search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை சாகுபடியில் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? - வேளாண் அதிகாரி விளக்கம்
    X

    குறுவை சாகுபடியில் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? - வேளாண் அதிகாரி விளக்கம்

    • நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கை மான் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 /டிபிஎஸ் 5 மற்றும் இதர ரகங்களும் குடவாசல், வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 - 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும்.

    மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

    மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

    தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

    விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும். 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

    10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×