search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • டெல்லிக்குப் புறப்பட்டு வருமாறு மேலிடம் விடுத்த அழைப்பினை ஏற்று காமராஜர் டெல்லி சென்று நேரு உள்பட அனைத்துத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
    • காமராஜர் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர். எந்தச் செயலிலும் நேர்மை இருக்க வேண்டும். குறுக்கு வழியில் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதைக் கொள்கையாகவே கொண்டிருப்பவர்.

    காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டசபைத் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், தமிழகம் ஒரு பொற்காலத்தைக் காணப் போகிறது என்பது அப்போது எவருக்கும் தெரியாது. ஏன்? காமராஜருக்கும் அது தெரியாது.

    டெல்லிக்குப் புறப்பட்டு வருமாறு மேலிடம் விடுத்த அழைப்பினை ஏற்று காமராஜர் டெல்லி சென்று நேரு உள்பட அனைத்துத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தான் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, வேறு ஒருவரை முதல்-அமைச்சராக நியமித்துக் கொள்ளலாமா? என்று மற்ற தலைவர்களிடம் ஆலோசனை கேட்டார் காமராஜர். அதற்கு சட்டத்தில் இடமில்லை. சட்டசபைக் காங்கிரஸ் தலைவர்தான் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று டெல்லி மேலிடம் உறுதிபட உரைத்து விட்டது.

    முறைப்படி தேர்தல் நடந்து, தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராகவும் ஆகப் போகிறோம் என்ற பெருமையோ, கர்வமோ கடுகளவும் காமராஜரிடம் இல்லை. அப்போது கூட, கட்சிக்கு நலன் பயக்குமானால் இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்த காமராஜரின் பதவி ஆசை இல்லாத உன்னத உள்ளத்தை என்னென்று சொல்வது...?

    இப்போது இந்த முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதே சரி. இல்லாவிட்டால், வேறு ஒருவரைத் தேர்வு செய்யும் பட்சத்தில் போட்டி என்று ஏதாவது புதிதாக முளைத்து, பிரச்சினைகள் வந்து விடுமோ? அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்ற சிந்தனையும் காமராஜரின் அடி மனதில் இருந்தது.

    முதல்-அமைச்சர் பதவியை, நாட்டின் நலன் கருதி கட்சியின் நலன் கருதி நீங்கள் ஏற்றுத்தான் தீர வேண்டும் என்று நண்பர்களின் வற்புறுத்தலை ஒரே அடியாக நிராகரிக்கவும் முடியவில்லை.

    "எல்லாம் சரி, நான் ஒரு வாக்குறுதி கேட்பேன். அதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன். நான் முதல்-அமைச்சர் ஆகும் பட்சத்தில், மந்திரியாக அவரைப் போட வேண்டும், இவரைப் போட வேண்டும் என்று எந்த நெருக்கடியும் எனக்கு கொடுக்கக் கூடாது" என்று காமராஜர் சொன்னதும் எல்லோரும் சம்மதம் தெரிவிக்க, மந்திரி சபை அமைக்க முன் வந்தார் காமராஜர்.

    ராஜாஜி அமைச்சரவையில் 12 பேர்கள் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் காமராஜர் 8 பேர்களே போதும் என்று நினைத்தார். இந்த முடிவுக்காகவே காமராஜரை எல்லோரும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்த்தனர். அது மட்டுமல்ல தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜாஜி கோஷ்டியைச் சேர்ந்த சி.சுப்பிரமணியத்தையும் சேர்த்துக் கொண்டு அரசியல்வாதிகள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்.

    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

    நன்னயம் செய்து விடல்"

    - என்ற வள்ளுவரின் குறளும், "பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே" என்ற பாரதியின் வைர வரிகளும்தான் என் நினைவுக்கு வருகின்றன. காமராஜரின் பேருள்ளத்தை என்னவென்று சொல்வது.

    ராஜாஜி கோஷ்டியிலே வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர்கள் எல்லோரும் இப்போது வாயடைத்து போய் விட்டார்கள். அத்தோடு காமராஜர் நின்று விடவில்லை. வன்னியர் குலத்தைச் சேர்ந்த ராமசாமி படையாச்சியையும் மந்திரிசபையில் இணைத்துக் கொண்டார் காமராஜர். பெருந்தன்மையான குணமும், சமயோசித புத்தியும் காமராஜரிடம் இருந்ததால்தான் அவர் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பதற்கு இதை விட வேறு சான்று என்ன வேண்டும்?

    காமராஜரின் இந்த அணுகுமுறையால், காங்கிரசுக்குள்ளேயும், வெளியிலேயும் இருந்த எதிர்ப்பெல்லாம் படிப்படியாக குறைந்து இன்னும் சொல்லப் போனால் துவேஷங்கள் அனைத்துமே காணாமல் போயிற்று. இணக்கமான சூழ்நிலை உருவாயிற்று.

