search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தடைகளை அகற்றும் விடைகள்!
    X

    தடைகளை அகற்றும் விடைகள்!

    • மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும். இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.
    • 2021-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளசி கவுடாவும் ஒருவர்.

    தடைகள் உண்டு எனில் அவற்றை அகற்றும் விடைகளும் உண்டு!

    நவீன உலகில் அன்றாடம் பிரச்சினைகளைச் சந்திக்காதவரே இல்லை. இன்னும் உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலோ சொல்லவே வேண்டாம். அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

    ஆனால் விதி என்று இவற்றைச் சொல்லி அனுபவித்துத் துன்பப்படுவதை விட இதை மாற்றும் வழி உண்டா? உண்டு என்று நிரூபித்திருப்போர் ஏராளம். அவர்களில் சிலர் இதோ!

    அபூர்வப் பெண்மணி ஹெலன் கெல்லர்

    ஹெலன் கெல்லர்: ஒரு அபூர்வப் பெண்மணி (தோற்றம் ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

    மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும். இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.

    19 மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.

    ஹெலனின் தாயார் அவரை மசாசூசெட்சில் (அமெரிக்கா) பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு ஆன்னி சல்லிவன் என்ற கண் பார்வை இழந்த ஒரு ஆசிரியை அவருக்கு ஒவ்வொரு பொருளையும் தடவிப் பார்க்கச் சொல்லி அதன் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    பல வருட கால கடுமையான உழைப்பிற்குப் பின்னர் ஆங்கிலத்தை முழுவதுமாகக் கற்றதோடு, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், கண் பார்வையற்றோருக்கான பியிலி ஆகிய மொழிகளில் அவர் தேர்ந்தார்.

    1904-ம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து முதலில் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

    எனது வாழ்க்கை சரிதம் என்ற மனதை உருக்கும் ஒரு புத்தகத்தை எழுதியதோடு மொத்தம் 14 புத்தகங்களை அவர் எழுதினார்.

    30 நாடுகளுக்குப் பயணம் செய்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்; பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.

    87-ம் வயதில் அவர் மறைந்தார். 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி பி.லிண்டன் ஜான்சன் அவருக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    நெஞ்சம் தளராது உற்சாகத்தோடு தனது அனைத்துக் குறைகளையும் புறம் தள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை அவர்.

    சரி, இவர் போலல்லாது கண் பார்வையும் செவிப் புலனையும் தக்க ஆதரவையும் கொண்டுள்ள ஆயிரக் கணக்கானோர் எப்படி எல்லாம் முன்னேறலாம்?!.

    தன் தடைகளை அகற்றி அவற்றைப் போக்கப் பல விடைகளைத் தந்தவர் ஹெலன் கெல்லர் என்பதே உண்மை!

    மலைகளை நகர்த்திய மா மனிதன்!

    மனித மனத்தில் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று உறுதியாகிவிட்ட பட்சத்தில் முடியாதது ஒன்றும் இல்லை.

    இதற்கு உதாரணம் தசரத் மஞ்சி (Dasjrath Manjhi). (தோற்றம் 14-1-1929 மறைவு 17-8-2007)பீகார் மாநிலத்தில் கயாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஜெஹ்லௌர்.

    அதில் வாழ்ந்தவர் தசரத் மஞ்சி. ஒரு துயரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் 1959-ல் நிகழ்ந்தது. அவரது மனைவி பல்குனி தேவி மலையில் இருந்து கீழே விழ பலத்த காயம் பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த மலைப் பகுதியில் சாலையே இல்லை. அவர் இறந்து போனார். அப்போது மனதிற்குள் ஒரு உறுதியை எடுத்தார் தசரத். இந்த மலையை வெட்டி ஒரு சாலை அமைப்பது என்ற முடிவு தான் அது. அவரிடம் மூன்று ஆடுகள் தாம் இருந்தது. அதை விற்று ஒரு சுத்தியலையும் உளியையும் வாங்கினார். வேலையை ஆரம்பித்தார்.

