search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இயற்கை காட்சிகளை வென்ற செயற்கை காட்சிகள்
    X

    இயற்கை காட்சிகளை வென்ற செயற்கை காட்சிகள்

    • இருவரும் நடுவர் என்ற பணியையும் தாண்டி அவர்களாகவே காட்சிக்கு தகுந்தாற் போல் நடிப்பது, ஆடுவது என்று அந்த நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார்கள்.
    • முதல் முறையாக இந்த சீசனில்தான் யானைக்கு உண்மையான யானையையே வரவழைத்து இருந்தோம்.

    அனுபவம்தான் பாடம் கற்று தரும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் மானாட மயிலாட முதல் சீசனை தொடங்கும் போது சின்னத்திரையில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற தயக்கத்துடனேயே சென்றேன்.

    ஆனால் அந்த சீசனில் கிடைத்த அனுபவம்தான் புதிய எண்ணங்களுக்கு வழி காட்டியது.

    முதல் சீசனில் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஒவ்வொரு பொருட்களாக எடுத்து வைப்போம். அவைதான் காட்சிகளின் பின்னணியில் இருக்கும். அதை பார்க்க பார்க்க இதையே இன்னொரு ஷெட்டாக அமைத்தால் என்ன என்று நினைத்தேன்.

    முதல் சீசனில் கிடைத்த அந்த அனுபவம்தான் 2-வது சீசனை மேலும் பிரமாண்டமாக செய்ய உதவியது. ஏற்கனவே முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் சின்னத்திரையில் இப்படி புதுமையான காட்சிகள் இடம் பெற்றது ரசிகர்களுக்கும் புதுமையாக தெரிந்தது. அவர்களும் அதை பார்த்து ரசித்தார்கள்.

    இந்த சீசனில்தான் ஒரு ஷெட்டுக்குள் இன்னொரு ஷெட்டு போடும் யுக்தியை கையாண்டோம். நடிகைகள் குஷ்புவும் ரம்பாவும் நடுவர்களாக இருந்தார்கள். இருவருமே திரையில் ஜொலித்த நட்சத்திரங்களாக இருந்ததால் அவர்களுடைய பங்களிப்பும் இந்த நிகழ்ச்சியில் அதிகமாகவே இருந்தது.

    இருவரும் நடுவர் என்ற பணியையும் தாண்டி அவர்களாகவே காட்சிக்கு தகுந்தாற் போல் நடிப்பது, ஆடுவது என்று அந்த நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார்கள். அது மிகப்பெரிய பொழுதுபோக்கு விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்தது.

    இந்த சீசனில்தான் கல்லூரி மாணவர் பாலா-பிரியதர்ஷினி ஜோடி, லோகேஷ்-சுஜி பாலா ஜோடி, கணேஷ்-ஆர்த்தி ஜோடி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி போன்றவர்கள் போட்டியாளர் களாக களம் இறங்கினார்கள்.

    பின்னர் பிரியதர்ஷினி மிகப்பெரிய தொகுப்பாளினியாக மாறினார்.

    நீர்வீழ்ச்சி காட்சிக்காக குற்றாலம் நீர்வீழ்ச்சியை போல் ஒரு நீர்வீழ்ச்சி ஷெட்டையே அமைத்து இருந்தோம். அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும்... செடி, கொடிகள் படர்ந்து கிடக்கும். குற்றாலத்தை பார்த்தவர்களுக்கு நிஜமான குற்றால அருவியை கண்முன்பு பார்த்தது போல் இருக்கும். அந்த அருவியில் ஆடிவிட்டு வெளியே வரும் போது தண்ணீரில் நனைந்ததால் தரைகள் வழுக்கும். அதையெல்லாம் தாக்குப்பிடித்து தான் போட்டியாளர்கள் நிகழ்ச்சிகளில் நடித்தார்கள்.

