந்து சரலை தனிப்பங்காக பிரித்து காட்டுவிளையையும் சரல் பங்கோடு இணைத்தார். அப்போது சரல் பங்குப்பணியாளராக அருட்பணியாளர் ஜேக்கப் லோப்பஸ் நியமிக்கப்பட்டார். மாதத்தில் ஒரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    1950-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சிற்றாலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் ஆலய பாதுகாவலர் திருநாளின் போது புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய ஊர் தலைவர் மற்றும் பங்கு மக்களின் அயராத ஊழைப்பாலும், ஒத்துழைப்பாலும், புதிய ஆலயம் அருமையாக கற்களால் எழுப்பப்பட்டது. அருட்பணியாளர் தனிஸ்லாஸ் காலத்தில் 1953-ம் ஆண்டு மே மாதம் பாதுகாவலர் விழா திருக்கொடியேற்ற நாளில் ஆயர் ஆஞ்ஞசாமி புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 16-5-1669-ம் ஆண்டு அருட்பணியாளர் ஏ.ஜே.அகஸ்டீன் அடிகளாரின் பணி காலத்தில் அருட்பணியாளர் தங்குவதற்கான மேடையும், கோவில் கொடி மரமும் அமைக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது.

    மக்களை பார்த்து திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது. மாதம் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதோடு நற்கருணை பேழை (திருப்பிரசன்னம்) ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதன்கிழமை மாலை திருப்பலியும் நடைபெற்றது.

    18-12-1987-ல் அருட்பணியாளர் ஏ.செல்வராஜ் பணிக்காலத்தில் பிரான்ஸ் தொண்டு நிறுவன உதவியுடன் குடிநீருக்கான பெரிய கிணறும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டு, மக்களுக்கும், ஆலய தென்னை மர தோப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

    பங்கு அருட்பணிப்பேரவை

    கோட்டார் மறை மாவட்ட விதிமுறைப்படி அருட்பணியாளர் பெஞ்சமின் லடிஸ்லாஸ் பணி காலத்தில் 8-9-1996-ல் முதல் பங்கு அருட்பணி பேரவை அமைக்கப்பட்டது. தற்போது எட்டாவது பங்கு மேய்ப்புப்பணி பேரவை செயல்படுகிறது.16-5-2004-ல் தூய மங்கள அன்னை ஆலய 50-வது ஆண்டு பொன்விழா அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் காலத்தில் ஆயர் லியோன் தர்மராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    பொலிவுடன் எழுப்பப்பட்ட புதிய ஆலயம்

    அருட்பணியாளர் ஸ்டான்லி சகாயம் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான தேவை உணரப்பட்டு 8-1-2016 முதல் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காணிக்கை ஆலய கட்டுமான பணிக்கான சிறப்பு காணிக்கையாக பிரிக்கப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது. அருட்தந்தை ஸ்டான்லி சகாயம் திட்டமிடுதலாலும், வழிகாட்டுதலாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும், ஆலய கட்டுமான நிதி திரட்டுவதில் மக்கள் உற்சாகமாக செயல்பட்டார்கள். அதைத்தொடர்ந்து பங்கில் பொறுப்பேற்ற அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் புதிய ஆலயம் கட்டுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டுமான நிதி சேர்ப்பதில் உழைத்தார். கட்டிட குழுவும் உருவாக்கப்பட்டது.

    9-12-2019-ல் ஆயர் நசரேன் சூசை அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்னையின் பிறப்பு விழாவான 8-9-2020-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் தளராத தியாக வழிநடத்துதலாலும் பல நிலையிலும் பல்வேறு மக்கள் மற்றும் பங்கு மக்களின் பணிகளாலும் தாராள கொடைகளாலும் பிற பல பங்குகளின் உதவி கரங்களாலும் நல் உள்ளம் படைத்த நன்கொடையாளர்களாலும், அனைவரின் இணைந்த செயல்பாடுகளாலும் ஆலயப்பணி நிறைவுக்கு வந்துள்ளது. புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) ஆயர் நசரேன் சூசையால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட உள்ளது.

    -அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ்.

    Next Story
    ×