என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசாரணைக்காக விஜயை அழைத்து வந்த போலீசார்.
திருவாரூரில், விசாரணைக்கு அழைத்து வந்த ரவுடி தற்கொலை முயற்சி
- அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 27).
இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது விஜய் திருச்சியில் திரைப்படத்துறையில் கலை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் நகர போலீசார் இன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜயை கைது செய்வதற்காக சபாபதி முதலியார் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்பொழுது வீட்டிலிருந்த விஜயை கைது செய்து திருவாரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கழிவறைக்கு செல்வதாக விஜய் கூறிவிட்டு சென்றார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எலி கேக்கை (விஷம்) எடுத்து தின்றார்.
அதனை அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த நிலையில் எலி கேக்கை தின்றவுடன் வெளியில் வந்து போலீசாரிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. தற்பொழுது வேலை பார்த்து வருகிறேன்.
ஏன் என் மீது வழக்கு போடுகிறீர்கள். அதனால் நான் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் விஜயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.