search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை-  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
    X

    ஜே.பி.நட்டா

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை- பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

    • விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று அவர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை பாஜக நிர்வாகிகள் பூரண கும்பம், மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.

    தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறை வல்லுனர்கள், தொழில் அதிபர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

    இந்திய நாட்டை சரியான அரசு ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் அதன் வளர்ச்சியை காண முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது.இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. கொரோனாவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா காலத்தை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு முந்தைய பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பிரிவுக்காக கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

    மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டநிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ரூ.732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை மதுரைக்காக மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×