search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    திருச்செந்தூர் கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

    வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நாளை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று நடந்தது.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் இன்று விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வருகிறது. இந்த விசாக திருவிழாவில் கலந்து கொண்டு ஒருநாள் சாமி தரிசனம் செய்வதால் ஒரு வருடத்தில் 12 மாதம் வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கு சமம் என்பது ஜதீகம்.

    அந்த வகையில் பக்தர்கள் நேற்றில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களில் வந்து இன்று காலையில் இருந்தே கடல் மற்றும் நாலி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, அலகு குத்தியும், அங்க பிரதட்சணம் செய்தும், பால் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்து கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷம் விண்னண பிளக்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெரும் இவ்விழா கடந்த மே 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    கடற்கரையில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டம்.


    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், அதைத் தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலமாக வந்து கோவில் சேர்கிறார்.

    இதே போல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான நேற்று பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×