    ஏற்கனவே ரம்பா, குஷ்புவின் காஷ்டியூமை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு பிரமாண்டமாக காஷ்டியூம் போட்டு இருப்பார்கள். அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த காட்சிக்கு தகுந்தாற்போல் அவர்களின் காஷ்டியூமும் இருக்கும். நீர்வீழ்ச்சி பின்னனியில் பசுமையாக இருக்கும். எனவே அவர்களும் கிராமத்து ஸ்டைலில் பச்சை கலர் காஸ்டியூமில் சும்மா நச்சென்று நிகழ்ச்சியில் வந்து அமர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

    முதல் முறையாக இந்த சீசனில்தான் யானைக்கு உண்மையான யானையையே வரவழைத்து இருந்தோம். அந்த யானை ரம்பாவுக்கு மாலை போட்டு வரவேற்கும். அதேபோல் குஷ்புவுக்கும் மாலை போட்டு வரவேற்கும்.

    காஷ்மீர் பனி முகடுகளை போல பனிக்கட்டிகளால் மலை முகடுகளுடன் ஒரு ஷெட் அமைத்திருந்தோம். அதில் "புது வெள்ளை நிலா" என்ற பாடலுக்கு போட்டியாளர்கள் ஆடிய காட்சி காஷ்மீர் பனி சிகரத்தில் ஆடுவது போன்ற ஒரு உணர்வையே ரசிகர்களுக்கு கொடுத்தது.

    இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களும், தங்களின் முழு திறமையையும் அர்ப்பணிப்புடன் செய்ததும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. யாருமே இதை ஒரு போட்டி என்பதாக மட்டும் கருதவில்லை.

    அதற்கு ஒரு உதாரணம் ஆன்மீக சுற்று என்று ஒரு ரவுண்டு வைத்திருந்தோம். அதில் நாயகி மொட்டை தலையுடன் வரவேண்டும் என்பதால் ஆர்த்தி நிஜமாகவே தலையை மொட்டை அடித்துக்கொண்டார். அதை பார்த்து நாங்களே பிரமித்து போனோம்.

    இப்போது தம்பதிகளாக இருக்கும் ஆர்த்தியும், கணேசும் காதலர்களாக மானாட மயிலாட சீசனில்தான் அறிமுகமானார்கள். அவர்கள் காதலும் வளர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்கள் என்பது சுவாரசியமானது.

    மகிழ்ச்சிகரமான தருணங்கள் இருந்தது என்பதை போல, துயரமான தருணமும் உண்டு. இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித்-ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி மிக பிரமாண்டமாக ஆடியது. செமி பைனலுக்கும் அந்த ஜோடி வந்தது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரர் மரணம் அடைந்துவிட்டார். நாங்கள் எல்லோருமே அவரது வீட்டுக்கு சென்றிருந்தோம். மறுநாள் ஷூட்டிங்கில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த துக்கத்திலும் அதை நினைவுபடுத்தி கண் கலங்கினார். அப்போது நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறினோம். உங்கள் திறமை ஒரு போதும் தோற்று போகாது. நிச்சயம் அடுத்த சீசனில் உங்களுக்கு வாய்ப்பு தருவோம் என்றோம். அதேபோல் 3-வது சீசனில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தோம்.

    இந்த சீசனில் தான் கயிற்றில் தொங்கியபடி ஆடும் காட்சிகளை அறிமுகம் செய்தோம். கயிறை பிடித்து தொங்கி அந்த ரதத்தில் ஆட வேண்டும். மிகவும் திரிலிங்காக இருக்கும் அந்த காட்சிகளை போட்டியாளர்கள் துணிச்சலாக நடித்து பெயர்வாங்கினார்கள்.

    ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களைகட்டிய 2-வது சீசனில் முதல் பரிசு பாலா-பிரியதர்ஷினி ஜோடிக்கும், 2-வது பரிசு லோகேஷ்-சுஜி ஜோடிக்கும், 3-வது பரிசு கணேஷ்-ஆர்த்திக்கும் கிடைத்தது. இந்த சீசன் முடிவில் தான் ஆர்த்தி வந்து என்னிடம் சொன்னார். மேடம் நாங்கள் (கணேஷ்-ஆர்த்தி) காதலித்து வருகிறோம். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்றார்கள். உங்களை நாங்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். சூப்பர். உங்கள் திருமண வாழ்வு சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்.

    3-வது சீசன் அனுபவம் பற்றிஅடுத்த வாரம் சொல்ல வருகிறேன்.

    Next Story
    ×