search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை: நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது
    X

    நகை கொள்ளை: நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது

    • உரிமையாளர் செந்தில் குமாரிடம் உண்மையை மறைக்க கொள்ளை நாடகம் ஆடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
    • நகை, பணத்தை ஆள் வைத்து திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகம் ஆடிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    தேனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அங்கு சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்பனைசெய்யும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்காக 87 பவுன் மதிப்புள்ள நகைகளுடன் நேற்று முன்தினம் காரில் மதுரை வந்தார். அவருடன் நகைக்கடை மேலாளர் சாய்பு, கார் டிரைவர் ராஜகோபால் ஆகியோரும் வந்தனர்‌.

    மதுரை அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் செந்தில்குமார் மற்றும் மேலாளர் சாய்பு டிரைவர் ராஜகோபால் ஆகியோர் காலை உணவு சாப்பிட்டனர்.

    பின்னர் வந்து பார்த்தபோது கார் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்தன. காரில் வைத்திருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் அளித்தார். அப்போது மேலாளர் சாய்பும் போலீசாரிடம் நகை-பணம் கொள்ளை போனதாக தெரிவித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரித்தனர். விசாரணையில் நகைக்கடை மேலாளர் சாய்பு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது சி.சி.டி.வி. பதிவுகளையும் காட்டி விசாரித்தனர். அப்போது அவர் ஊழியர் வினோத்குமார், முன்னாள் ஊழியர் சுப்பராஜா மற்றும் மருதுபாண்டி ,இளையராஜா ஆகியோருடன் சேர்ந்து நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    உரிமையாளர் செந்தில் குமாரிடம் உண்மையை மறைக்க கொள்ளை நாடகம் ஆடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.திருடப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் நகை கடை மேலாளர் சாய்பு மற்றும் ஊழியர் வினோத்குமார் சுப்ப ராஜா, மருதுபாண்டி, இளையராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணத்தையும் மீட்டனர். கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.நகை, பணத்தை ஆள் வைத்து திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகம் ஆடிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×