search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் தசரா திருவிழா- 12 சப்பரங்கள் அணிவகுக்க சூரனை வதம் செய்த ஆயிரத்தம்மன்- திரளான பக்தர்கள் தரிசனம்

    • திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக பாளையில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    12 அம்மன் கோவில்கள்

    இந்த ஆண்டு திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது.

    ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், யாதவர், விஸ்வகர்மா, கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    சப்பர பவனி

    விஜயதசமியையொட்டி 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது. 12 அம்மன் சப்பரங்களும் பல்வேறு தெருக்களில் வலம் வந்து பெருமாள், சிவன் உள்ளிட்ட 8 ரத வீதிகளிலும் காட்சி கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 12 அம்மன் சப்பரங்களும் பாளை ராமசாமி கோவில் திடலுக்கு வந்தது. பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு ராஜகோபால சுவாமி கோவில் திடலை அடைந்தது. தொடர்ந்து சிவன் கோவில் பகுதியில் சென்று மாலையில் மார்க்கெட் எருமை கிடா மைதானத்தில் 12 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன.

    சூரசம்ஹாரம்

    இன்று அதிகாலை வரை ஒவ்வொரு சப்பரங்களாக அணிவகுக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து 3 மணிக்கு மாரியம்மன் கோவிலின் எதிரில் 12 சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை சூரசம்ஹாரம் செய்தார். இதனை ஏராள மான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    சூரசம்ஹாரத்தை யொட்டி பாளை பகுதியில் மின் ஊழியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக் கையாக மின்தடை செய்தனர்.

    நெல்லை சந்திப்பு

    நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் பழமை வாய்ந்த அம்மன் கோவில்களான கண்ணம்மன் கோவில், புது அம்மன் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் விமர்சையாக சிறப்பு பூஜைகளுடன் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருள நடைபெற்றது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் அலங்காரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் ஸ்ரீ கண்ணம்மன், புது அம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தாமிரபரணி நதிக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. 3 சப்பரங்களும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி தந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தச்சநல்லூர்

    இதற்கிடையே தச்ச நல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் முன்பு இன்று 7 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று இரவு அங்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×