search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை
    X

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை

    • மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
    • சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை.

    மனித வாழ்க்கையானது இளமைப்பருவம், முதுமைப்பருவம் என இருப்பருவங்களாக வகுக்கப்படுகின்றன. அதில் ஆணும் சரி, பெண்ணும் சரி வாழ்வின் பெரும்பகுதியினை இல்லற வாழ்க்கைக்கே செலவு செய்கின்றனர். துணைவியாக வரும் பெண் தன் துணைவனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்டதொரு பகுதி செல்வத்தை கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் வரதட்சணை என்கிறோம்.

    வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளை குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்து வாழ வேண்டும். இதனை வியாபாரத்தின் நோக்கில் கொண்டு சென்று வரதட்சணை என்னும் பெயரில் பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.

    மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல ஏழை எளிய பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வரதட்சணை கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    குடும்பத்தில் அன்றாட நடக்கும் வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணையின் காரணமாக மரணமடைகிறாள். தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணை குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பல சட்டம் பேசும் சமுதாயத்துடன் இணைந்து வாழ பெண்கள் முடிவெடுத்தாலும் சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை. பெண்கள் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தங்கள் தோளில் சுமந்துகொண்டு நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகிறாள். ஒவ்வொரு நிமிடமும் இவர்கள் செய்யும் பணிகள் ஏராளம். பெண்கள் தங்களது வாழ்வில் தனக்கென இல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள்.

    பெண் சிசுக்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணமாக உள்ளது. பெண் குழந்தை பிறந்து ஆளானால் பல்லாயிரக்கணக்கான சீர் வரிசைகளுடன் கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயக் கடமை பெற்றோருக்கு இருக்கின்றது. பிற்காலத்தில் தங்கள் மகளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற அச்சத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்தவுடனேயே பெண் குழந்தைகளை கொன்று விடுகிறார்கள். இவ்வாறு ஈவு இரக்கமின்றிய செயல்களுக்கு வித்திடுவதாய் வரதட்சணை கொடுமை அமைந்துள்ளது.

    வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளைகளை மணமுடிக்க முடிந்தாலும் பல பெண்கள் ஆண்களுக்கு உரிமையுடன் வாழ முடியவில்லை. வீட்டில் கொத்தடிமையாகவே நடத்தப்படுகிறார்கள். கூலியின்றி வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களின் இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வேதனைக்குரியது.

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை, வரதட்சணை மற்றும் ஏழ்மையை கருத்தில் கொண்டு இளம் பெண்கள் வயது முதிர்ந்த பல ஆண்களுக்கு மனைவியாகவும் மற்றும் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கையை நடத்தும் கொடுமைகள் உருவாகின்றன. வரதட்சணை கொடுமை சமுதாயத்தில் பெரும் ஆலமரவேர் போல பரவி பல்வேறுபட்ட தீமைகளுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் சமுதாயமே இக்கொடுமைகளை போக்க வேண்டும்.

    'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றும், 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்றும் பெண்ணாகிய தாயை போற்றும் சமுதாயம் ஒரு விஷமுடைய காயையும் விட கேவலமாக பெண்களை நடத்துகின்றது. இது மாற்றமடைய வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஆண்கள், பெண்களை மதிக்கவும், ஒரு நல்ல தோழனாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு துயரம் கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல ஆண்மகனின் அடையாளம் பெண்மையை கலங்காது இறுதிவரை பாதுகாப்பதே.

    வரதட்சணை கொடுமையை அகற்றுவோம்!

    பெண்களை மதிப்போம்!

    சமுதாயத்தை உயர்த்துவோம்!

    Next Story
    ×