search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- பெருமாளும் நிவேதனமும்
    X

    ஆன்மிக அமுதம்- பெருமாளும் நிவேதனமும்

    • தாய்மைப் பேறு அடையும் மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நளன் உதாரணம்.
    • திருமணத்தின்போது கண்ணனின் கைத்தலம் பற்றிய அவள், மூன்றாம் பிடி அவலைக் கண்ணன் உண்ணாதவாறு அவன் கைத்தலத்தைப் பற்றித் தடுத்தாள் என்கிறது பாகவதம்.

    பெருமாளுக்குப் பலவித பலகாரங்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொன்று.

    திருப்பதி என்றால் லட்டு. பெருமாளின் நிவேதனப் பொருட்களில் திருப்பதி லட்டு தனிப்புகழ் பெற்றுள்ளது.

    இறைவனின் பல்வேறு வடிவங்களுக்குப் பல்வேறு உணவுப் பொருட்கள் நிவேதனமாகின்றன. அனுமன் கோவில்களில் வடை. பழனி முருகனுக்குப் பஞ்சாமிர்தம்.

    சில உணவுப் பொருட்களைப் பார்த்தாலே இறைவன் நினைவு நம் மனத்தில் தோன்றுகிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது நம் ஆன்மிக மரபு. 'உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனே' என எண்ணி வாழ்ந்த பக்தர்களை உடையது நம் நாடு.

    * ராமாயணத்தில் ராமன் அதிகம் சாப்பிட்டதாக எங்கும் செய்தியில்லை. அப்படியிருக்க, சாப்பாட்டு ராமன் என்ற சொல் வழக்கத்தில் எப்படி வந்தது என்றுதான் தெரியவில்லை.

    வெண்ணெய், பால் போன்றவற்றைத் திருடிக் கூடச் சாப்பிட்ட கண்ணனை ஏனோ யாரும் சாப்பாட்டுக் கண்ணன் என்று சொல்வதில்லை!

    ராமன் அல்ல, ராமாயணத்தில் வரும் பாத்திரமான கும்பகர்ணன்தான் நிறையச் சாப்பிட்டிருக்கிறான். அவன் உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் என்னென்ன சாப்பிட்டான் என்று ராமாயணம் தரும் பட்டியலைப் பார்த்தால் தலைசுற்றும்.

    ஆறுநூறு சகடத்து அடிசிலும்

    நூறு நூறு கடம் கள்ளும் நுங்கினான்

    ஏறுகின்ற பசியை எழுப்பினான்

    சீறுகின்ற முகத்திரு செங்கணான்

    அறுநூறு வண்டிச் சோறு, நூற்றுக்கணக்கான குடம் கள் இவற்றைச் சாப்பிட்டு கும்பகர்ணன் பசி தூண்டப்பட்டது. பசி தீராததால் ஆயிரத்து இருநூறு எருமைக் கடாக்களையும் பின்னர் தின்று பசியாறினான் என்கிறார் கம்பர்.

    * சீதை சுந்தரகாண்டத்தில் அசோக வனத்தில் தனித்திருந்தபோது ராமன் எப்படிச் சாப்பிடுவான் என்றும் விருந்தினர் வந்தால் ராமன் எப்படி உபசரிப்பான் என்றும் கவலை கொண்டிருந்தாள்.

    `அருந்து மெல்லடகு ஆரிட

    அருந்துமென் றழுங்கும்

    விருந்து கண்டபோது என்னுறுமோ

    என்று விம்மும்

    மருந்தும் உண்டுகொல் தான்கொண்ட

    நோய்க்கென்று மயங்கும்

    இருந்த மாநிலம் செல்லரித்திடவும்

    ஆண்டெழாதாள்..'

    * ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்குப் பின் ஒருநாள். பசியோடு வந்த அனுமனுக்கு உணவு படைத்தாள் சீதாப்பிராட்டி. எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் தன்னால் சமைக்க முடியும் என்பதில் சீதைக்கு ஒருதுளி கர்வம் இருந்ததாம். அதை நீக்க விரும்பிய ராமபிரான் அனுமனின் பசியை அதிகப்படுத்தினாராம்.

    அனுமனுக்குச் சோறிட முடியாமல் சீதாதேவியின் கரங்கள் தளர்ந்தபோது ஸ்ரீராமரைப் பிரார்த்தனை செய்தாள். ராமர் அங்கு தோன்றி அடுத்த கவளம் உணவுடன் ஒரு துளசி இலையையும் சேர்த்துப் பரிமாறும்படிச் சொல்ல, சீதை அவ்விதமே செய்தாள்.