    மலையை வெட்டி ஒரு ரோடு போடுவது தான் அவரது கனவு. 22 வருடங்கள் இடைவிடாது உழைத்தார் - தனி ஆளாக! 1960-ல் அவர் ஆரம்பித்த பாதை 1982-ல் முடிந்தது.

    ஆரம்பத்தில் பைத்தியக்காரன் என்று அவரை எள்ளி நகையாடிய அனைவரும் அவரது உறுதியைப் பார்த்து வியந்தனர்.

    அவர் இருந்த இடத்திலிருந்து ஆச்பத்திரி 55 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அயராமல் உழைத்து 110 மீட்டர் நீளமும் 9.1 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சாலையை அவரே அமைத்து முடித்தார். மலையின் சரிவில் பக்கவாட்டில் அவர் இந்த சாலையை அமைத்து முடித்தார். இந்த சாலையால் 55 கிலோ மீட்டர் தூரமானது 15 கிலோ மீட்டர் தூரமானது.

    இந்திய அரசு இவரை கவுரவித்து ஒரு தபால்தலையை 26-12-2016இல் வெளியிட்டது. பீஹார் அரசும் அவரைக் கவுரவித்தது.

    2015-ல் மஞ்சி - மலை மனிதர் - Manji – The Mountain Man-என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது.

    இந்த சாலையின் மூலம் அவரது கிராமம் வெளி உலகுடன் இணைக்கப்படவே பள்ளி, ஆஸ்பத்திரி வசதி கிராம மக்களுக்குக் கிடைத்தது; வேலை வாய்ப்புகளும் உருவாயின.

    2007இல் அவர் இறந்த போது பீகார் அரசு அவரது இறுதிச் சடங்கில் அரசு மரியாதைகளைச் செய்து கவுரவித்தது.

    முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு தசரத் மஞ்சி ஒரு சிறந்த உதாரணம்!

    மரங்களின் நாயகி!

    2021-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளசி கவுடாவும் ஒருவர். அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை.

    உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.

    30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்!மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது. காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17-ம் வயதிலேயே இழந்து விதவையானார். பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.

    அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.

    நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம். அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.

    சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர்.

    தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர்.

    மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு 'விருட்ச தேவி' என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.

    மனம் போன போக்கில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கைச் செல்வத்தை மனித குலம் அழிக்க முற்படும் போது அதைத் தடுத்து விழிப்புணர்வை ஊட்டும் துளசிகள் நிறைய பேர் நமது நாட்டிற்குத் தேவை அல்லவா!

    இயற்கையை அழித்தால் வரும் தடைகள் ஏராளம்! அந்தத் தடையைப் போக்கும் விடையாக அமைகிறார் துளசி!

    கல்லூரியில் படிக்க 2500 மைல் நடந்தவர்!

    கயிரா : தோற்றம் : 1942 மறைவு 14-10-2012

    ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நியாசா லேண்டில் மப்லே என்ற கிராமத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் லெக்சன் கயிரா. பிறந்தவுடன் குழந்தையை அதன் தாயார் டிடிமு ஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். ஏனென்றால் குழந்தையை வளர்ப்பதற்குப் போதுமான வசதி அவரிடம் இல்லை. அண்டை அயலார் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை ஆற்றிலிருந்து காப்பாற்றினர். அன்றிலிருந்து அந்தக் குழந்தையின் பெயரில் டிடிமு சேர்ந்து அவர் லெக்சன் டிடிமு கயிரா ஆனார். பள்ளிப் படிப்பை முடித்த லெக்சனுக்குச் சிறந்த கல்லூரியில் படிக்க ஆசை. அவரது பள்ளியில் இருந்த குறிக்கோள் வாசகம் : நான் முயற்சி செய்வேன் - (I will Try)- என்பது.

