search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொந்த ஊர் சென்றவர்கள் ஒரே நேரத்தில் திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
    X

    சொந்த ஊர் சென்றவர்கள் ஒரே நேரத்தில் திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

    • செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்றுமுன்தினம் ஆயுத பூஜை, நேற்று விஜய தசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

    தொடர் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந்தேதி முதலே தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.

    அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று மாலை முதலே சென்னை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் திரும்ப தொடங்கினர். இதனால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் இன்று காலை அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் 2-வது நாளாக பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அதிகாலையில் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றன. காலை 8 மணிவரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.

    சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியிலும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. போலீசார் வாகன நெரிசலை சரிசெய்து அனுப்பினர். அதிகாலையில் மழை பெய்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை முதல் பயணிகள் அதிக அளவில் அரசு பஸ் மூலம் சென்னை திரும்பி வந்தனர். இதன் காரணமாக அசோக் நகர், வடபழனி நூறடி சாலை சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலைய சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீரமைக்கும் பணியில் 5 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் 20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக பெய்து வரும் மழையால் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    மேலும் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் கார்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் பயணிகள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×