    அந்த ஒரு துளசி இலை அனுமனின் அத்தனை பசியையும் கூடவே சீதாதேவியின் ஒருதுளி கர்வத்தையும் ஒருசேரப் போக்கிவிட்டது என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    * மகாபாரதத்தில் நிறையச் சாப்பிடுகிறவனாக பீமன் வருகிறான். ஐந்து பாண்டவர்களும் சாப்பிட்ட மொத்த உணவில் பாதி உணவை பீமனே சாப்பிட்டான் என்கிறது மகாபாரதம்.

    இன்று சமையல் கலையைப் பெண்களுக்கு மட்டுமே உரியதுபோல நாம் எண்ணுகிறோம். ஆனால் நம் புராணங்கள் சமையல் கலையில் வல்லவர்களாக பீமன், நளன் என்ற இரண்டு ஆண்களையே குறிப்பிடுகின்றன.

    சங்க காலத்தில் சமையல் கலை பற்றிய ஒரு நூல் இருந்திருக்கிறது. அது நமக்குக் கிட்டவில்லை. அந்த நூல் இருந்த செய்தியை சிறுபாணாற்றுப் படை குறிப்பிடுகிறது. ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைத்தபோது இந்த நூலில் சொல்லியுள்ளபடிச் சமைத்து விருந்து படைத்தான் என்கிறது சிறுபாணாற்றுப் படை.

    என்று வரும் சிறுபாணாற்றுப் படை அடிகள் சொல்லும் சமையல் கலை நூல், அர்ச்சுனனின் சகோதரனான பீமன் எழுதிய வடமொழி நூலின் தமிழாக்கமாக இருக்கலாம் என்றொரு கருத்து நிலவுகிறது.

    தமயந்தி கருவுற்றிருந்தபோது அவள் கணவனான அரசன் நளன், தானே சமைத்து அவளுக்குப் பரிமாறினானாம். தாய்மைப் பேறு அடையும் மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நளன் உதாரணம்.

    * பாண்டவர்களிடமிருந்து தூதுவனாகக் கண்ணன் கவுரவர் சபைக்குச் செல்கிறான். அதற்கு முன்பாக விதுரர் இல்லத்தில் உணவருந்துகிறான். விதுரரும் அவர் மனைவி சுலபாவும் கண்ணனின் அடியவர்கள்.

    பக்திப் பரவசத்தில் சுலபா வாழைப் பழத்தைத் தோலுரித்து கண்ணனையே பார்த்து மெய் மறந்தவளாக பழத்திற்குப் பதிலாகத் தோலைக் கொடுக்கிறாள். மாடு மேய்த்த கண்ணன் அவள் பக்தியை மெச்சி, தான் மேய்த்த மாடு உண்ணும் பழத் தோலைத் தான் உண்ணுகிறான்.

    கண்ணன் எப்போதுமே தனக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் எது என்பதில் அக்கறை கொள்வதில்லை. அந்த உணவை அளிப்பவரின் பக்தியையே கருத்தில் கொள்கிறான். இல்லாவிட்டால் துவாரகையின் அரசனான கண்ணன் தன் நண்பன் குசேலர் கொண்டுவந்த எளிய அவலை விரும்பிச் சாப்பிடுவானா?

    திருப்பூர் கிருஷ்ணன்

    இரண்டு கைப்பிடி அவல் உண்ட கண்ணன், மூன்றாவது பிடி அவலைச் சாப்பிட முனையும்போது வியப்படைகிறாள் ருக்மிணி. இரண்டு பிடி அவலைக் கண்ணன் உண்ட கருணைக்கே குசேலர் மாபெரும் செல்வந்தராக மாறுவார். அப்படியிருக்க மூன்றாம் பிடி அவலையும் கண்ணன் உண்டால் குசேலரின் செல்வ வளம் குபேரனின் செல்வ வளத்தையும் மிஞ்சி விடுமே?

    திருமணத்தின்போது கண்ணனின் கைத்தலம் பற்றிய அவள், மூன்றாம் பிடி அவலைக் கண்ணன் உண்ணாதவாறு அவன் கைத்தலத்தைப் பற்றித் தடுத்தாள் என்கிறது பாகவதம்.

