search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்வமும் சக்தி மயம்- பாற்கடல் கடையப்பட்டது எதற்காக?
    X

    சர்வமும் சக்தி மயம்- பாற்கடல் கடையப்பட்டது எதற்காக?

    • தொடக்கத்தில் தேவேந்திரன் சிறந்ததொரு அம்பாள் உபாசகனாகத் திகழ்ந்தான்.
    • செல்வமும் செல்வாக்கும் இழந்து தவித்த இந்திரன் வியாழ குருவின் உதவியை நாடினான்.

    தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். இந்தக் கதை நமக்குத் தெரியும். ஏன் கடைந்தார்கள்? அமிழ்தம் வேண்டுமென்பதற்காக! அமிழ்தத்தைத் தேடி அவர்கள் கடையத் தொடங்கவில்லை. தொலைந்து, கடலுக்கு அடியில் போய் அமிழ்ந்திருந்த இந்திர செல்வத்தை மீண்டும் பெறுவதற்காகத் தான், பாற்கடல் கடைகிற சம்பவம் தொடங்கியது.

    ஆனால், இதற்கெல்லாம் முன்பாக வேறு பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.

    தொடக்கத்தில் தேவேந்திரன், சிறந்ததொரு அம்பாள் உபாசகனாகத் திகழ்ந்தான். மிகுந்த பணிவுடனும் பக்தியுடனும் அம்பிகையை வழிபட்டான். இதன் விளைவாக, அம்பிகை அருளை நிரம்பப் பெற்றான்.

    தன்னிலிருந்து தன்னுடைய அம்சமாக, அழகிய பெண்கள் இருவரை அம்பிகை தோற்றுவித்தாள். இருவரில் ஒருத்திக்கு 'விஜயஸ்ரீ' என்றும், இன்னொருத்திக்கு 'நித்யஸ்ரீ' என்றும் பெயர். அம்பிகையின் ஆணைப்படி, இருவரும் தேவலோகத்திற்கு வந்தனர். நிரந்தரமாக அங்கேயே தங்குவது என்று முடிவெடுத்தனர். தங்களின் நற்பலன்களையெல்லாம் இந்திரன்மீது பொழிந்தனர். செல்வச் சிறப்போடும் வெற்றிக் களிப்போடும் மூவுலகங்களையும் தேவேந்திரன் ஆண்டான்.

    இவ்வாறு இருக்கையில், ஒருநாள், தன்னுடைய ஐராவத யானைமீது உலா சென்று கொண்டிருந்தான். எதிரில், எலும்பும் தோலுமாக, மான் தோல் அணிந்தவராக, துர்வாசர் வந்தார். உடலெல்லாம் சாம்பல்; கையில் நீண்ட தண்டம். இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டு வந்தார். பித்துப் பிடித்தவர்போல் வந்தார். உண்மையில் அவரை அம்பிகையும் சிவனாருமே அனுப்பி இருந்தார்கள்.

    வசதிகளாலும் வளமையாலும் தேவேந்திரனுக்கு ஆணவம் தலைக்கேறியிருந்தது. தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்னும் மதர்ப்பும், தான் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானவன் என்னும் ஆணவமும் தலைக்கேறி இருந்தன. யானைமீது அமர்ந்துகொண்டு, தேவர்களின் கரகோஷத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

    தேவலோகம் வருகிற வழியில், கந்தர்வப் பெண் ஒருத்தியை துர்வாசர் சந்தித்திருந்தார். அழகானதொரு வீணையையுடன் மலர்மாலை ஒன்றையும் அப்பெண் அளித்திருந்தாள். அம்பிகை பராசக்தியை வழிபட்டு, வீணையையும் மாலையையும் பெற்றிருந்தாள். அவற்றை அப்படியே பிரசாதமாக துர்வாசரிடம் கொடுத்திருந்தாள்.

    அம்பிகையின் பிரசாதமாயிற்றே என்று எண்ணிய முனிவர், அம்பிகை பக்தனான இந்திரன் அவற்றைப் பெரிதும் மதிப்பான் என்றே கொணர்ந்தார். ஆனாலும், புறப்படும்போது, அம்பிகையும் ஐயனும், இந்திரனின் ஆணவத்தைப் பற்றிக் குறைப்பட்டிருந்தார்கள். நீண்டநாள் சக்தி உபாசகனான இந்திரன் மாறிப்போவான் என்று துர்வாசர் எண்ணவில்லை. எனவே, பிரசாத மாலையைக் கையில் பிடித்துக்கொண்டு, வீணையை வாசித்துக் கொண்டே வந்தார்.

