search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    ஐயன்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்- திருவாரூர்
    X

    ஐயன்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்- திருவாரூர்

    • இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
    • இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    சைவ சமய குரவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் அடியார் திருக்கூட்டங்களோடு பல புண்ணிய தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபடலாயினர். இவ்வகையில் திருவீழிமிழலை என்னும் பதியில் அருள்மிகு அழகிய மாமுலை அம்மன் உடனுறை வீழிநாதசுவாமியை வழிபடும் காலத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்த ஆவண வீதியே தற்பொழுது ஐயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. ஐயனே வந்து வியாபாரம் செய்தமையால் ஐயன்பேட்டை என்பதாயிற்று. திருவீழிமிழலை தலவரலாற்றில் இதுபற்றி விரிவாகக் காணலாம்.

    அத்துணைப் புகழ் வாய்ந்த இத்தலத்தின் கீழ்த்திசையில் அருள்மிகு முத்துமாரியம்மன் தனிக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறாள். இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பரம்பரையாக சைவ வேளாளர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இறைவனார் பரமேஸ்வரன், இறைவி பார்வதிக்கு திருவாய் மலர்ந்தருளிய உபதேசத்தில் பிரமாண்ட கேரள நூல் ஏட்டுச் சுவடியில் இவ்வாலயம்பற்றி நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பன்னெடுங்காலமாகவே இக்குடும்பதினரால் பரம்பரையாக இவ்வாலய வளாகத்தில் விஷக்கடி நிவாரணம், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் அம்மனின் அருட்சக்தி கொண்டு அளிக்கப்படுகிறது. குறிப்பாக நாய்க்கடி, எலிக்கடி, பூனைக்கடி, மனிதக்கடி மற்றும் அனைத்துவித மிருகங்களின் கடிகளுக்கும், விஷ ஜந்துக்களின் கடிகளுக்கும், விஷக் கடியால் ஏற்படும் தோல் நோய்களுக்கும் எந்தவித பத்தியமும் இல்லாத வகையில் பூரண உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை முடிந்தபின், விபூதி, குங்குமப் பிரசாதம், வழங்கிய பிறகு இந்நிவாரணம் செய்யப்படுகிறது. முதலாவதாக ஆன்மிக சத்விஷயங்கள் கூறிய பிறகு மாந்திரீகர் தனது தலை அசைவினாலும், மந்திரக்கோலின் அசைவு கொண்டும் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மணி, மந்திர ஔஷதம் என்ற சித்தாமுறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு மட்டுமின்றி மனிதர்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய், பூணை, குதிரை, கிளி, புறா, கோழி, வாத்து ஆகிய விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பிராணிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்படுகிறது. விஷக்கடியால் பாதிக்கபட்ட வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் இந்நிவாரணம் தக்கபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர திருமணத் தடைகள் அகலவும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தும் பக்தர்கள் பயன் அடைகிறார்கள். சித்தப்பிரமை, மனநலம் குன்றியோர், நலம் பெறவும் பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து நிவாரணம் பெறவும் சிறந்த பூஜை பிரார்த்தனை செய்து நல்ல பலனை பெறலாம்.

    நித்திய பூஜையும் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜையும் முறையாக நடைபெறுகின்றன. தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, ஆராதனைகளும், மாலையில் முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்வித்து சிறப்பு அன்னதானமும் முறையாக செய்யப்படுகின்றன. அத்துடன் மேற்கூறிய விழாக் காலங்களில் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எதிர்பாரத விபத்துகளில் இருந்து தப்புவதற்கான நிகழ்வுகள், இரவு நேரங்களில் வெவ்வேறு வித பூக்களின் மணங்கள் ஆலயத்தில் வீசுகின்றன. இடைவிடாமல் அடிக்கடி ஆலயத்தில் சர்ப்பங்கள் உலாவுவதை காணலாம்.

    ஆலயத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் அம்மனின் அருட்சக்தியால் நிறைவேறுகின்றன என்பது கண்கூடு.ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் ஆண்டு திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது ஹோமங்கள், பால்காவடி, பால்குடம், அலகுகாவடியுடன் திருவீதியுலா வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும், அலங்காரம், பூஜை ஆராதனைகள் நடைபெறும்.

    ஆலயத் தொடர்பு ; 8526739981.

    கும்பகோணம்- பூந்தோட்டம் - காரைக்கால் வழிதடத்திலும், மயிலாடுதுறை - பூந்தோட்டம் - கும்பகோணம் வழித் தடத்திலும் (மருதவஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்). மயிலாடுதுறை - பூந்தோட்டம் - திருவாரூர் வழித் தடத்தில் பூந்தோடத்திற்கு மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

    Next Story
    ×