search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு
    X

    தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்ளனர்.

    வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

    • தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற வேண்டும்.
    • இந்த ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். தேவர் ஜெயந்தி விழாவையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது அமலில் உள்ள 144 தடை உத்தரவின்படி தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, டாடா ஏ.சி.இ. போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    சொந்த 4 சக்கர வாகன ங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு முன்அனுமதி பெறும்பொழுது வாகனத்தின் உரிமம் மற்றும் வாகன ஒட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கவேண்டும்.

    சொந்த வாகனங்களில் வருவோர் வாகனத்தின் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண் அதன் ஓட்டுநர் போன்ற விபரங்களை உள்ளுர் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அங்கு தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். ஒவ்வொரு காவல் மண்டலத்திற்கும் தனித்தனி வண்ணத்தில் அனுமதிச் சீட்டு அச்சடித்து அனுப்பி வைக்கப்படும்.

    வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளைத்தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன உரிமையாளர் தணிக்கையின் போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும்.

    பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது. தலைவர்களுடன் செல்லும்பொழுது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

    தலைவர்களது வாகனம் மற்றும் அதனுடன் செல்லும் 2 வாகனங்கள் பற்றிய விபரத்தினை நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே (23.10.2022 தேதிக்கு முன்னதாகவே) மாவட்ட காவல் அலுவலகத்தில் தெரிவித்து வாகன அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும்.

    பசும்பொன் செல்ல கூடுதல் பஸ் தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன்னதாகவே மனு அளித்திட வேண்டும். அரசு பஸ்களில் ஜோதி, மதுபாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது, கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. ஜோதி தொடர்பான உபகரணங்கள் பஸ்களில் எடுத்து செல்லக் கூடாது. பஸ்களில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்களில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வர வேண்டும். மீறுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் நேரம் ஒதுக்கி தர விண்ணப்பத்தினை அளிக்கவேண்டும். ஓவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், அருண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×