search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்வமும் சக்தி மயம்: வாராகியின் போரும் - காளியின் ஆட்டமும்
    X

    சர்வமும் சக்தி மயம்: வாராகியின் போரும் - காளியின் ஆட்டமும்

    • அம்பிகையின் வித்தியாசமான வடிவங்களில், வாராகி வடிவமும் ஒன்று.
    • திருநாமங்களைக் கூறி வழிபட்டால் போதும், வாராகி தேவி, வேண்டியதையெல்லாம் அருள்வாள்.

    அம்பிகையின் வித்தியாசமான வடிவங்களில், வாராகி வடிவமும் ஒன்று. பன்றி முகம் கொண்டவள். தீமைகளை அழிப்பவள். வேண்டுதல்களை நிறைவேற்றுபவள். பகைமைகளை நீக்குபவள். ஆன்மிகச் சாதகர்களைப் பாதுகாப்பவள். – இவற்றோடுகூட, தவறு செய்தால் தண்டிக்கும் தண்டநாதா!

    பன்றி முகத்தோடு ஒரு பெருமாட்டியா! இப்படித்தான் வாராகியைப் பற்றிய முதல் சிந்தனை தோன்றும். இவளுடைய பெருமைகளைக் காண்பதற்கு முன்னர், இவளின் பல்வேறு திருநாமங்களைக் காண்போமா?

    சேன நாதா –- சேனைகளுக்குத் தலைவி;

    தண்டநாதா, தண்டினீ –- தண்டம் (கோல்) கையிலேந்தி இருப்பவள். தண்டனைகளைத் தருபவள்;

    பஞ்சமீ –- சப்த மாதர்கள் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவள்.

    கைவல்ய ரூபிணி -– கைவல்ய பதம் நல்குபவள்.

    கிரியா தேவி –- செயல்களின் தலைவி.செயல்களுக்கு ஊக்கம் தருபவள்.

    வார்த்தாளி –- நீதி தேவதை. அளி என்றால் அனுக்கிரகம். ஒறுத்து அளி என்னும் தொடர், வார்த்தாளி என்னும் பெயருக்கு வழிகோலியது என்பதே பல மகான்களின் கருத்து. அதாவது, ஒறுத்துக் (தண்டித்துக்) காப்பவள்.

    ஆக்ஞா சக்ரேச்வரி –- நம்முடைய உடலில் ஆறு ஆதாரச் சக்கரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.இவற்றில், புருவங்கள் இரண்டுக்கும் (ப்ரூ மத்யே) நடுவில், உள்ளாக இருப்பது ஆக்ஞா சக்கரம்ந்த ஆக்ஞா சக்கரத்தில் வீற்றிருப்பவள்.

    பலி தேவதா –- படையலாகப் படைக்கப்படும் யாவற்றையும் ஏற்பவள்.

    அரிக்னீ- – பகைவர்களை, பகைமையை வெல்பவள்.

    வீரநாரீ- – வீரத்துடன் படை நடத்தி வெற்றி கொள்பவள்.

    விச்வ விஜயா –- அகிலம் முழுவதையும் வெற்றி கொள்பவள்.

    பத்ர கவுமுதி – -நன்மைகளைப் பிரகாசிக்கச் செய்பவள்.

    இந்தத் திருநாமங்களைக் கூறி வழிபட்டால் போதும், வாராகி தேவி, வேண்டியதையெல்லாம் அருள்வாள்.

    இவளுடைய பெயர்களையும், இப்பெயர்கள் விளக்குகிற தன்மைகளையும் காணும்போது, ஒன்று புரியும். சேனைகளை, படைகளை வழிநடத்தி, இப்படைகளின் வழியாகப் பகைமைகளை அம்பிகை வெல்கிறாள். இந்த இடத்தில் ஒரு சந்தேகம். தீமைகளையும் பகைமைகளையும் அழிப்பதற்கு அம்பிகைக்குப் பெரிய சைனியமெல்லாம் தேவையா? அம்பிகை நினைத்தால், ஒற்றை அசைவில், ஒரு கூங்காரத்தில், ஒரேயொரு கண்ணசைவில், ஓங்கிய விரல் நுனியில் தீமைகளை அழிக்கமுடியாதா? சர்வ வல்லமை கொண்ட அம்பாளுக்கு இதுவும், எதுவும் சாத்தியம்தானே? அப்படியானால், எதற்காக சேனை? எதற்காகப் படைபலம்?

    படைகளை அம்பாள் நடத்துகிறாள் என்பதற்கான பொருள் இதுதான்: தீமைகளும் வக்கிரங்களும் நம்மைச் சூழும்போது, அவற்றை நாம் எதிர்கொள்ளும் வகையில், அம்பிகை நம்முடைய படைத்தலைவியாக இருக்கிறாள். அதர்மத்திற்கு எதிராக நாம் நடத்தும் யுத்தத்தில், தர்மத்தின் அருகில் நாம் நின்றால், நமக்கான ஆயுதங்களையும் பலத்தையும் வழங்கி, தானே அவற்றைப் பிரயோகமும் செய்து, நம்மை வெற்றிபெறச் செய்கிறாள். ஊக்கம், உற்சாகம், நியாயம், செருக்கின்மை, அமைதி, பணிவு, துணிவு, நடுவுநிலைமை போன்றவையே இவள் நமக்குத் தரும் ஆயுதங்கள்.

