search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணமகளை ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்த மணமகன்
    X

    மணமகளை ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்த மணமகன்

    • மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • மணமகள் பயத்தில் மணமகனை இறுக பிடித்தபடி அமர்ந்து வந்தார்.

    செங்குன்றம் :

    செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த கோபால்-கண்ணகி தம்பதியின் மகன் விஜய் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியின் மகள் ரம்யாவுக்கும் இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் அவர்களது குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். இதற்காக மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்ட, காளைகள் இரண்டும் சாலையில் சீறிப்பாய்ந்து வந்தன. மணமகள் ரம்யா, பயத்தில் மணமகனை இறுக பிடித்தபடி அமர்ந்து வந்தார்.

    அப்போது மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் ரேக்ளா வண்டியின் இருபுறமும் புடைசூழ வந்தனர். வீட்டுக்கு வந்த மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.

    தற்போது திருமண வீட்டில் ஆடம்பரமாக கார்களில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் ரேக்ளா வண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

    Next Story
    ×