search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

    • புகையிலைக்கு எதிராக கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    ஆண்டுதோறும் மே 31-ந் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    உறுதிமொழி

    இன்று உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து புகையிலைக்கு எதிராக கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    விழிப்புணர்வு பேரணி

    பொதுசுகாதாரத்துறை சார்பில் பாளை லூர்துநாதன் சிலையில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை சுகாதார பணிகள் துறை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணி, தெற்கு கடைவீதி வழியாக மாநகர காவல் கட்டுப்பாட்டுஅறை அலுவலகம் வரை சென்றது. புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும் வகையிலான கருப்பொருட்களை கையில் ஏந்தியபடியும், விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணி சென்றது.

    புகையிலை ஒழிப்பு குறித்த முழக்கங்களை எழுப்பியபடி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆய்வக நுட்பனர் படிப்பு மேற்கொள்ளும் மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு துறை, நெஞ்சகநோய் துறை மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை டீன் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மனநலம்- போதை மறுவாழ்வுத்துறை தலைவர் ரமேஷ் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் புகையிலையின் கேடுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×