என் மலர்
நாகப்பட்டினம்
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தார்.
- கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான அனைத்து த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர், புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் இந்த முதல் ஆய்வுக் கூட்டத்தில் நாகை சட்டமன்ற தொகுதியின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை கவனப்படுத்துகிறேன்.
நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதுபோல் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைகள் நிறைய உள்ளன.
குறிப்பாக, திருமருகல் தனி தாலுகா, நாகையில் அரசு சட்டக் கல்லூரி, காடம்பாடி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல்,
நாகூர் சில்லடி கடற்க ரையை மேம்படுத்துவது, நாகூர் பேருந்து நிலையம் சீரமைப்பது, நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம் கட்டடத்தில் அருங்காட்சியம் அமைப்பது, பாரதி மார்கெட் புதிய கட்டடம், நாகை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, ஏனங்குடி விளையாட்டு மைதானம் மேம்படுத்துவது, திட்டச்சேரி பேரூராட்சிக்கு சிறப்பு திட்டங்கள், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, நாகையில் பீச் வாலிபால் அகாடமி, அழிஞ்சமங்கலம் ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு, நாகூர் சில்லடி மற்றும் நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம், நாகை நகராட்சி பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு, நாகையில் மறைமலை அடிகள் நினைவு கலையரங்கம், நாகை செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உட்கட்டமைப்பு மேம்பாடு, நாகூர் திட்டச்சேரி திருமருகல் நூலகங்களுக்கு புதிய கட்டடம் ஆகிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
- மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
- தனது உறவினரின் வீட்டில் தங்கி இருந்து திருட்டு தொழிலில் ஈடுப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, உணவகம், கறி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திட்டச்சேரி கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளி யம்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 38) என்பதும், இவர் துண்டம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி கொண்டு திட்டசேரி கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தார்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை தவறவிட்டார்
- காவலாளி அதை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்காவிற்க்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த வர்கள் வந்து தொழுகை செய்து வருகின்றனர். இதனால் நாகூர் தர்கா எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் வேலுர் மாவட்டத்தை சேர்ந்த நாகூர் ஆண்டகையின் பக்தர்களுள் ஒருவரான ஜனாப் கரீம் பாசா தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார்.
பின்னர் தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை
தவற விட்டுவிட்டார்.
அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரண்ஸ் தவறவிட்ட தொலைப்பே சியை கண்டெடுத்து அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளி களான ஷாகுல் மற்றும் அய்யப்பன் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து செல்போனை தவற விட்ட ஜனாப் கரீம் பாசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக் தாவுத் முன்னிலையில் அவரிடம் செல்போன் ஒப்படைக்க ப்பட்டது.
சுமார் காலை 7 மணிக்கு தர்காவில் கண்டெடுக்க ப்பட்ட மொபைல் போன் இரவு 10 மணியளவில் உரிய நபரிடம் அன்னாரின் பொருளை பெற்று கொண்ட மைக்கான ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனாப் கரீம் பாசா செல்போனை கண்டு பிடித்து கொடுத்த காவலாளிகளுக்கும் நாகூர் தர்கா நிர்வாகத்தி னருக்கும் நன்றி தெரிவித்தார்.
- 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.
- 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் பொதுப்ப ணித்துறை வென்னாற்று பிரிவு அலுவ லகத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
வேதா ரண்யம் தாலுக்கா தலை ஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறுவெண் மணச்சேரி வடபாதி வடிகால் பொன்னேரி வாய்க்கால் மேட்டுப்பள்ள வாய்க்கால் ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்ப டுகின்றன.
இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்ப ணித்துறை பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தையும் பெற்று விளங்குகிறது.
இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மே மாதம் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு அருகே உள்ள தேரில் உள்ள மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் கிரீடத்தை வைத்து முடி சூட்டினார்.
பின்னர் தேரை புனிதம்செய்து பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.
- புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
- ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சா ராயம் காய்ச்சுபவர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை விற்பனை செய்வதை தடுப்பது குறித்த கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:-
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுப்பது, அனுமதி பெற்ற பார்களை தவிர பிற பார்களில் மதுபானங்கள் விற்பது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பது போன்றவை தெரியவந்தால் 94981 81257 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும், புகாரில் உண்மை தன்மை இருப்பின் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
- ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்அருகே வீட்டு தோட்டத்தில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பவரது வீட்டின் தோட்டத்தில்
கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்து நாகூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராகுலின் அண்ணன் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 108 திவ்யதேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது
- அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ண புரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்ப டுகிறது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுவழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை யொட்டி, வருகிற 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
- தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-
குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- அம்பாளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் சிம்ம, கிளி, அன்னபச்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்பு, புலி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
தொடர்ந்து, கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியை கருப்பங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்.