search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • ராஜாஜி நல்லபடி ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையில்தான் ராஜாஜியை காமராஜர் முதலில் ஆதரித்தார்.
    • சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காமராஜரின் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    காமராஜரின் பேச்சும், செயலும் எப்போதும் நூல் பிடித்தது போல் இருக்கும். முன்னுக்குப் பின் பேசி அவருக்குப் பழக்கமில்லை. ஆகும் என்றால் ஆகுமென்பார். இது ஆகாதென்று தெரிந்தால் ஒரே வார்த்தையில் இது ஆகா தென்று முகத்திற்கு நேராகச் சொல்லி விடுவார். அவரிடம் ஒளிவுமறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    ஆந்திர மாகாணம் தனியாகப் பிரிந்து விட்டதால் சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சி தேர்தல், புதிதாக நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. தனக்கு சாதகமாக காமராஜர் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் 1953-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் நாள் ஓர் அறிக்கையை ராஜாஜி வெளியிட்டார். ஆனால் நீங்கள் தலைவராக இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று காமராஜர் சொல்லி விட்டதால் அடுத்த நாளே (செப்.7) இன்னொரு அறிக்கையினையும் ராஜாஜி வெளியிட்டார். அதனால் குறிப்பிட்ட நாளில் கூட்டம் நடைபெறாது. அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ராஜாஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த நேரத்தில் இருந்த தகராறெல்லாம் கொண்டுவர இருந்த குலக்கல்வித் திட்டம் பற்றிய திட்டம்தான். ராஜாஜியின் தலைமை பற்றிய தகராறு அல்ல. ராஜாஜியின் சூட்சமத்தை காமராஜர் எளிதில் புரிந்து கொண்டு விட்டதால், ராஜாஜியை எதிர்த்து காமராஜர் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. காமராஜரின் நண்பர்கள் பலர் வற்புறுத்தியும் காமராஜர் அதற்கு செவி சாய்க்கவில்லை. அமைதி காத்தார். உணர்ச்சி வசப்பட்டோ, ஆத்திரப்பட்டோ, காமராஜர் இதுவரை எதையும் செய்ததில்லை. ஆந்திர மாகாணம் பிரிந்து போய் விட்டதால் ஏற்கனவே இருந்த ஒன்பது மந்திரிகளே போதும் என்று காமராஜர் சொன்ன கருத்தினை ராஜாஜி ஏற்கவில்லை.

    அரசாங்கத்தை நடத்துகிற எனக்குத்தான் அதன் தேவை என்ன வென்று தெரியும் என்று மேலிடத்தில் வற்புறுத்தி இசைவு பெற்று மேற்கொண்டு 3 மந்திரிகளை நியமித்துக்கொண்டார் ராஜாஜி. ஆக மந்திரிகளின் எண்ணிக்கை 12 ஆனது.

    பிரச்சினை அதிகமாக வேண்டாமென்று மேலிடம் நினைத்ததற்கு மாறாக இப்போது பிரச்சினை விசுவரூபம் எடுத்து ராஜாஜி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்குப் போய் விட்டது.

    ராஜாஜி கோஷ்டியினர் "நம்பிக்கை இருக்கிறது" என்று கையெழுத்து வாங்கிடச் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனது. உள்ளே என்ன நடக்கிறது என்பதையும், உண்மை நிலை என்ன என்பதையும் எடுத்துச்சொல்ல டி.ஜி.கிருஷ்ணமூர்த்தியும், பஞ்சாட்சரம் செட்டியாரும், ஏ.எம்.சம்பத்தும் டெல்லி சென்று எல்லாவற்றையும் விரிவாக நேருவிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக, "உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது, இனி மேல் இதில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி விட்டார் நேரு. எனவே மீண்டும் ஒரு நெருக்கடிக்கு உள்ளானார் ராஜாஜி.

    எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், முறைப்படி கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதே சாலச்சிறந்தது. ஆனால் அதை ராஜாஜி ஒரு போதும் செய்யவில்லை.

    குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரிடம் குலக்கல்விக் திட்டம் குறித்து எவ்வித ஆலோசனையும் ராஜாஜி நடத்தவில்லை. நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. தனக்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை உணர்ந்த ராஜாஜி, அந்த எதிர்ப்பின் வேகத்தை குறைப்பதற்காக 1954-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், நான் விலகிக்கொள்கிறேன். குலக்கல்வி திட்டத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தி என்னை அவமானப்படுத்த வேண்டாம் என்று ராஜாஜி, காமராஜரிடம் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட காமராஜரும் ஓட்டெடுப்பு வேண்டாம், கூட்டத்தை ஒத்தி வைப்போம் என்று அறிவித்தார். இதற்கு ஒரு சுமூகமான தீர்வு எப்படியாவது ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தவச்சலத்தை அழைத்து ஆலோசனை கலந்தார் ராஜாஜி.

    இந்தத் தகராறு தீர வேண்டும் என்றால் காமராஜரை நீங்கள் சந்தித்துப் பேசிட வேண்டும். காமராஜர் எந்த சிபாரிசும் யாருக்கு இதுவரை செய்ததில்லை. இதைச் செய்... அதைச் செய் என்று எந்த மந்திரியிடமும் கேட்டுக் கொண்டதில்லை. சொந்த விருப்பு வெறுப்பு என்பது அவரிடம் துளியும் இருந்ததில்லை. அவருடைய நண்பர்கள், எல்லோரும் காமராஜருடைய சொல்லுக்கு கட்டுப்படுபவர்களே. மீறிப் போபவர்கள் அல்ல. எனவே காமராஜரை சந்தித்துப் பேசுவது ஒன்றுதான் இதற்கு வழி. வேறு வழியே இதற்கில்லை என்று நறுக்கென்று சொல்லி விட்டு விடை பெற்றார் பக்தவச்சலம்.

    ராஜாஜி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது கண்டு, கருத்து எதுவும் தெரி விக்காமல், தலைவர் தேர்தலை நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. வேறு வழி இல்லாததால் ராஜாஜி 1954-ம் ஆண்டு, மார்ச் 25-ம் நாள் திடீரென சட்டசபைக்கு வந்து, "எனக்கு உடல்நிலை சரியில்லை, எனவே முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று அதிரடியாக அறிவித்தார். இப்போது பதவியில் உள்ள ஒருவரையே 2, 3 மாதங்களுக்கு முதல்-அமைச்சராக வைத்துக் கொள்வோம். பட்ஜெட் கூட்டம் முடிந்த பின்னர், கட்சித் தேர்தலை நடத்தலாம் என்று காமராஜரிடம் ராஜாஜி கேட்டுக் கொண்டார். ராஜாஜியிடம் நம்பிக்கை வைத்து காமராஜரும் இதனை ஏற்றுக் கொண்டார்.

    ஆனால் இந்த அறிவிப்பிலும் ராஜாஜி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. சி.சுப்பிரமணியம் முதல்-அமைச்சராக இருப்பார் என்று முன்மொழிந்து பேசிய ராஜாஜி, இது 2 மாதத்திற்கான இடைக்கால ஏற்பாடுதான் என்பது பற்றி எதுவுமே கூட்டத்தில் கூறவில்லை.

    காமராஜருக்கு கோபம் பொங்கியது. உடனே எழுந்த காமராஜர், பட்ஜெட் கூட்டம் வரைதான் இந்த ஏற்பாடு என்று ராஜாஜி என்னிடம் தெரிவித்ததால் தான் இதனை ஏற்றுக்கொண்டேன் என்று பகிரங்கமாகவே கூட்டத்தில் சொல்லி விட்டார்.

    காமராஜர் உண்மையைப் போட்டு உடைத்து விட்டதால் ராஜாஜி கோஷ்டியினருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அடுத்த கட்ட காயை எப்படி நகர்த்தலாம், காமராஜரை எப்படி வீழ்த்தலாம் என்பது பற்றியே தீவிரமாகச் சிந்தித்தனர்.