    எதிரில் ஐராவதத்தின்மீது ஆரோகணித்த இந்திரனைக் கண்டவுடன், மாலையை அப்படியே அளித்தார்.

    கையில் வாங்கக்கூடத் தயங்கிய இந்திரன், யானையின் தும்பிக்கையைப் பிடித்து நீட்டி தும்பிக்கையில் அந்த மாலையை வாங்கிக் கொண்டான். அப்படியே யானையிடம் விட்டுவிட்டான். மாலையைத் தும்பிக்கையில் பற்றிய ஐராவதம், இழுத்துப் பிய்த்தது; மிச்சம் மீதியை எடுத்து வீசியது.

    அம்பாளின் மாலை என்று சொல்லிக் கொண்டே கொடுத்தபோதும், காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், அவமரியாதையாக இந்திரன் நடந்துகொண்டது, முனிவரின் சினத்தைக் கிளறியது. கோபத்தோடு அவர் ஏறிட்டபோது, விஜயஸ்ரீயோடும் நித்யஸ்ரீயோடும் இந்திரன் தலையசைத்துப் பேசிக்கொண்டிருந்தான். இருவரும் சற்றே சங்கடமாக விழித்துக் கொண்டிருந்தார்கள்; கீழே சரிந்திருந்த மலர்களையே கண்ணீரோடு நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

    துர்வாசர் தம்முடைய சாபத்தை ஏவிவிட்டார். விஜயஸ்ரீயும் நித்யஸ்ரீயும் இந்திரனுக்கும் இந்திரலோகத்திற்கும் இல்லாமல் போவார்கள் என்று சாபமிட்டுவிட்டார்.

    இந்திரனுடைய செல்வமும் வெற்றியும் உடனடியாகக் குன்றின. எந்த ஐராவதத்தின்மீது அமர்ந்திருந்தானோ, அந்த ஐராவதமும், அதன் அருகில் நின்ற உச்சைசிரவஸ் குதிரையும், எட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காமதேனுப் பசுவும், இலைகளையோ கிளைகளையோ அசைக்காமல் உறைந்து போயிருந்த கல்பக மரமும், அத்தனையும் காணாமல் போயின. இந்திரலோகம், பாழ்லோகம் ஆனது.

    நித்யஸ்ரீ புறப்பட்டாள்; நேரே வைகுண்டம் சென்றாள்; திருமாலின் காலடியில் விழுந்து கதறினாள்; அப்படியே அமர்ந்துவிட்டாள்.

    விஜயஸ்ரீ புறப்பட்டாள்; தானவர்களான அரக்கர்கள் எதிர்ப்பட்டார்கள்; வணங்கினார்கள்; அப்படியே அவர்களின் இருப்பிடம் சென்றுவிட்டாள். அன்றுமுதல், அரக்கர்களே போர்களில் வெற்றி பெற்றார்கள்.

    செல்வமும் செல்வாக்கும் இழந்து தவித்த இந்திரன், வியாழ குருவின் உதவியை நாடினான். ஆணவத்தால் நிகழ்ந்த தவறுகளை குரு சுட்டிக்காட்டினார். இருவருமாக, பிரம்மதேவனைச் சென்று வேண்டினர். அனைவருமாக வைகுண்டம் சென்று திருமாலின் அருளை நாடினர்.

    மூலிகைகள் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி, அம்பிகையை வேண்டி, இந்த மூலிகைகளைப் பாற்கடலில் போட்டுவிட்டுக் கடையத் தொடங்கினால், மறைந்தவை அத்தனையும் மீளும் என்று திருமால் வழி கொடுத்தார்.

    இதன் பின்னர்தான், பாற்கடல் கடைகிற வைபவமே தொடங்கியது. மூலிகைகளைக் கடலில் இட்ட இந்திரன், முறையாக அம்பிகையை வழிபட்டான். தவறுகளுக்காக மன்னிப்புக் கோரி அழுதான். குழந்தையைத் தாய் ஒதுக்குவாளா?

    தானவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, பாற்கடலைக் கடையும்படி அறிவுறுத்தினாள். இந்நிலையில், பின்னர் அசுரர்கள் என்றழைக்கப்பட இருப்பவர்களுக்கு 'தானவர்கள்' என்றே பெயர். இதன்படியே, தானவர்கள் ஒருபக்கமும் தேவர்கள் ஒருபக்கமுமாக நின்று பாற்கடலை கடைந்தார்கள். மத்தாக நின்ற மந்தரமலை நகரத் தொடங்கியது; மத்து நிலைக்காமல், கடலைக் கடைய முடியவில்லை. அம்பிகையின் கடைக்கண் பார்வையை தேவர்கள் நாட, தானவர்களோ, மந்தர மலையோடு சண்டையிட்டனர். தானவர்களின் ஏச்சுகளால் மனமொடிந்த மந்தரம் மேலும் சரிந்தது. அம்பிகை திருமாலை நோக்கினாள். கூர்ம அவதாரம் கொண்டு, அடியில் சென்று மலையைத் தாங்கிக்கொண்டதோடு, மலையின்மீதமர்ந்து, சரியாமல் அதனை நிலைநிறுத்தினார்.

    பேரொளி வடிவம் கொண்ட அம்பிகை, தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில், ஒளியாகவே நகர்ந்தாள். ஒளியை உதாசீனப்படுத்திய தானவர்கள், தங்களின் வலிமையால் மட்டுமே பாற்கடலைக் கடையமுடியும் என்று எகத்தாளம் பேசி அறைகூவல் இட்டனர். தேவர்களோ, ஒளிப் பிரகாசத்தைக் கைகூப்பித் தொழுது, தேவியை வணங்கினர்.

    ஒருபக்கம், அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும்; மற்றொரு பக்கம், பணிவும் வணக்கமும்; விண்ணில் திரிந்த சித்தர்கள் வியப்போடு கண்டனர். அட்டகாசமான தானவர்கள் பக்கம், வியர்வை பெருகியது, வெப்பக் காற்று வீசியது. களைப்பும் உளைச்சலும் அலைக்கழித்தாலும், ஆணவத்தில் நின்ற தானவர்கள், ஆர்ப்பாட்டத்தை விடாமல் ஆட்டம் போட்டனர். பணிவான தேவர் பக்கம், குளிர் காற்று வீசியது. மேலும் பணிந்து அம்பிகையை மனதார வேண்டினர்.

    அம்பிகையின் பேரொளியைத்தான் உணரவில்லை; தங்களுக்கு மாற்றுப் பக்கத்தில் சூழல் மென்மையாக இருப்பதைக்கூட தானவர்கள் உணரவில்லை.

    இந்நிலையிலும், அம்பிகை பேதமில்லாமல் அருள்வதற்குத் தலைப்பட்டாள்.

    அம்பிகையின் அம்சமான வாருணிதேவி, கடலுக்குள்ளிருந்து வெளிப்பட்டாள். தானவர்களுக்கு எதிரில் போய் நின்றாள். ஐராவதம், உச்சைசிரவஸ் உள்ளிட்ட வசதிகள் வருமென்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவற்றை வைத்து மூவுலகையும் ஆளவேண்டும் என்று நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, மென்மையும் பேரழகும் கொண்ட வாருணியை வைத்து என்ன செய்வது என்னும் ஐயம் ஏற்பட்டது, 'போ, போ' என்று வாருணியை விரட்டினார்கள்.

    விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சித்தர்கள், 'அசுர, அசுர' என்று ஒலி எழுப்பினார்கள். சுரபி என்றும் வழங்கப்பட்ட வாருணியை விரட்டியதால், சுரபிக்கு எதிரானவர்கள் என்னும் பொருளில் சித்தர்கள் சொன்ன 'அசுர' என்னும் பதமே பெயராக அமைய, இப்போதுதான், தானவர்கள் என்போர், அசுரர்கள் என்னும் புதுப்பெயர் பெற்றார்கள்.

    வாருணி, தேவர்கள் பக்கம் சென்றாள். அம்பிகையின் அருளை உணர்ந்துகொண்ட இந்திரன், வாருணியை வரவேற்று வணங்கினான்.

    இவ்வளவுதான், அம்பிகையின் அருள் தேவர்கள் பக்கம் பாய்ந்தது. பணிவுக்கும் பக்திக்கும் கிட்டிய பரிசு.

