search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிரட்டி வரும் டெங்கு குழந்தைகளை கவனமாக பராமரிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தல்
    X

    ஏடிஸ் கொசு

    மிரட்டி வரும் டெங்கு குழந்தைகளை கவனமாக பராமரிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தல்

    • தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களை பெற்றோர்கள் கவனிக்கவேண்டியது அவசியம்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் தமிழகத்தில் 550க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி முதல் ஜூலை வரை தமிழகத்தில் ெடங்கு பாதிப்பு 3000-ஐ நெருங்கியுள்ளது. பருவகால காய்ச்சல்களுடன் டெங்குவும் வேகமெடுத்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

    டெங்கு காய்ச்சல் கொசுக்களிடம் இருந்தே உருவாகிறது. தற்போது பல மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்தவாரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை கொசுக்கள் டெங்கு நோய்க்கு மூலகாரணியாக உள்ளது.

    இவை தேங்கிநிற்கும் தண்ணீரில் அதிகளவு உற்பத்தியாகும். எனவே அடுத்துவரும் 2 மாதங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குளியலறை, கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

    காய்ச்சலின் முதல் அறிகுறியாக உடல்சோர்வு, மூட்டுவலி, கண்எரிச்சல், உடலில் கொப்புளங்கள் போன்ற அறிகுறி தென்படும். இந்த அறிகுறி ஏற்பட்டவுடன் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுயமருத்துவமோ, மருந்து கடைகளில் தரும் மருந்துகளை எடுக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது.

    தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களை பெற்றோர்கள் கவனிக்கவேண்டியது அவசியம். மாவட்டந்தோறும் மருத்துவமுகாம்கள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் இதுபோன்றமுகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×