search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் 2 நாட்களில் 1¾ லட்சம் பேர் தரிசனம்
    X

    ஐயப்பனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    சபரிமலையில் 2 நாட்களில் 1¾ லட்சம் பேர் தரிசனம்

    • விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஆன்லைன் மூலம் 63 ஆயிரத்து 130 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

    ஆனாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலையே நிலவி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது.

    வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது 3 மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை திறப்பு 4 மணியில் இருந்து 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்றுமுன்தினம் சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 85 ஆயிரம் பேர் ஒரே நாளில் இரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் மூலம் 63 ஆயிரத்து 130 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். அதன்படி நேற்று ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மொத்தம் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவசம்போர்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறதா? தரமாக உள்ளதா? என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    சபரிமலை காட்டுப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×