search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூரில் பட்டபகலில் வாலிபர் சரமாரி குத்திக் கொலை- 3 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    வானூரில் பட்டபகலில் வாலிபர் சரமாரி குத்திக் கொலை- 3 பேர் கும்பல் வெறிச்செயல்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமல் வழக்கம்போல் இன்று காலை ஓட்டலுக்கு வேலை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது விமலின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது பின்னால் வந்த அந்த கும்பல் விமல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை தாக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர். விமலுக்கு கழுத்து, தலை உள்ளிட்ட 10 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. வாலிபரை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது விமலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 3 வாலிபர்களில் 2 பேர் வானூர் அருகே மாத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக கூறினர்.

    பொதுமக்கள் கூறிய வழியில் போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விமல் மீது ஏற்கனவேகொலை வழக்கு உள்ளது. இதற்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான முழுவிபரம் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர்களை பிடித்தால் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் வாலிபரை சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×