search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சமவெளியில் செழிக்கும் ஜாதிக்காய்!- தெரிந்துகொள்ள காவேரி கூக்குரல் கருத்தரங்கு வாருங்கள்…
    X

    சமவெளியில் செழிக்கும் ஜாதிக்காய்!- தெரிந்துகொள்ள 'காவேரி கூக்குரல்' கருத்தரங்கு வாருங்கள்…

    • பல விவசாயிகள் வெற்றிகரமாக தங்கள் நிலத்தில் விளைவித்து நிருபித்துள்ளனர்.
    • ஜாதிக்காய் பயிருக்கு பெருமளவு நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை.

    விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் பயிர்களில் மரவாசனைப் பயிர்கள் முக்கியமானவை. ஆனால் மர வாசனைப் பயிர்கள் சமவெளியில் வளருமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதனாலேயே அந்தப் பயிரை தேர்வு செய்வதில் விவசாயிகள் பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் உண்மை நிலையே வேறு. மிளகு, ஜாதிக்காய், இலவங்கப் பட்டை போன்ற வாசனை பயிர்கள் சமவெளியிலும் சாத்தியம் தான். இதனை பல விவசாயிகள் வெற்றிகரமாக தங்கள் நிலத்தில் விளைவித்து நிருபித்துள்ளனர்.

    அந்த வகையில் சமவெளியில் ஜாதிக்காய் விளைவித்து வெற்றிகரமாக வருவாய் ஈட்டி வருகிறார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தக்ஷிணா மூர்த்தி. கோபி செட்டிபாளையம் அந்தியூர் பகுதியில் 5 ஏக்கரில் விரிந்திருக்கிறது இவரின் இயற்கை பண்ணை. பாக்கு மரங்களின் நடுவே ஜாதிக்காயை ஊடுபயிராக செய்து வருகிறார்.

    ஜாதிக்காயை எப்படி துணிந்து தேர்வு செய்தீர்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து சொல்லுங்கள் என கேட்ட போது, உறுதியான குரலில் பேசத் தொடங்கினார்,


    "என் பண்ணை பாக்கு தான் பிரதான பயிர். பாக்கு மரம் 30 – 40 ஆண்டுகள் வரை இருக்கும் நீண்ட கால பயிர். அதை போலவே ஜாதிக்காயும் 100 வருடம் வரை இருக்கக்கூடிய உறுதியான மரம். மேலும் இந்த மரத்திற்க்கான பராமரிப்பு குறைவு ஆனால் வருவாய் அதிகம் என்பதால் இந்த பயிரை ஊடுபயிராக தேர்வு செய்தேன்.

    எங்கள் தோட்டத்தில் 200 ஜாதிக்காய் மரங்கள் இப்போது இருக்கின்றன. இவை காப்புக்கு வர 4 வருடங்கள் வரை ஆகும். ஜாதிக்காய் 15 அடி வளரும் வரை அதை ஒரு குழந்தை போல் பராமரித்தால் போதுமானது. உதாரணமாக 800 பாக்கு மரங்களுக்கு பயன்படுத்தும் தண்ணீர், 200 ஜாதிக்காய் மரங்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஆண்டுகள் கூடக் கூட நமக்கு காய்ப்பு அதிகம் கிடைக்கும். மேலும் இதோடு மிளகும் வளர்த்து வருகிறேன்.

    அது மட்டுமின்றி ஜாதிக்காய் பயிருக்கு பெருமளவு நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. வெகு அரிதாக வேர் கரையான் மூலம் ஒரு சில மரங்கள் பாதிக்கப்பட்டன. வேப்பம் புண்ணாக்கை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் அதுவும் கூட வருவதில்லை. மேலும் ஜாதிக்காயின் கொட்டை, தோல், பத்ரி என அனைத்து பாகங்களுக்கும் தற்போது தேவை இருக்கிறது.

    ஜாதிக்காயிலிருந்து ஊறுகாய் போன்ற மதிப்புகூட்டல் பொருட்கள் செய்ய முடியும். அதோடு ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். மேலும் அதன் ஒரு கிலோ ரூ.1,500/- முதல் ரூ.2,000/- வரை விற்பனை ஆகிறது. அடுத்து ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300/- முதல் ரூ.400/- வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது.


    மரம் வைத்த பத்தாண்டுகளுக்கு பின் ஒரு மரத்தில் இருந்து 500 காய்கள் முதல் 1,000 காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும். ஜாதிக்காய் தரும் வருவாயை பார்த்த பின்பாக எனக்கிருக்கும் மற்றொரு 3 ஏக்கர் நிலத்தில் மீண்டும் 200 ஜாதிக்காய் செடிகளை வைத்துள்ளேன்.

    மொத்தத்தில் ஒரு அடுக்கு முறையில் விவசாயம் செய்யாமல் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்கிற போது, குறைவான சூரியவொளியின் மூலம் வாசனைப் பயிர்களை நல்ல முறையில் வளர்க்க முடிகிறது. குறைந்தது 21 அடிக்கு மேலான இடைவெளியில் அவைகளை நட்டு வளர்த்தால் நிச்சயமாக நல்ல வருவாய் ஈட்டலாம். பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வதன் மூலம் 3 மடங்கு அதிக லாபம் கிடைப்பதோடு மண் வளம், சுற்றுச்சுழல் மேம்படுதல், குளுமையான சூழல், மண் புழு அதிகரித்தல் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை பெற முடிகிறது.

    எனவே சமவெளியில் மரப்பயிர்களை துணிந்து நடுங்கள், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதற்கு என் நிலமே சாட்சி" எனக் கூறினார்.

    இவரைப் போல இன்னும் பல வெற்றி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் நடைபெறும் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் பகிர உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பல முன்னோடி வெற்றி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    Next Story
    ×