search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக சிறுமிகளை தத்தெடுத்து பாலியல் தொல்லை- திருச்சி காப்பக உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
    X

    சட்டவிரோதமாக சிறுமிகளை தத்தெடுத்து பாலியல் தொல்லை- திருச்சி காப்பக உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

    • வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
    • குற்றவாளியை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் பகுதியில் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை டி.கே.எஸ்.செந்தில்குமார் ( வயது 56) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த காப்பகத்தில் சட்ட விரோதமாக சிறுமிகளை தத்தெடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நலக்குழு அதிகாரி மோகன் மற்றும் குழுவினர் கடந்த 29 ம் தேதி காப்பகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 16 வயது 15 வயது மற்றும் 7 வயது கொண்ட 3 சிறுமிகள் அந்த காப்பகத்தில் இருந்தனர்.

    இவர்கள் மூன்று பேரையும் தத்தெடுத்ததற்கான சான்றிதழ் எதுவும் காப்பகத்தில் இல்லை. அதைத்தொடர்ந்து குழந்தைகள் நல குழுவினர் அந்த மூன்று சிறுமிகளையும் மீட்டனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிகளில் 16 வயது சிறுமிக்கு காப்பகத்தின் உரிமையாளர் பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார் செந்தில்குமார் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவரது சகோதரியான 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து அந்த காப்பகத்தில் இருந்து உள்ளார். 7 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதில் காப்பக உரிமையாளர் செந்தில் குமார் 16 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். சிறுமிகளை சட்டவிரோதமாக தத்தெடுத்து அதில் ஒரு சிறுமிக்கு காப்பக உரிமையாளர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×