search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோளாறு பதிகமும் ஞான சம்பந்தரும்...
    X

    கோளாறு பதிகமும் ஞான சம்பந்தரும்...

    • கோளறு பதிகத்தில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் மந்திர ஆற்றல் முழுவதும் அதை அருளிய ஞானசம்பந்தப் பெருமானின் தவ ஆற்றலே.
    • மந்திரங்களின் பலனை அடைய அவை முதலில் எந்த மொழியில் தோன்றினவோ அதே மொழியில்தான் ஓத வேண்டும்.

    பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன. அவற்றில் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு திருப்பதிகம்.

    எதைத் தொகுத்தாலும் பத்துப் பத்தாகத் தொகுப்பது தமிழில் உள்ள மரபு. திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரமும் பத்துப் பத்து குறட்பாக்களைத் தாங்கியுள்ளதைக் காணலாம்.

    பக்தி இலக்கியத்தில் பத்துப் பாடல்களின் தொகுப்பு பதிகம் எனப்படுகிறது. கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம் போன்றவை பத்தின் தொகுப்புகளே.

    சில பதிகங்களில் பத்திற்குப் பிறகு மிகையாக ஒரு பாடல் இருக்கும். அந்தப் பதினொன்றாம் பாடல், மேற்சொன்ன பத்துப் பாடல்களைப் படிப்பதால் கிட்டும் பயனை விவரிக்கும். அதைப் பலச்ருதி எனச் சொல்வதுண்டு.

    கோளறு பதிகத்திலும் அதன் பயனைச் சொல்கிற பதினொன்றாம் பாடல் உண்டு.

    'தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

    வளர்செம்பொன் எங்கும் திகழ

    நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து

    மறைஞான ஞான முனிவன்

    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

    நலியாத வண்ணம் உரைசெய்

    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

    அரசாள்வர் ஆணை நமதே!'

    கோளறு பதிகத்தை ஓதுபவர்கள் வானில் அரசாள்வர் என ஆணையிட்டுச் சொல்கிறார் ஞானசம்பந்தர்.

    தமிழில் எத்தனையோ பதிகங்கள் இருந்தாலும், கோளறு பதிகம் நமது பக்தி இலக்கியத்தை அலங்கரிக்கும் புகழ்பெற்ற பதிகங்களில் ஒன்று. அதில் வரும் சொற்கள் ஒவ்வொன்றும் மந்திர சக்தி நிறைந்தவை.

    'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

    மறைமொழி தானே மந்திர மென்ப'

    என்கிறது தொல்காப்பியம். தவச்சக்தி நிறைந்தவர்கள் ஒரு சொல்லை ஆணையிட்டுச் சொல்கிறபோது, அது மந்திரமாகி விடுகிறது.

    அதை ஏராளமானோர் ஓதி ஓதி காலம்காலமாகப் பயனடைவதால், அதில் உறைந்திருக்கும் மந்திர ஆற்றல் விழிப்படைந்து பலருக்கும் எளிதில் பயனளிக்கக் கூடிய நிலையை அடைகிறது.

    கோளறு பதிகத்தில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் மந்திர ஆற்றல் முழுவதும் அதை அருளிய ஞானசம்பந்தப் பெருமானின் தவ ஆற்றலே.

    கோளறு பதிகம் தமிழ் மந்திரம் என்பதால் அதைத் தமிழில் ஓதித்தான் பலன் அடைய முடியும். மொழிபெயர்த்து இன்னொரு மொழியில் சொல்வதால் பொருளைப் புரிந்து கொள்ளலாமே அன்றி மந்திர பலனை அடைய முடியாது.

    மந்திரங்களின் பலனை அடைய அவை முதலில் எந்த மொழியில் தோன்றினவோ அதே மொழியில்தான் ஓத வேண்டும். ஏனெனில் மந்திரங்களின் ஆற்றல் அவற்றின் பொருளில் இல்லை. ஒலியில் உள்ளது.

    தற்காலத்தில் ஏராளமான அன்பர்களுக்குப் பயனளிக்கக் கூடிய தமிழ் மந்திரப் பனுவல்களில் கோளறு பதிகம், கந்த சஷ்டி கவசம் இரண்டும் மிக முக்கியமானவை.

