search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகராட்சியில் கவுன்சிலர்களை அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் மதிப்பதே இல்லை-தி.மு.க. கவுன்சிலர் ஆவேசம்
    X

    ஓசூர் மாநகராட்சியில் கவுன்சிலர்களை அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் மதிப்பதே இல்லை-தி.மு.க. கவுன்சிலர் ஆவேசம்

    • ஓசூர் சிஷ்யா பள்ளி அருகே ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து தரவேண்டும்
    • கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து 2 மாதமாகிறது, குப்பைகளும் சரியாக அகற்றப்படுவதில்லை.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தை தொடங்கிவைத்து பேசிய மேயர் சத்யா, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, விரிவாக பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    துணை மேயர் ஆனந்தய்யா (தி.மு.க):- எனது 7-வது வார்டுக்குப்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேறி அருகிலுள்ள ஏரியில் கலக்கிறது.

    இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். இதேபோல் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்தும், பழுதடைந்த சாலைகளை சீர்செய்யவும் மேயர் மற்றும் ஆணையாளர் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

    சீனிவாஸ் (8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்)

    மாநகராட்சியில், கவுன்சிலர்களுக்கு மரியாதையே இல்லை. அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் மதிப்பதே இல்லை.எனது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தி தருமாறு கடந்த 6 மாதமாக கேட்டு வருகிறேன். யாரும் கண்டு கொள்வதேயில்லை.

    எனது வார்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து 2 மாதமாகிறது, குப்பைகளும் சரியாக அகற்றப்படுவதில்லை.

    இப்படி அடிப்படை வசதிகள் எதையும் பூர்த்தி செய்யாமல் இருந்தால், ஆட்சிக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும்? என்று ஆவேசத்துடன் கொதித்தெழுந்தார்.

    வி.ஜெயப்பிரகாஷ் (அ.தி.மு.க):- எனது 42-வது வார்டு பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதை எப்போது திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் சினேகா," மாநிலம் முழுவதும் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை, முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார் என்று பதிலளித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜெயப்பிரகாஷ், பொதுமக்களின் நலனுக்காக, ஓசூர் சிஷ்யா பள்ளி அருகே ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில், அசோகா, மஞ்சுநாத், புருஷோத்தம ரெட்டி, குபேரன் என்ற சங்கர், சிவராம், முருகம்மாள் மதன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், மற்றும் மாதேஸ்வரன், சென்னீரப்பா, நாகராஜ், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இந்திராணி, பா.ஜ.க. உறுப்பினர் பார்வதி நாகராஜ் ஆகியோரும் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினர். கூட்டத்தில், 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×