search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயம் ஒரு கோவில்- மன அழுத்தத்தை கையாளும் வழிகள்
    X

    இதயம் ஒரு கோவில்- மன அழுத்தத்தை கையாளும் வழிகள்

    • குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்சினைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.
    • சிலர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருப்பர். எதற்காக கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே கோபப்படுவர்.

    மன அழுத்தம்... இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்சினை. உடலை விட மன ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம்.

    குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்சினைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் மன அழுத்தம் இருக்க வாய்ப்பு அதிகம். ஏன், அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்போதும், வழக்கத்திற்கு மாறாக ஒரு செயலை செய்யும் போதும் கூட மன அழுத்தம் ஏற்படலாம்.

    மன அழுத்தத்தால் ஒரே எண்ணம் மீண்டும் மூளையில் தோன்றி, தூங்கவிடாமல் செய்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட ஹார்மோன்களை அதிகம் சுரக்க செய்யும். இதனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    வாழ்வில் திடீரென ஏற்படும் எதிர்மறையான மாற்றம், நிர்பந்தம், முரண்பாடுகள், ஒப்பிடும் மனப்பான்மை, எதார்த்தமில்லாத இலக்குகள், உறவுமுறைகளில் விரிசல், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசைகள் மன அழுத்தத்திற்கான காரணங்களாக அமைகின்றன. மன அழுத்தத்தால் கோபம், பயம், வெறுப்பு, கவனமின்மை, கவலை, சந்தேகம் போன்றவை ஏற்படுகிறது. எனவே மன அழுத்தத்தை சரியாக கையாள வேண்டும்.

    நமது உடலில் இதயம், நுரையீரல், மூளை, வயிறு போன்ற அனைத்து உறுப்புகளும் எங்கு இருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் மனம் எங்கிருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. மனம் ஆனது உடல் முழுக்க இருக்கிறது.

    மனம் என்பது குதிரை போல ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் அலுவலகத்தை பற்றி நினைத்தால் அடுத்த நிமிடம் வீட்டில் இருக்கும் மனைவியை பற்றி நினைப்போம். நாளைக்கு எங்கே போகலாம்? என்று நினைப்போம். இப்படி எத்தனையோ நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். இவ்வாறு சஞ்சலப்படும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக தான் அந்த காலங்களிலேயே மன்னர்கள் ஊருக்கு ஊர் ஆலயங்களை கட்டி வைத்தனர். ஆலயங்களுக்கு செல்வது இறைவனை வேண்டுவதற்காக மட்டுமல்ல மனதை சாந்தப்படுத்துவதற்கும் தான். ஆலயத்தில் அமைதியாக பிரார்த்தனை செய்யும்போது நம் மனம் ஒருநிலைப்படுகிறது.

    சிலர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருப்பர். எதற்காக கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே கோபப்படுவர். ஏதாவது கேட்டால் சத்தம் போட்டு பேசுவார்கள். அடிப்பதற்கு கூட கை ஓங்கி விடுவர். இவர்களை டென்சன் பேர்வழிகள் என்று அழைப்பது உண்டு. இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் மனைவி, குழந்தைகளை அடிப்பார்கள். 2 வயது பச்சிளம் குழந்தை சொல்பேச்சு கேட்க மறுக்கிறது என கூறி அடிப்பார்கள். மதிப்பெண் குறைந்து விட்டால் குழந்தைகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்கள். இவர்களின் மன அழுத்தம் அந்த குழந்தைகளையும் தாக்கும். விளைவு அந்த குழந்தைகள் உயிரை மாய்க்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    மனம் சரியில்லை என்றால் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ, அவை அனைத்தையும் செய்வோம். சிலர் சிகரெட்டை பாக்கெட், பாக்கெட்டாக ஊதி தள்ளுவார்கள். அளவுக்கு அதிகமாக மது குடிப்பார்கள். இதனால் யாருக்கு நஷ்டம். நம் உடல் நலம் தான் பாதிக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என யாரையும் விட்டு வைக்காமல் திட்டுவார்கள். பின்னர் அவர்களே சப்பை கட்டு கட்டுவர். கோபம் வந்தால் இப்படித்தான் சத்தம் போடுவேன். பிறகு அவர்களிடம் சகஜமாக பேசி விடுவேன் என்பார்கள். இது உங்களுக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் திட்டு வாங்குபவர்கள் மனம் உடைந்து போவார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