    ஒருவருக்கு கிரகக் கோளாறுகளால் ஏற்படக் கூடிய எல்லா இன்னல்களையும் கோளறு பதிகத்தை ஓதித் தடுத்துவிடலாம். கோளறு பதிகம் தன்னை ஓதும் பக்தர்களைச் சுற்றி ஒரு கவசம் போல் நின்று, கோள்களால் நேரும் தீய பாதிப்புகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுகிறது.

    ராகு காலத்தில் ஒரு செயலைச் செய்தே ஆக வேண்டிய சூழல் தோன்றினால், மனத்திற்குள் முழு கோளறு பதிகத்தை அல்லது அதன் முதல் பாடலை ஒரே ஒருமுறை ஜபிப்பதன் மூலம் ராகு காலக் கெடுதல்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் போன்ற ஆன்மிகத் தமிழறிஞர்கள் கோளறு திருப்பதிகத்தின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள். தாங்கள் அதை ஓதியதோடு, மற்றவர்களையும் அதை ஓதிப் பயனடையச் சொல்லி வழிகாட்டினார்கள்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்த நூற்றாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார், கோளறு பதிகத்தின் சிறப்பைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார்.

    இந்திய சீனப் போர் நடந்துகொண்டிருந்த 1960 ஐ ஒட்டிய ஆண்டுகளில், ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் சூழல் நேர்ந்தது.

    இத்தகைய சூழல் நாட்டை பாதிக்கும் என்பதால், அன்பர்கள் கோளறு பதிகத்தை நாள்தோறும் ஓத வேண்டும் எனப் பரமாச்சாரியார் அறிவுறுத்தினார்.

    அப்போது ஏராளமானோர் கோளறு பதிகத்தை ஆலயங்களில் மட்டுமல்லாது அவரவர் இல்லங்களிலும் விடாமல் ஓதினர். கோளறு பதிகத்தை அச்சிட்டு இலவச வினியோகம் செய்த அன்பர்களும் பலர்.

    கோள் என்ற சொல் நவக்கிரகங்களைக் குறிக்கும் பொதுச் சொல். அறு என்றால் பாதிப்பிலிருந்து விடுபடுவது எனப் பொருள். கோள், அறு என்ற இரு சொற்களும் இணைந்து கோளறு திருப்பதிகம் எனப் பெயர் பெற்றது. உண்மையிலேயே ஆன்மிக உலகில் 'பெயர்பெற்ற' பதிகம்தான் இது.

    கோளறு பதிகத்தை அருளிய திருஞான சம்பந்தர் இளம் வயதிலேயே பாடல்கள் அருளிய மாமேதை. ஆண்பனை மரத்தைப் பெண் பனைமரமாக்கிக் காய்க்கச் செய்தது, பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையின் எலும்பிலிருந்து மீண்டும் பூம்பாவையை 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர்பெற்று வரச் செய்தது என அவர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் பல..

    சோழ வளநாட்டில் ஏழாம் நூற்றாண்டில் சீர்காழியில் தோன்றியவர். சிவபாத இருதயர் அவரது தந்தை. பகவதி அம்மையார் அவரது தாய்.

    மூன்று வயதுக் குழந்தை சம்பந்தரை அழைத்துக் கொண்டு சீர்காழி சிவன் கோவிலுக்குச் சென்றார் தந்தை. குளக் கரையில் குழந்தையை அமரச் செய்துவிட்டு நீராடினார்.

    குளத்துத் தண்ணீரில் அவர் மூழ்கியபோது, அவர் தலை நீருக்குள் மறைய, அவரைக் காணாது திகைத்தது குழந்தை. அதற்குப் பசியும் எடுத்தது. எனவே 'அம்மா அப்பா' என்று கூறி அந்தக் குழந்தை பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு அம்மையும் அப்பனுமான பார்வதியும் சிவனும் ஆலயத்திலிருந்து வெளிப்பட்டனர்.

    குழந்தையின் மேல் கொண்ட அன்பால், உண்ணாமுலையாளாகிய பார்வதி, ஒரு கிண்ணத்தில் ஞானப்பால் தோன்றுமாறு செய்தாள். அந்தப் பாலை சம்பந்தக் குழந்தைக்குப் பாசமும் பரிவும் பொங்கத் தானே ஊட்டினாள்.

    பசியடங்கிய குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தையின் உதட்டில் பாலின் மெல்லிய கீற்று. அதைத் துடைப்பதா வேண்டாமா?