    முதலில், வெள்ளை வெளேரென்னும் உச்சைசிரவஸ் வெளிப்பட்டது. யானையை எதிர்ப்பார்த்திருந்த அசுரர்கள், ஏமாற்றத்தோடு தலையைத் திருப்பிக் கொள்ள, குதிரையைப் பற்றி தேவர்களிடம் கொடுத்தார் திருமால். தலையைத் திருப்புவதற்குள்ளாகவே, அப்சரப் பெண்கள் வெளிப் போந்தனர். அவர்களின் அழகைக் கண்டு, 'எனக்கு, உனக்கு' என்று அசுரர்கள், கூறுபோடத் தலைப்பட, இடமே கொடுக்காமல், அவர்களையும் தேவர்கள் பக்கமே திருமால் அனுப்பினார். அடுத்தது, பாரிஜாதச் செடி தலை தூக்கியது. நல்ல மணத்தை வெளியிட்டது. நறுமணத்திற்கு அசுரர்கள் முகம் சுழிக்க, அதுவும் தேவர்கள் பக்கமே சென்றது.

    இந்நிலையில்தான், அம்பிகை இன்னொரு விளையாட்டு விளையாடினாள். சந்திரனும், காலகூட நச்சும் ஒன்றாகத் தோன்றின. சந்திரனைச் சிவனார் பிடித்துக் கொண்டார். காலகூடத்தை நாகலோக நாகர்கள் உறிஞ்சி உண்டனர். இருப்பினும், விஷம் கூடுதலாக வழிந்தது.

    தடுமாறிப் போன தேவர்கள், அம்பிகையை வேண்டினர். அகக்கண்களில் அம்பிகையின் அருள் வதனத்தை நோக்கினர். திருக்கைலாயம் நோக்கி ஓடத் தொடங்கினர். விஷத்தை இன்னமும் கூடுதலாக விழுங்கும்படி, நாகர்களை அசுரர்கள் அடிக்கத் தொடங்கினர். நாகர்களும் வாசுகியும் இதனால் மேலும் விஷத்தை வெளியிட, இந்தச் சிக்கலில்தான், தேவர்களோடு கைலாயத்திற்கு அசுரர்களும் ஓடினர்.

    காலகூடத்தைத் தாமே ஏற்றுக் கொண்டு சிவனார் அருளிச்செய்ய, மீண்டும் கடைதல் தொடர்ந்தது. கௌஸ்துப மணி வெளிவர, திருமால் எடுத்துக் கொண்டார். விஜயம் என்னும் பெருமருந்து வெளிப்பட, பைரவர் ஏற்றார்.

    இதற்கெல்லாம் இடையில் நிகழ்ந்த இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும்.

    ஒவ்வொரு பொருள் வெளிவர வெளிவர, பளபளப்பாகவோ பகட்டாகவோ தெரிந்தால், அது தங்களுக்குள் யாருக்கு என்று அசுரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். இப்படிச் சண்டையிட்டதாலேயே, கவனம் சிதறிய நேரத்தில், அதை வேறொருவர் எடுத்துக்கொள்வதைத் தடுக்கமுடியவில்லை. தேவர்களோ, அது எடுப்பவர்க்கு உரித்தானது என்று ஒற்றுமையோடும் பணிவோடும் இருந்தனர்.

    இவ்வளவுக்கும் பின்னர், கையில் அமிழ்த கலசத்தோடு தன்வந்திரி வெளிப்பட்டார். அடுத்த கணமே, ஸ்ரீ லட்சுமிதேவியும் வெளிப்பட்டாள். மலங்க மலங்க விழித்த அசுரர்களுக்கு, அமிழ்தம் வந்துவிட்டது என்பது புரியவே நேரமானது. சித்தர்களும் தேவர்களும் திருமாலும் பிரம்மாவும் தேவியைப் பலவிதமாகத் துதித்தனர். அம்பிகையின் கடைக்கண் நோக்கைப் புரிந்துகொண்ட சகரன் (கடல் அரசன்), லட்சுமியைத் திருமாலிடம் சேர்ப்பித்தான்.

    அமிழ்தத்திற்கான சண்டை ஆரம்பித்தது. அம்பிகையை வழிபட்ட திருமால், மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை திசை திருப்பி அகற்றினார். இப்போதும்கூட, பெண் வடிவிலும் பேரழகிலும் மயங்கித்தான் அசுரர்கள் அமிழ்தத்தை இழந்தனர்.

    பிரம்மாண்ட மகாபுராணத்தின் பகுதியான லலிதோபாக்கியானம், இந்த நிகழ்ச்சியை வெகு விரிவாக விளக்குகிறது.

    தவறு செய்தாலும் அம்பிகை மன்னிப்பாள். எப்போது? பணிவும் பக்தியும் ஒற்றுமையும் அன்பும் இருந்தால், மன்னிப்பாள்; அள்ளிக் கொடுப்பாள்; அருளை வழங்குவாள்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    Next Story
    ×