என் மலர்
கால்பந்து
- ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி கோப்பை வென்றது.
கொல்கத்தா:
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியும், பெங்களுரு எப்.சி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியின் 14வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடஸ் முதல் கோல் அடித்தார்.
முதல் பாதியின் முடிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 5வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடஸ் 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
- பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.
பாரிஸ்:
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.
- காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கி இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்த போது இவர்கள் ஜெர்மனி, பிரேசில் கால்பந்து வீரர்களுக்கு கட்-அவுட் அமைத்து கொண்டாடினர். மேலும் கேரளாவை சேர்ந்த வீரர்கள் பலரும் பல்வேறு கால்பந்து அணிகளிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள்.
அதோடு கேரளாவில் கால்பந்து போட்டிகள் நடந்தாலும் அதனை காண ஏராளமானோர் திரண்டு வருவார்கள். மேலும் கால்பந்தில் சாதனை படைக்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்வது வழக்கம்.
அந்த வகையில் பெனால்டிக் கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி ஒன்று நேற்று நடந்தது. மஞ்சேரி பையநாடு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 4500 பெனால்டிக் கிக் அடிக்கப்பட்டது.

இரவு 7.38 மணிக்கு இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை மந்திரி பெனால்டிக் கிக் அடித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார். இதற்கு முன்பு ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.
நேற்று நடந்த நிகழ்ச்சி மூலம் இந்த சாதனையை கேரள இளைஞர்கள் முறியடித்து உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.
- போர்ச்சுகல் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் ராஜினாமா செய்தார்.
- புதிய பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ மார்ட்டினஸ் (வயது 49), போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கத்தார் உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, மார்ட்டினஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ராபர்ட்டோ, "உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணியில் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
- பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
- பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சான்டோஸ்:
கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.
தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
- அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
சான்டோஸ்:
உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.
இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
- மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- இதய செயல் இழப்பால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சாவ் பொல்ஹொ:
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். நுரையீரல், இதய செயல் இழப்பு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பீலே இன்று உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்று தந்த பீலே, அனைத்து காலத்திற்குமான சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.
- வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பியூனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.
தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.

கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார்.
- 1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பியுனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப்பையை வென்று உள்ளது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தது. மரடோனாவுக்கு பிறகு லியோனல் மெஸ்சி அந்நாட்டுக்காக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றிய தால் அந்நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. அணியின் வெற்றியை திருவிழா போல் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு மிகவும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்கள் நாட்டு நாயகர்களை வாழ்த்தி கோஷ மிட்டனர். திறந்த பஸ்சில் சென்ற அவர்களுக்கு சாலையின் இரு புறத்தில் இருந்தும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இந்த உற்சாகமான வரவேற்பில் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் திக்கு முக்காடி விட்டனர். நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாட்டம் இருந்தது.
உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சியின் கனவு நனவாகி உள்ளது. இதன் மூலம் கால்பந்தின் அனைத்து காலக்கட்டத்திலும் தான் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டி விட்டார்.
இந்த நிலையில் லியோனல் மெஸ்சி தனது 30ஆண்டுகள் பயணத்தை குறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கால்பந்து உலகில் மெஸ்சியின் புகழ் பெற்ற பயணம், சமீபத்தில் அதன் உச்சத்தை எட்டியது உள்ளிட்ட எல்லா அம்சங்களும் வீடியோவில் இருக்கிறது.
1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் கால்பந்து ஜாம்பவனான டியாகோ மரடோனாவுக்கும் அவர் அஞ்சலியும் செலுத்தி உள்ளார். மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார். மனதை கவரும் தலைப்பையும் அதில் பதிவிட்டுள்ளார்.
மெஸ்சி இந்த வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.