search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    அது அவர் இல்லை... ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி பெயரில் வைரலாகும் புகைப்படம்
    X

    நிப்பான் நியூஸ் வெளியிட்ட புகைப்படம்

    அது அவர் இல்லை... ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி பெயரில் வைரலாகும் புகைப்படம்

    • ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி தலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டிருந்தார்.
    • இந்த புகைப்படத்தை மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர்.

    ஜப்பான் மின்சாரத்துறை மந்திரியின் புகைப்படம் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதற்காக பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்துறை மந்திரி 20 நிமிடங்கள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது 2015ல் வெளியான புகைப்படம் என்பதும், அதில் தலைகுனிந்து நிற்பவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி இல்லை என்பதும் தெரியவந்தது. புகைப்பட ஏஜென்சியான நிப்பான் நியூஸ் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, படவிளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, புகைப்படத்தில் இருப்பவர் ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டகாஹிரோ ஹசிகோ ஆவார். அவர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் முன்னிலையில் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி என்ற கூற்று உண்மையல்ல என்று தெளிவாகிறது.

    இந்த புகைப்படத்தை ஜப்பான் மந்திரியுடன் தொடர்புபடுத்தி மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர். கடந்த மே மாதம் 6ம் தேதியில் இருந்து மீண்டும் இப்படம் வைரலானது. அதில், 'நீங்கள் மியான்மரில் மந்திரியாக இருந்தால் எப்போதும் குனிந்து ஒரு கட்டத்தில் விழுந்து இறந்துவிடுவீர்கள்' என்று தங்கள் கருத்தையும் பதிவிட்டு வைரலாக்கினர். பலமுறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

    தற்போது தமிழகத்தை தொடர்புபடுத்தி, வாசகத்தை மாற்றி இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சில இடங்களில் செடி வளர்ந்து மின்கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும், அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அவர் சொன்னதை வைத்து கேலி செய்யும் வகையில் இந்த புகைப்படத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

    Next Story
    ×