    * பாரத தேசம் முழுவதும் அனுமான் கோவில்கள் உள்ளன. தென்னிந்தியாவில் அனுமனுக்கு வடைமாலை சார்த்துகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை அணிவிக்கிறார்கள். அனுமனது மாலையில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஏன் இந்த வேறுபாடு?'

    இந்த சந்தேகத்திற்கு காஞ்சி மகாசுவாமிகள் பதில் சொல்லியிருக்கிறார்.

    'ராகு சூரியனை விழுங்கப் பார்த்தது. குழந்தையாக இருந்த அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்துப் பறிக்கப் போனான். அப்போது ராகு சூரியனை விழுங்குவதை அவன் தடுத்தான். அவனது பராக்கிரமத்தைக் கண்ட ராகு அனுமக் குழந்தைக்கு ஒரு வரம் அருளியது. உளுந்தால் பலகாரம் செய்து அனுமனுக்கு அணிவிப்பவர்களுக்கு ராகு தோஷம் எதுவும் செய்யாது என்பதே அந்த வரம்.

    சூரியன் பழமல்ல என்பதால் அனுமன் சூரியனை விட்டுவிட்டான். ஆனால் அனுமன் உண்ண உளுந்தால் பலகாரம் செய்து வழிபடுபவர்களுக்கு அருள் புரிய அனுமனும் ஒப்புக் கொண்டான். ராகு பாம்பு என்பதால் பாம்பைப் போலவே வளைந்துள்ள பலகாரமாக அது இருக்க வேண்டும் என்றது ராகு. உளுந்து வடை வளைந்துதானே இருக்கிறது? அதனால் அதை வடைமாலையாக அனுமனுக்குச் சார்த்தி ராகு தோஷம் நீங்கப் பெறுகிறார்கள் பக்தர்கள்.

    தெற்கே உப்பளங்கள் அதிகம். எனவே உப்புக் கலந்து உளுந்து வடை செய்தார்கள். வடக்கே கரும்பு நிறைய விளைகிறது. எனவே இனிப்புக் கலந்து ஜாங்கிரி செய்து மாலையாக்கி அணிவித்து மகிழ்கிறார்கள். வடையோ ஜாங்கிரியோ இரண்டுமே உளுந்தால் செய்யப்படுபவை தானே?

    புராணங்களின் சாரமும் அனுஷ்டானமும் பாரத தேசம் முழுவதிலும் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவை ஒரே தேசமாக இணைப்பது நம் ஆன்மிகம்தான்!'

    இது அனுமனின் வடை மாலைக்கான பரமாச்சாரியாரின் விளக்கம்.

    * விதவிதமான உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வது பக்தர்கள் வழக்கம். இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பதற்காக எதையும் சாப்பிடாமலே இருப்பதும் கூட பக்தர்களின் வழக்கம் தான். ஏகாதசி அன்றும் சஷ்டி அன்றும் புரட்டாசி சனிக்கிழமை அன்றும் உண்ணவிரதம் இருப்பவர்கள் உண்டு.

    காந்தி உண்ணாவிரதத்தைத் தம் சத்யாகிரகப் போராட்டத்தின் ஓர் அம்சமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் வசிக்கத் தொடங்கிய தொடக்க காலத்தில் சங்கரன் செட்டியார் இல்லத்தில் இருபத்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிய காலத்தில் திங்கட்கிழமை தோறும் இரவு உணவைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    ஒருபொழுது மட்டும் உண்பது, சில உணவுகளை விலக்கி வைப்பது போன்றவையும் கூட நம் ஆன்மிக மரபில் உண்டு. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அமாவாசை போன்ற புனித தினங்களில் அதைத் தவிர்க்கிறார்கள். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களும் கூட புனித நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை விலக்கி வைக்கிறார்கள்.

    'வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்

    பையத் துயின்ற பரமன் அடி பாடி

    மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்..'

    என்கிறது புனிதமே வடிவான ஆண்டாள் நாச்சியார் எழுதிய திருப்பாவைப் பாடல். மார்கழியில் பாவை நோன்பு அனுசரிக்கும் பெண்கள், நெய்யையும் பாலையும் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற மரபைத் தெரிவிக்கிறது அந்தப் பாசுரம்.

    பெருமாளுக்கு நிவேதனங்கள் செய்தும் நாம் எதையும் உண்ணாமல் விரதமிருந்தும் இறை பக்தியில் தோயும்போது நாம் அடையும் மனச் சாந்தி விவரிக்க முடியாதது. பெருமாளைப் பணிவோம். இறையருளைப் பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×