search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சைலண்ட் ஹார்ட் அட்டாக் யாருக்கு ஏற்படும்?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' யாருக்கு ஏற்படும்?

    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×