    கவிஞர் இரவிபாரதி

    தமிழையும், தமிழர் நலனையும் போற்றி வந்த காமராஜர், தனது பதவியேற்பு திருநாளை, தமிழ்ப் புத்தாண்டு (1954 ஏப்ரல் 13) அன்று வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எந்தப் படாடோபமும் இல்லாமல், ஆடம்பரம் எதுவும் அணுகாமல் பதவியேற்பு விழா எட்டு அமைச்சர்களோடு மிக எளிமையாக நடந்தேறியது. கவர்னர் ஸ்ரீபிரகாசா எல்லோருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    மந்திரி சபையிலும், பதவி ஏற்பிலும் எளிமை, எதிரணியாக இருந்தோருக்கும் மந்திரி சபையில் இடம் என்று எல்லாவற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் காமராஜர். இந்த முதல் நடவடிக்கையிலேயே தமிழகத்தில் ஒரு பொற்காலம் உருவாகப் போகிறது என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் மனதில் விதைத்து விட்டார் காமராஜர்.

    புதிய பதவி வருகிறது என்றால் எல்லோரும், கோவில் குளமென்று தானே போவார்கள். ஆனால் காமராஜர் பதவி ஏற்ற கையோடு, அடுத்த நிமிடமே புறப்பட்டு, தனது குருநாதர் சத்தியமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருடைய திருஉருவப்படத்திற்கு மாலையிட்டு வணங்கி, குரு பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்திட்டார் காமராஜர்.

    குரு பக்தி என்றால் அதை வார்த்தைகளில் வடித்து விட முடியாது. குருவும் சிஷ்யனுமாக சத்தியமூர்த்தியும், காமராஜரும் வாழ்ந்து காட்டிய வரலாறு என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    1936-ம் ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தலைவராக சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். சத்தியமூர்த்தியின் ஒவ்வொரு அசைவுகளிலும் அவருக்கு வலது கரமாகச் செயல்பட்ட காமராஜரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்க ஆசைப்பட்டார் சத்தியமூர்த்தி. ஆனால் அந்தத் தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே வேறு யாரையாவது செயலாளர் ஆக்குங்கள் எனக் கேட்டுக் கொண்டார் காமராஜர்.

    ஆனால் சத்தியமூர்த்தி அதற்கு உடன்படவில்லை... செயலாளராக இருக்க உனக்குத் தகுதியில்லையென்றால், தலைவராக இருக்க எனக்கும் தகுதியில்லை. எனவே, நானும் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் உறுதிபட உரைத்துவிட்டார் சத்தியமூர்த்தி. அதற்குப் பின்னர்தான் செயலாளர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்தார். அவ்வளவு பெரிய நம்பிக்கையும், அக்கறையும் காமராஜர் மீது சத்தியமூர்த்தி வைத்திருந்தார்.

    ஒருமுறை சத்தியமூர்த்தியுடன் காமராஜரும் டெல்லி செல்லுகிற வாய்ப்பு அமைந்தது. காமராஜர் டெல்லியில் உள்ள எல்லாத் தலைவர்களிடமும், இவர்தான் காமராஜ். தமிழ்நாட்டின் தலைசிறந்த தொண்டர் தளபதி. எனது சகா. அதுமட்டுமல்ல எனது ஆலோசகரும் அவரே என்று மிகுந்த பெருமையோடு அறிமுகப்படுத்தி வைத்தார்.

    Shri Kamaraj is an outstanding congress worker in Tamilnadu. He is not only my colleague but also my counsellor. என்று ஆங்கிலத்தில் சொல்லி, தமது சட்டசபை சகாக்களிடம் அறிமுகப்படுத்திய தலைவர் சத்தியமூர்த்தியின் பெருந்தன்மைக்கு நிகரேது?

    இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்? காமராஜருக்கு. தனது தலைவரே. என்னுடைய ஆலோசகர் இவர்தான் என்று சொல்வதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும். ஆக அப்படிப்பட்ட புரிதல் உணர்வு இந்த இரண்டு தலைவர்களிடமும் இருந்தது. அதனால்தான் இருவருமே அரசியலில் பிரகாசித்தனர்.

    இப்போதிருக்கின்ற தலைவர்களிடம் இந்தப் பண்பாடு இருக்கிறதா? என்ற கேள்வி நம்மை அறியாமலேயே எழுகிறது. பல தலைவர்களிடம் இல்லை. ஒரு சில தலைவர்களிடம் இருக்கிறது என்ற பதிலைத் தான் நம்மாலே சொல்ல முடிகிறது. ஆனால் அப்போதிருந்த காலச்சூழல் வேறு. இப்போதிருக்கிற காலச்சூழல் வேறு. ஒருவரை ஒருவர் மதிக்கிற பண்பும், விட்டுக் கொடுத்துப் போகிற அணுகுமுறையும் அந்தக் காலத்தில் நிறையவே இருந்தது. இப்போதெல்லாம், அந்தப் பண்பாட்டுச் சுவடுகளின் நிழலைக் கூட பார்க்கவே முடியவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியதே.

    ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டமே, அவரது வீழ்ச்சிக்கு காரணமாயிற்று. பாதி நாள் பள்ளியிலும், மீதி நாள் அப்பன் செய்த தொழிலை, பிள்ளை செய்ய வேண்டுமென்பது எவ்வளவு பெரிய பிற்போக்கான சிந்தனை? ஒவ்வொரு நாடும் நாம் எப்படி எல்லாம் முன்னேறுவது? கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், விஞ்ஞானத்திலும் எப்படி எல்லாம் முன்னுக்கு வருவது? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு குதர்க்கமான குலக் கல்வித்திட்டம் அறிமுகமானது தமிழக வரலாற்றில் ஒரு வெட்கக் கேடான காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக மக்களின் நன்மதிப்பிலிருந்து சரிந்து விழுந்தார் ராஜாஜி.

    நல்ல வேளை அப்போது வாராது போல் வந்த மாமணியாக காமராஜர் வந்து தமிழகத்தையே காப்பாற்றினார். அப்போது மட்டும் காமராஜர் என்ற தேவதூதன் வந்து இத்தமிழகத்தை காப்பாற்றாவிட்டால் இந்நாடு எப்படிப்பட்ட சீர்கேட்டைச் சந்தித்திருக்கும்? இப்போதிருக்கும் தமிழகத்தை நாம் கண்டிருப்போமா? இவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் ஒவ்வொரு துறையிலும் நடந்திருக்குமா என்பதெல்லாம் சந்தேகத்திற்குரிய ஒன்றுதான்.

    ஒரு கதவு மூடப்படும் பொழுது, இன்னொரு கதவு திறக்கும் என்ற பொன்மொழியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சில தீமைகளில், சில நன்மைகளும் விளையக்கூடும் என்பதற்கு இந்தக் குலக் கல்வித் திட்டத்தினையும், அதனால் காமராஜர் முதல்வரானதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்த வரலாற்று நிகழ்வினை ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் நினைத்துப் பார்ப்பது மிக மிக அவசியம். அப்போது தான் இனிமேல் இதுபோன்ற வரலாற்றுப் பிழைகள் நடக்காமல் நம்மாலே தடுக்க முடியும்.

    காமராஜர் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர். எந்தச் செயலிலும் நேர்மை இருக்க வேண்டும். குறுக்கு வழியில் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதைக் கொள்கையாகவே கொண்டிருப்பவர். கொல்லைப்புற வழியில் முதல்வராக வந்தவர் என்று நாளைய வரலாறு தம்மைப் பற்றிக் கூறிவிடக் கூடாது. எனவே, ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று, மக்களைச் சந்தித்து வெற்றி பெற்று வருவதே சாலச் சிறந்தது. அதுவே உண்மையான ஜனநாயகம் எனச் சிந்தித்தவர் காமராஜர்.

    எப்போதும், விருதுநகர் சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது தான் காமராஜரின் வழக்கம். ஆனால், இப்போது அந்தத் தொகுதிகளுக்கெல்லாம் தேர்தல் நடந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களே இதற்காக ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்லி அங்கு போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பது அரசுக்கு வீண் செலவுதானே எனச் சிந்தித்தார் காமராஜர்.

    முதலமைச்சராக வர விரும்புபவர்கள் தேர்தலில் போட்டி போட முடியாவிட்டால், மேலவை உறுப்பினராக ஆகி எளிதாக முதல்வராகி விடலாம். அப்படித்தானே ராஜாஜி முதல்வராக வந்தார். இப்போதும் அதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. ஆனால் அப்படிக் கொல்லைப்புற வழியாக வருவதற்கு காமராஜர் விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து, வாக்கு சேகரித்து அந்தத் தொகுதிப் பிரச்சினை என்னவென அறிந்து போட்டிபோட்டு, வென்று வருவதே நல்லது என்று கருதினார் காமராஜர்.

    நல்ல வேளையாக, வட ஆற்காடு மாவட்டத்தில் குடியாத்தம் தொகுதி அப்போது காலியாக இருந்தது. மூன்றாவது நபராக இருந்தால், தெரியாத தொகுதியில் போய் எப்படி நிற்பது என்று யோசிக்கலாம். ஆனால் காமராஜர் நாட்டின் முதல்வராயிற்றே. அதுவும் அனைத்து மக்களுக்கும் அறிமுகமான தலைவராயிற்றே. எனவே காமராஜர் களத்திலே இறங்கி ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று, மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டார். எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தவிர அனைத்துக் கட்சிகளும் காமராஜரையே ஆதரித்தன. குறிப்பாக, தி.மு.க.வும் திராவிடக் கழகமும், முஸ்லீம் லீக்கும், முனைப்புடன் நின்று தேர்தல் பணியாற்றினர்.

    தொகுதி முழுக்க காமராஜர் அலை வீசியது என்றே சொல்லலாம். காமராஜருக்கு 64,344 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,312 வாக்குகளும் கிடைத்தன. எனவே 38,212 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் மாபெரும் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தார். காமராஜருக்கு கிடைத்த வெற்றி ராஜாஜியின் குலக்கல்வியை எதிர்ப்பதற்காக கிடைத்த வெற்றி. எனவே "குலக்கொழுந்தே குணாளா" என்று தனது திராவிட நாடு இதழில் காமராஜரின் வெற்றியை வரவேற்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.

    - அடுத்த வாரம் சந்திப்போம்

    Next Story
    ×