search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவசர சட்டத்தை தடுக்காமல் இருந்திருந்தால் பதவி பறிப்பில் இருந்து ராகுல் தப்பி இருப்பார்
    X

    அவசர சட்டத்தை தடுக்காமல் இருந்திருந்தால் பதவி பறிப்பில் இருந்து ராகுல் தப்பி இருப்பார்

    • அவசரச் சட்டத்துக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்
    • அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்துக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கும் வகையில், கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி அதை திரும்ப பெறச் செய்தார்.

    அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அந்த அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ராகுல் அவசரச் சட்ட நகலை கிழித்து எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

    அவர் அன்று எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் இன்று பதவி பறிப்பில் இருந்து தப்பித்து இருப்பார். அந்த அவசர சட்டத்தை நீர்த்துப் போக செய்ததால், அதே சட்டம் இன்று எந்த அவகாசமும், இல்லாமல் உடனடியாக அவரை தகுதி நீக்கத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

    சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்துக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4)-வது பிரிவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ல் அதிரடியாக ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை செல்லாத தாக்கும் வகையில், அப்போதைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

    இந்த அவசரச் சட்டத்துக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது அவசரச் சட்டத்தின் நகல்களை அவர் கிழித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராகுல் காந்தியின் தீவிர எதிர்ப்பால், அவசரச் சட்டத்தை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றது.

    தற்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதியின் கீழ் ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்த அவசரச் சட்டம், சட்டமாக நிறைவேறி அவருக்கு தற்போது கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் கிடைத்திருக்கும். மேலும் சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கும் தடை பெற்றிருக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அவசரச் சட்ட ஒப்புதலுக்காக தன்னை சந்திக்க வந்த மத்திய அமைச்சர்களிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்ததாக, பின்னாளில் அளித்த பேட்டியில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×