    மன அழுத்தம் இருந்தால் சரியாக வேலை செய்ய முடியாது. வாழ்வில் வெற்றி பெற முடியாது. மன அழுத்தமின்றி பணியாற்றினால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். உங்கள் மீது பிறருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும். அவர் நல்ல மனிதருங்க, கோபப்பட மாட்டார், நிதானமாக பேசுவார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் என பிறர் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெறுவர். எப்போதும் நல்லதை மட்டும் நினைப்பவர்களுக்கு மன அழுத்தம் வராது.

    இப்போது 5 வயது குழந்தைக்கு கூட டென்சன் வருகிறது. குழந்தை டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கும் போது ரிமோட்டை வாங்கி விட்டால் டென்சனாகி விடுகிறார்கள். 6 வயது குழந்தை போர் அடிக்கிறது என்கிறான், 10 வயது சிறுவன் தாயார் தன்னை டார்ச்சர் செய்வதாக சொல்கிறான். 30 வருடத்துக்கு முன்பு வரை இப்படியெல்லாமல் குழந்தைகள் பேசி கேள்விப்பட்டு இருக்கவே மாட்டோம். இந்தநிலை மாற வேண்டுமானால் பெரியவர்கள் மன அழுத்தம் இன்றி அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இதைப் பார்த்து வருங்கால சந்ததியரும் அவர்களாகவே மாறி விடுவார்கள். மன அழுத்தம் வந்து அதற்கு தீர்வு காண்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. என்னை மனதில் வைத்து நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதை வைத்து இங்கு சில ஆலோசனை சொல்கிறேன்.

    டாக்டர் ஜி.பக்தவத்சலம்

    வெற்றி பெறுவது என்பது தேர்தலில் நின்று எம்.பி., எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பது மட்டுமல்ல. மற்றவர்கள் நம்மை பாராட்டும் படியாக நாம் நடந்து கொள்வது தான் வெற்றி. ஒரு ஆசிரியர் இருக்கிறார், அமைதியாக கற்றுக்கொடுக்கிறார், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகிறார்கள். இது தான் வெற்றி. வீட்டில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 2 குழந்தைகளையும் வளர்த்து, படிக்க வைத்து அவர்கள் நல்ல பணிக்கு சென்று நன்றாக இருக்கிறார்கள் என்றால் அதுதான் பெற்றோருக்கு வெற்றி. இதில் பணம் பெரிதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பணம் அதிகமாக சேர்ப்பது தான் வெற்றி என்று யாராவது சொன்னால் அது தவறு. பணக்காரர்கள் நிறைய பேர் மனதில் நிம்மதி இல்லாமலேயே இருக்கிறார்கள்.

    இதுபோல நமக்கு மட்டும் அமைதி கிடைத்தால் போதாது, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் அமைதி கிடைக்க வேண்டும். நீங்கள் நன்றாக இருந்து மற்றவர்கள் கஷ்டப்பட்டால் அது அமைதி கிடையாது. இன்றைக்கு இருக்கும் நாம் நாளைக்கு இருப்போமோ, இருக்க மாட்டோமா என்பது யாருக்கும் தெரியாது. எனவே இந்த குறைந்த ஆயுள் காலத்தில் மற்றவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் நாம் செய்யும் செயல்களே நிம்மதியை தரும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமாக மூன்று விஷயங்கள் தேவை. ஒன்று மகிழ்ச்சி, 2-வது பிறரை நேசிக்கும் அன்பு, 3-வது அமைதி. இதில் அமைதி மிக முக்கியம். அமைதியை நோக்கி செல்லும்போது மன அழுத்தம் வராது. பணத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் போதோ அல்லது வேறு எதாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் போதோ வழியில் நிறைய தடங்கல்கள் வரும். அப்போது மன அழுத்தம் வரும். எதையாவது எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். எதையும் எதிர்பார்த்து வேலை செய்யாதீர்கள், நீங்கள் செய்ய வேண்டிய வேலையை திருப்தியுடன் கடமையாக செய்யுங்கள், சந்தோஷமாக, பூரணமாக செய்யுங்கள். அப்படி செய்யும் செயல்கள் கண்டிப்பாக வெற்றியை தேடித்தரும். ஈடுபாடின்றி அரைகுறையாக செய்யும் பணிகள் நமக்கு கெட்ட பெயரை கொண்டு வரும்.

