search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துரோகி என்ற முத்திரை எப்போதும் நிலைத்திருக்கும்: ஷிண்டே மீது உத்தவ் தாக்கரே தாக்கு
    X

    துரோகி என்ற முத்திரை எப்போதும் நிலைத்திருக்கும்: ஷிண்டே மீது உத்தவ் தாக்கரே தாக்கு

    • அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது.
    • உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் விலகலால் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைதொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் கைகோர்த்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு சிவசேனா 2-ஆக பிளவுபட்டுள்ளது.

    இந்த பெரும் அரசியல் மாற்றத்திற்கு பிறகு இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டேவை கடுமையாக சாடினார். துரோகிகள் என்று அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஒருபோதும் மாறாது. காலத்தால் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    காலம் மாறும்போது ராவணனின் முகமும் மாறுகிறது. இன்று ராவணனின் உருவம் துரோகிகள் தான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சமயத்தில் கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் எனக்கு எதிராக சதி செய்தார். இனி ஒருபோதும் அவரை எங்களின் காலின் நிழலில் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.

    அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது. துரோக செயலுக்கு பின்னர் அவர் இப்போது கட்சி பெயரையும், அதன் சின்னத்தையும் விரும்புகிறார். மேலும் கட்சி தலைவர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்த பா.ஜனதாவின் வாக்குறுதி மீறப்பட்ட காரணத்தால் தான் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க நான் பாரம்பரிய எதிரிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கினேன்.

    பா.ஜனதா கட்சி எங்களுக்கு இந்துத்வா குறித்து பாடம் நடத்த தேவையில்லை.

    பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவரது பிறந்தநாளில் அழைப்பிதழ் இன்றி சென்று சந்தித்தது மட்டும் இன்றி பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் கல்லறைக்கு முன்னால் வணங்கி நின்றனர்.

    வறுமை வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்துத்வா பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது.

    இன்று என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும். நான் மீண்டும் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன். அதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் துரோகிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×