    தனது தாயாரிடம் சென்று, "அம்மா. நான் அமெரிக்கா சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உனது ஆசியும் அனுமதியும் வேண்டும்" என்றார்.அம்மாவிற்கு அமெரிக்கா என்றால் அது எங்கு இருக்கிறது என்பதே தெரியாது. அவர், " ஆஹா! அதற்கென்ன! தாராளமாகப் போய் வா" என்று ஆசி கூறி அனுமதி தந்த அவர், "எப்போது கிளம்பப் போகிறாய்?" என்றார்.

    அவருக்கு அமெரிக்கா எங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்த கயிரா பரபரப்புடன் "நாளைக்கே" என்றார். மறுநாளே கிளம்பிவிட்டார்.

    கிழக்கு ஆப்பிரிக்காவின் நியாசா லேண்டில் இருந்து கெய்ரோ 3000 மைல் தூரத்தில் இருந்தது. அதை நான்கு நாட்க ளில் அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கயிரா ஐந்து நாட்கள் கழித்து 25 மைல் தூரம் மட்டுமே நடந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

    காட்டு வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் ஆங்காங்கு கிடைத்த வேலைகளைச் செய்து பசியாறி ஒரு வருடம் நடந்து கொண்டே இருந்த கயிரா உகாண்டா நாட்டை வந்தடைந்தார். அங்கு செங்கல் சூளை ஒன்றில் வேலை கிடைத்தது. கம்பாலாவில் அமெரிக்க கல்லூரிகளைப் பற்றிய விவரம் அடங்கிய டைரக்டரி அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது.

    வாஷிங்டனில் உள்ள மவுண்ட் வெர்னானில் உள்ள ச்காகிட் கல்லூரியில் ச்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்தார். மூன்று வாரங்களில் கல்லூரியில் இடம் தருவதாகவும் கூடவே ஒரு வேலையும் தருவதாகவும் பதில் வந்தது.

    திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் கயிரா. அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஏழ்மை நிலையையும் கேட்டு பரிதாபப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி கல்லூரி நிர்வாகத்திற்கு அவரைப் பற்றி விளக்கமாக கடிதமொன்றை அனுப்பினார்.

    உடனே அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் நிதி திரட்ட ஒரு சிறப்பு உதவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 1700 டாலர் சேர்த்து அவருக்கு அனுப்பினர். ஒரு வழியாக நடையாய் நடந்து அவர் ச்காகிட் கல்லூரியை அடைந்த போது அவருக்கு அங்கு ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. "உனக்கு என்ன ஆசை?" என்று கேட்ட போது எனது நாட்டிற்குப் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றார்.

    அனைவரும் நகைத்தனர். கயிரா சொல்லக் கூடாத எதையேனும் சொல்லி விட்டோமோ என்று திகைத்தார். அங்கு படித்தார்; தேர்ந்தார். 'தி லூமிங் ஷேடோ' என்ற நாவலை எழுதினார். இங்கிலாந்தை தனது வசிப்பிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜில் பேராசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.

    தனது வாழ்க்கை வரலாற்றை 'ஐ வில் டிரை' என்ற தலைப்பிட்டு ஒரு நூலாக எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது. அவர் பெயரில் அவரது நாட்டில் ஒரு பள்ளியும் சிம்பம்பா என்ற கிராமத்தில் துவக்கப்பட்டது. 2016-ல் அவரது அச்தி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    வாழ்க்கையே தடைக் கல்லாக இருந்தாலும் அதைப் படிக்கட்டுக் கல்லாக மாற்றிய கயிராவின் லட்சிய வாசகம் - நான் முயற்சி செய்வேன் என்பது தான்!

    இடும்பைக்கு இடும்பை படுப்பர்

    தங்களுக்குத் துன்பம் அளிக்க வந்த தடைகளை எல்லாம் எதிர்கொண்டு துன்பம் கண்டு பயப்படாதிருத்தல், மனம் தளராமை, உற்சாகம், குறிக்கோளை அடைய இடைவிடா உழைப்பு உள்ளிட்டவற்றை தங்களது விடைகளாக அளித்த இவர்கள் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×