    பார்வதி கேள்விக் குறியோடு பரமசிவனைப் பார்த்தாள். முக்கண்ணன் அந்தப் பாலைத் துடைக்க வேண்டாம் எனக் கண்ணாலேயே சமிக்ஞை செய்தான்.

    அம்பலத்தில் உறைபவன், நிகழ்ந்த அற்புதத்தை அம்பலப்படுத்த நினைத்தான் போலும். பார்வதியும் சிவனும் காட்சியை விட்டு மறைந்தார்கள்.

    நீராடி முடித்துவிட்டுக் கரையேறி வந்தார் தந்தை. குளப்படிக்கட்டில் அமர்ந்திருந்த குழந்தையின் உதட்டோரம் பாலிருக்கக் கண்டு வியந்தார். உண்மையிலேயே குழந்தைக்கு அப்போது பால்வடியும் முகம்தான்!

    உதட்டில் உள்ள பாலைப் பற்றிக் குழந்தையிடம் அதட்டி வினவினார்.

    குழந்தை ஆள்காட்டி விரலால் கோபுரத்தைச் சுட்டிக் காட்டியது. பாலைப் புகட்டியவள் பார்வதி தேவிதான் என்பதைச் சைகையாலேயே புலப்படுத்தியது.

    அதுமட்டுமல்ல, மூன்று வயதேயான அந்த தெய்வீகக் குழந்தையின் உதடுகளில் இருந்து தமிழ்ப் பாடல் ஊற்றெடுத்துப் பெருகத் தொடங்கியது.

    அன்னை பார்வதியின் அருட்கடாட்சம் தமிழ்ப் பாடலாய்ப் பொங்கி வெளிப்பட்டது. ஞானசம்பந்தரின் முதல் பாடல் அப்போது அவர் அருளியதுதான்.

    'தோடுடைய செவியன் விடை யேறியோர்

    தூவெண் மதிசூடி

    காடுடைய சுடலைப் பொடிபூசி என்

    உள்ளம் கவர் கள்வன்

    ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்து

    ஏத்த அருள்செய்த

    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்

    இவன் அன்றே'

    சீர்காழி அவ்விதம் திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலமாயிற்று.

    மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி ஒருமுறை ஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு அனுப்பினாள். திருவாதவூரில் இருந்த ஞான சம்பந்தர் அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட்டார்.

    ஆனால் அந்த நாள் பயணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்த நல்ல நாள் அல்ல. எனவே பயணம் மேற்கொள்ள வேண்டாமென நாவுக்கரசர் ஞான சம்பந்தரைத் தடுத்தார்.

    கலகலவென நகைத்த ஞான சம்பந்தர் இறைவன் அடியார்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான் என்று கூறி அதை மெய்ப்பிக்கும் விதமாய்ப் பத்துப் பாடல்களையும் பாடி அருளினார்.

    பாடல்களின் இறுதியில் அந்தப் பாடல்களைப் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் அகலும் என்றும் அதைப் பாராயணம் செய்யும் அடியவர்கள் வானில் அரசாள்வர் இது தமது ஆணை என்றும் பலச்ருதியாகவும் ஒரு பாடல் எழுதினார்.

    இந்தப் பாடல்களின் தொகுப்பே கோளறு பதிகம்.

    கிரக நிலையால் நாள் சரியில்லை என்று தோன்றினால் அப்போது கோளறு பதிகத்தைப் பாடி எந்தப் பாதிப்பும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.

    முழுப் பாடலையும் பாராயணம் செய்ய இயலவில்லை என்றால் முதல் பாடலை வாசித்தாலும் போதுமானது. அந்த முதல் பாடல் இதோ:

    'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிக நல்ல வீணை தடவி

    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்

    வியாழன் வெள்ளி

    சனிபாம்பிரண்டு முடனே

    ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியாரவர்க்கு மிகவே!'

    கோள்களின் இயக்கம் நம் வாழ்வை பாதிக்கிறது. வாழ்வைக் கணிக்கும் ஜோதிடக் கலை, கோள்களை ஆதாரமாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டுள்ளது. கோள்கள் நன்மையும் செய்யும். தீமையும் செய்யும்.

    கோள்களால் ஏற்படக் கூடிய தீமையைத் தடுக்க வல்லது கோளறு பதிகம். காலம் காலமாக அன்பர்களால் ஓதப்படும் கோளறு பதிகத்தை நாமும் ஓதி நலம் பெறலாம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.comகோளறு பதிகமும் ஞான சம்பந்தரும்...

    Next Story
    ×