    இறுதியில் சி. சுப்பிரமணியம் அல்லது டாக்டர் சுப்பராயனை முதல்-அமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென முடிவு செய்து, சுப்பராயன் வராததால் சி.சுப்பிரமணியத்தை வேட்பாளராக அறிவித்தனர்.

    சட்டசபைக் காங்கிரஸ் தலைவராக காமராஜரே வர வேண்டும். இதுவே நல்ல சந்தர்ப்பம். இதை விட்டு விடக்கூடாதென்று காமராஜரிடம் எல்லோரும் சென்று வற்புறுத்தினர். ஆனால் காமராஜர் அசைந்து கொடுக்கவில்லை.

    காமராஜர் ஆரம்ப காலத்தில் இருந்தே எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுநகர் சேர்மன் பதவியில், பெயருக்கு சிறிது நேரம் அந்த நாற்காலியில் போய் அமர்ந்து விட்டு சில நிமிடங்களிலேயே ராஜினாமா செய்த வரல்லவா காமராஜர்.

    ஆனால் அப்போதிருந்த சூழ்நிலை வேறு. இப்போதுள்ள சூழ்நிலை வேறு. நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தாக வேண்டும். ஏழை மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும், இந்திய அளவில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இவற்றையெல்லாம் முன்னின்று யார் செய்வது? என்ற கேள்வி காமராஜரின் அடி மனதிலே இருந்தது.

    ராஜாஜி நல்லபடி ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையில்தான் ராஜாஜியை காமராஜர் முதலில் ஆதரித்தார். ஆனால் அவரிடம் கட்சியிடம் கலந்து பேசி, இது மக்களுக்கு நன்மை பயக்குமா? மக்கள் மத்தியில் இந்த திட்டம் எடுபடுமா? என்ற சிந்தனை துளியும் இல்லாத அளவுக்கு ராஜாஜியின் போக்கு இருந்ததாலும், வேறு தகுதியுள்ள எவரும், இப்போதுள்ள சூழ்நிலையை சமாளிப்பவராக தென்படதாததாலும் காமராஜர் போட்டியிட இறுதியில் சம்மதித்தார்.

    நண்பர்களின் வேண்டுகோளுக்கும், தலைவர்களின் வேண்டுகோளுக்கும் செவி சாய்த்து இசைவு தெரிவித்தார் காமராஜர். எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த காமராஜரின் இந்த முடிவு ராஜாஜி கோஷ்டியினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. காமராஜரே களத்தில் இறங்குகிறார் என்றால் நமக்கு வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஒருசிலர் தோல்வி நமக்கு நிச்சயம் என்றே நிர்ணயித்துக் கொண்டனர்.

    காமராஜர் பெயரை டாக்டர் வரதராஜுலு நாயுடு முன்மொழிய அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியம் பெயரை பக்தவச்சலம் முன்மொழிய யு.கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.

    ஓட்டெடுப்பு நடந்தது. காமராஜர் 93 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.சுப்பிரமணியத்திற்கு 41 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காமராஜரின் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால் காமராஜர் இந்த வெற்றியை மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்.

    கட்சிக்குள் ஒரு நெருக்கடி வரும்போது அதைச் சமாளித்து கட்சியை நிலைநிறுத்துவது, கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது, தலைவர் என்ற முறையில் காமராஜரின் கடமையாகும். அந்தப் பொறுப்பினை சரியாக நிறைவேற்றியதன் மூலம் காமராஜர் நிம்மதி அடைந்தார் என்று மட்டும் சொல்லலாம்.

    காங்கிரஸ் மேலிடத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை ஒரு வழியாக தீர்ந்ததே என்ற மன நிம்மதி ஏற்பட்டது. காமராஜரை உடனே டெல்லிக்கு வருமாறு மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட காமராஜர் டெல்லிக்கு விரைந்தார்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×