search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிடக்கோரி தீர்மானம்- அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம்
    X

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிடக்கோரி தீர்மானம்- அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம்

    • மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஏகனாபுரம் கிராமமக்கள் இன்று 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஏகனாபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கோபி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் விமான நிலையம் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த கிராம மக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அந்த தீர்மானத்தில், "ஏகனாபுரம் ஊராட்சியில் வர இருக்கின்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பது எங்கள் கிராமத்தின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் எங்கள் கிராமத்தில் குயிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு எங்களை அப்புறப்படுத்துகின்ற இந்த பசுமை விமான நிலைய திட்டத்தை இந்த கிராம சபை கூட்டத்தின் மூலமாக எங்கள் கிராம பகுதிக்கு முழுமையாக வேண்டாம் என்று ஏகமனதாக எதிர்க்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றினர். மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

    Next Story
    ×