search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாதி கொலையில் ரெயில்வே நிர்வாகம் அலட்சியம்: ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    X

    சுவாதி கொலையில் ரெயில்வே நிர்வாகம் அலட்சியம்: ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

    • 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை :

    சென்னை நுங்கம்பாக்கம், ரெயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இவரது பெற்றோர் சந்தானகோபாலகிருஷ்ணன், ரெங்கநாயகி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் மகள் சுவாதி, பரனூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தார். தினமும் நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு ரெயிலில் சென்று வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி காலையில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது, அவர் கொலை செய்யப்பட்டார்

    இந்த கொலை சம்பவம் தொடர்பான விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், சுவாதிக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அந்த ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. டிக்கெட் பரிசோதகரும் இல்லை.

    அதனால் 24 வயதே ஆன மகளை இழந்த எங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிழக்கு ரெயில்வே ஊழியரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இதேபோல, விபத்தில் பலியானவர், சிறையில் கொலை செய்யப்பட்டவர் என்று பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த ஐகோர்ட்டு வட்டியுடன் இழப்பீடு வழங்கவேண்டும் என்று பல தீர்ப்புகளை அளித்துள்ளது.

    இதன்படி, என் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் ஒரு காரணம் என்பதால், எங்களுக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதியின் கொலை திட்டமிட்டு நடந்தது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கேட்டு உரிய நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×