search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட வாலிபர் பலி
    X

    கர்ப்பிணிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

    • விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்த நிலையில் இவருக்கு 5-ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

    இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.

    திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடியைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அலுவலக ஒப்பந்த தொழிலாளி செல்வமுருகன் (வயது 24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22), கர்ப்பிணி மாரியம்மாள், யஷ்வந்த் (4), ராஜமாணிக்கம் (60) ஆகிய 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சந்துரு உள்பட 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சுகாதார துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற திருவாசலில் முகாமிட்டு உணவு சாப்பிட்டவர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பரிமாறப்பாட்ட உணவின் தரம் குறித்து சோதனை செய்தனர்.

    இது குறித்த புகாரின் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் , நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட 5 வகை சாதங்கள் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் தாய் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது.

    விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலிலும், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாழ வாய்க்காலில் உள்ள ஒரு ஓட்டலிலும் வாங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×