search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை: ஆவணம்-புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்
    X

    சிவகங்கை கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை: ஆவணம்-புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்

    • முதலில் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்த விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருக்கிறார்.
    • சிவகங்கையில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டி வந்துள்ளார்.

    சிவகங்கை:

    தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிவகங்கையில் கார் டிரைவர் ஒருவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சிவகங்கையை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் (வயது27). கார் டிரைவரான இவர் மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    வாலிபர் விக்னேஷ் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். விடுதலை புலிகள் ஆதரவாளரான அவர் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றதாகவும், அந்த அமைப்பினருக்கு பேட்டரி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விக்னேசின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் இன்று அதிகாலை சிவகங்கைக்கு வந்தனர்.

    அவர்கள் அதிகாலை 5 மணியளவில் விக்னேசின் வீட்டிற்கு அதிரடியாக சென்றனர். அப்போது அங்கு விக்னேஷ் இல்லை. அவரது தாய் மட்டுமே வீட்டில் இருந்தார். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விக்னேசின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    விடுதலைபுலிகள் இயக்கத்தில் விக்னேஷ் பயிற்சி பெற்றது மற்றும் மின்சாதன பொருட்களை சப்ளை செய்தது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களது சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை காலை 8 மணிக்கு முடிந்தது. 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் விக்னேசின் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர் விசாரணைக்காக அவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    முதலில் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்த விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருக்கிறார். பின்பு இங்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டி வந்துள்ளார்.

    அவர் சில காரணங்களுக்காக விக்னேசை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விக்னேஷ் மீண்டும் சென்னைக்கு சென்று விட்டார். தற்போது அங்கு தான் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தான் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×