    மன அழுத்தம் நீங்க, தூக்கம் வருவதற்காக சிலர் மாத்திரை சாப்பிடுவார்கள். அது தற்காலிக தீர்வையே தரும். நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் தியானம் தான் சிறந்தது. வீட்டில் தாயார் அதிகாலை 4 மணிக்கே எழுந்து முழு மனதுடன் நமக்காக சமையல் செய்கிறார். அந்த சமையல் நன்றாக வருகிறது. அந்த அதிகாலை வேளையில் நாமும் எழுந்து பழகலாம். நான் எப்போதுமே அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தை அமிர்த வேளை என்பேன். அந்த சமயத்தில் எந்தவித சத்தமும் இருக்காது. வாயு மண்ட லத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும். அந்த அதிகாலை வேளையில் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யலாம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். அப்போது நமது உடலுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். கண்களை மூடி 30 நிமிடம் தியானம் செய்யும் போது மனதில் உள்ள துக்கம் எல்லாம் காணாமல் போய் விடும். அந்த சமயம் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும் நமக்கு உத்வேகத்தை அளிக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நம் மனதில் உதிக்கும்.

    காரில் உள்ள பெட்ரோல் டேங்க் காலியாக இருக்கிறது. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புகிறோம். அன்றைய பொழுது முழுவதும் காரில் பயணிக்கிறோம். அதேபோல அமைதி என்ற டேங்க் மனதில் காலியாக இருக்கிறது. அதற்காக அதிகாலையில் தியானத்தால் அந்த டேங்கை நிரம்புகிறோம். அதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் நிச்சயம் நம் மனம் அமைதியுடன் பயணிக்கும். நாம் செய்யும் செயல்கள் சிறக்கும். தியானத்துடன் சேர்த்து சிறிய உடற்பயிற்சிகளும் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். தியானம் செய்யும் முதல் 2, 3 நாட்கள் நமக்கு என்னவெல்லாமோ ஞாபகத்துக்கு வரும். பிறகு நாட்கள் செல்ல பழகி மனம் ஒருநிலைப்பட்டு விடும். தியானம், மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் நம்மை நெருங்காது. ஆஸ்துமா போன்ற பல நோய்களும் வராது.

    தூக்கமின்மையும் மன அழுத்தத்துக்கு காரணம். எனவே இரவில் வெகுநேரம் கண் விழித்து டி.வி.யோ, சினிமாவோ பார்க்க கூடாது. செல்போனை நோண்டிக்கொண்டே இருக்க கூடாது. இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்து விட வேண்டும். 10 மணிக்குள் படுத்து தூங்கி விட வேண்டும். இப்படி பழக்கத்தை ஏற்படுத்தினால் உங்களை எழுப்ப அலாரம் தேவையில்லை. அதிகாலை 4 மணிக்கு நீங்களாகவே எழுந்து வேலையை தொடங்கி விடுவீர்கள். தூங்குவதற்கு முன்பு இனிமையான இசையை கேட்கலாம். செல்போன், டி.வி.க்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தைகளுடன் பேசி மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள். நம்மைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு அதற்குள் எதையும் உள்ளே வரவிடக்கூடாது. அதாவது, அலுவலகப் பிரச்சினைகளை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது, வீட்டுப் பிரச்சினை களை வேலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இதனால் இருதரப்பிலும் இருந்து வரும் மன அழுத்தத்தை தவிர்க்கலாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் கோபப்பட கூடாது.

    உடல் உழைப்பு அதிகம் எனில் 8 முதல் 10 மணி நேரமும், உடல் உழைப்பு இல்லாத நிலையில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமும் நிம்மதியான தூக்கம் அவசியம். இதனால் உடல் புத்துணர்ச்சியாகும். மன அழுத்தம் நம்மை நெருங்கவே நெருங்காது.

    தொடர்புக்கு:

    info@kghospital.com

    Next Story
    ×