search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து சிறுவன் பலி
    X

    பாவூர்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து சிறுவன் பலி

    • பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது.
    • பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தென்காசி:

    வருகிற 5-ந்தேதி தைப்பூசத்தையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் முருக பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லத் தொடங்கி உள்ளனர்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நேற்று மாலையில் தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே நேற்றிரவு சுமார் 10.45 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

    இதில் பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன்(வயது 16) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா(18) ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் தலையில் பலத்த ரத்தக்காயம் அடைந்த குணசேகரன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சூர்யாவிற்கு தலையில் காயமும், கால் முறிவும் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் இரவு நேரத்தில் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி விவேகானந்தர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (24)என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×