search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க தயார் நிலையில் 195 நீச்சல் வீரர்கள் கலெக்டர் முரளிதரன் தகவல்
    X

    பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலெக்டர் முரளிதரன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

    பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க தயார் நிலையில் 195 நீச்சல் வீரர்கள் கலெக்டர் முரளிதரன் தகவல்

    • தேனி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பொது மக்களை மீட்க 195 நீச்சல் வீரர்களின் பட்டியல், தொலைபேசி எண்கள், 2 நாரிழை படகுகள் மற்றும் 115 பரிசல்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதையும், வீரபாண்டி பேரூராட்சியில் அம்மன் நகர் முதல் அன்னதானம் மண்டபம் வரை மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதையும், வயல்பட்டி சவுடம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். திடீரென ெவள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதை பொதுமக்களுக்கு தெரிவித்து குளிக்கவோ, துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் புயல் மற்றும் கனமழையினால் சாலைகளின் மீது ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய தேவையான சாதனங்கள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, வட்ட அளவிலான கண்காணிப்பு குழு, வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை செய்யும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, பாதுகாப்பாக வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் மேலாண்மை குழு ஆகிய குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 135 கண்மாய்களில் 28 கண்மாய்கள் முழுவதுமாக 100 சதவீதம் நிறைந்துள்ளது.

    மழை காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளோரினேற்றம் செய்யப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சிய குடிநீரை பருகிட பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஆற்றங்கரைப்பகுதிகளில் தேவையான இடங்களில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்படும் போது பொது மக்களை மீட்க 195 நீச்சல் வீரர்களின் பட்டியல், தொலைபேசி எண்கள், 2 நாரிழை படகுகள் மற்றும் 115 பரிசல்கள் தயார் நிலையில் உள்ளது என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ராஜாராம், தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையர் முத்துக்குமார், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×