search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    140 என்று தொடங்கும் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் ஆபத்தா?
    X

    140 என்று தொடங்கும் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் ஆபத்தா?

    • பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
    • பொதுமக்கள் தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது என அறிவுறுத்தல்

    சென்னை:

    மும்பை போலீசார் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காதீர்கள், அப்படி எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும், எச்சரிக்கையாக இருங்கள், என்று போலீசார் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் போலீசார் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் இது பற்றி ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுகிறார்கள். இதேபோல் மகாராஷ்டிர காவல்துறை கூறியதாக வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு எச்சரிக்கை தகவல் பரப்பப்பட்டது.

    ஒரு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் செய்த வித்தியாசமான விளம்பரப் பிரச்சாரத்தால்தான் இந்த பிரச்சனை ஆரம்பித்து, மும்பைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 140ல் தொடங்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், ஒரு கொலையை நேரில் பார்த்ததாகவும், அந்த கொலையை தனது போனில் படம் பிடித்ததாகவும், கொலையாளிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் கூறி உள்ளார். மறுமுனையில் அவரது உரையாடலை கேட்ட நபர் அதிர்ச்சியில் உறைய, 'இது புதிய நிகழ்ச்சிக்கான விளம்பர அழைப்பு' என்று கூறியிருக்கிறார்கள். இதுபோன்று பலரை தொடர்புகொண்டு பேசி உள்ளனர்.

    அந்த நபர் பேசியதை பதிவு செய்து காவல்துறையின் டுவிட்டர் மற்றும் ஹெல்ப்லைனில் பலரும் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே 140ல் தொடங்கும் எண்களில் இருந்து வந்தால் யாரும் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.

    இந்த தகவல் வேகமாக பரவ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைதானா? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

    இதுபற்றி, மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி விளக்கம் அளித்தார். ரோந்து காவல்துறையின் மொபைல் வேன்கள் தவறான எச்சரிக்கையை வெளியிட்டதாகவும், 140ல் தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எண்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

    மேலும், ஒருவர் தனது வங்கிக் கணக்கு விவரங்கள், OTP அல்லது கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு எண்ணை கொடுக்காத வரையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சைபர் போலீஸ் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

    எனவே, 140 என்று தொடங்கும் செல்போன் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் என்ற கூற்று உண்மையில்லை என்பது தெளிவாகிறது. இருப்பிலும் இந்த தகவல் மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொலைபேசியில் பேசும் மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்டறிந்து மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய நம்பர் ஆகியவற்றை வாங்கி மோசடியில் ஈடுபடுகிறது.

    மும்பையில் 140 என்று தொடங்கும் போன் நம்பரை எடுத்ததும் வங்கி பணம் மோசடி செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது.

    சென்னையில் இது போன்ற மோசடி இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×