search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் அடக்கம் - கண்ணீருடன் விடையளித்த ரசிகர்கள்
    X

    கண்ணீருடன் விடையளித்த ரசிகர்கள்

    கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் அடக்கம் - கண்ணீருடன் விடையளித்த ரசிகர்கள்

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சான்டோஸ்:

    கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

    14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

    தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×