    மகாவாராகியாகக் காட்சி தரும்போது, பன்றியின் முகமும் பெண்ணின் உடலும் கொண்டு காட்சி அளிக்கிறாள். ஒரு காலை மடக்கிக்கொண்டும், ஒரு காலைத் தொங்கவிட்டும், தாமரை மலர்மீது அமர்ந்திருக்கிறாள். பெரிய ரத்தின மாலையை அணிந்திருக்கிறாள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டிருக்கிறாள். வலது கரங்களில், சக்கரம், கலப்பை, அங்குசம், அபய முத்திரை ஆகியவற்றையும் இடது கரங்களில், சங்கு, உலக்கை, பாசக்கயிறு, வர முத்திரை ஆகியவற்றையும் தாங்கியிருக்கிறாள். மஞ்சள் வண்ண ஆடையை அணிந்திருக்கும் இவளுடைய மேனி கருநிறமானது.

    அந்தகாசுரன் என்றொரு அரக்கன். உலகமெல்லாம் இருளாகச் செய்த இவன், தேவர்களையும் பிறரையும் படாத பாடுபடுத்தினான். முனிவர்களுக்கும் பெண்களுக்கும் பெருந்துன்பம் இழைத்தான். இவனிடமிருந்து உலகையும் தர்மத்தையும் காப்பாற்றும்படி அனைவரும் சிவபெருமானை வேண்டிக்கொண்டனர். அரக்கனை அழிப்பதற்காகச் சிவபெருமான் புறப்பட்டபோது, வாராகியைப் படை நடத்த ஆணையிட்டார். சிவபெருமானுக்கு வெற்றியைத் தேடித் தந்தவள் வாராகி.

    பூமியில் உயிர்கள் பிறப்பெடுக்கும்போது, உடல்கூட்டுக்குள் உயிர் புகுந்துகொள்கிறது. உடலின் திறமைகளையும் ஆற்றல்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றை முறையாக வழிநடத்தி, பின்னர் மனத்தை ஆத்மவிசாரத்தில் ஈடுபடுத்தி, சித்தத்தைத் தூய நிலையில் பாதுகாத்து, ஆன்ம ஞானத்திற்கு வாராகியே வழிகாட்டுகிறாள். இவளுடைய தேருக்கு கிரிசக்கர ரதம் என்றே பெயர். கிரி என்றால் பன்றி. வாராகியின் தேரும் பன்றி முகப்பு கொண்டதாக அமையும். இந்தத் தேருக்கு ஐந்து தளங்கள். பூவுலக வாழ்க்கை என்பதில், உடல் என்பது பஞ்சபூதச் சேர்க்கையால் ஆனதுதானே! இந்தத் தகவலை நினைவூட்டுவதற்காகவே வாராகியின் தேருக்கு ஐந்து தளங்கள். பஞ்சபூத உடலைச் சரியான பாதையிலும் சரியான வழியிலும் ஆற்றுப்படுத்துபவள் இவளே ஆவாள்.

    சில சமயங்களில், பூமிப் பந்தைத் தன்னுடைய மூக்கு நுனியில் ஏந்தியிருப்பவளாகவும் இவள் சித்தரிக்கப்படுவாள். உலகில் இருந்து உயிர்களை உயர்த்துகிறாள். வேண்டாதவற்றில் மூழ்கியிருக்கும் நம்மை, ஆழத்திலிருந்து தூக்கி மேலேற்றிக் கடைத்தேற்றுகிறாள்.வாராகியைப் போலவே கருநிறத் திருமேனி படைத்த மற்றொரு அம்பிகை வடிவம், காளி!

    காலம் என்னும் தத்துவத்தின் தேவதையே காளி. காலம் என்பது எல்லாவற்றையும் அழிக்கவல்லது. இயற்கை, செயற்கை, பெரியது, சிறியது, வலியது, மெலியது என எதுவாக இருந்தாலும், காலப்போக்கில் அழிந்துவிடும். அல்லது மாறிவிடும். இதைக் காட்டும் விதத்தில், காலத்தின் மாற்றங்களை நடைமுறைப்படுத்துபவளாகக் காளிதேவியும் கருநிறத்தில் காட்சி தருகிறாள். ஒன்று அழிந்தால், அதிலிருந்து இன்னொன்று தோன்றும். இதுவே, கால சுழற்சி. காளிதேவியான இவள் அழித்தால் மட்டுமே, பழமையை மாற்றும் புதுமைகள் தோன்றமுடியும். எனவே, இவள் அழிக்கிறாள். உலகையே மயானமாக்கி ஆடிக்கொண்டே அழிக்கிறாள்.

    காளிதேவியின் வடிவம், பல நேரங்களில் நமக்கு அச்சத்தைத் தீரும். கைகளையே ஆடையாகப் போர்த்திக்கொண்டு, கூரிய நகங்களோடும், ஏளனப் புன்னகையோடும், பறக்கும் கூந்தலோடும், சிவந்த கண்கள், தொங்கும் நா, கபால மாலை என்று அச்சத்தை அதிகப்படுத்தும் அம்சங்களோடும் காட்சி தருவாள். அழகானவற்றை எல்லாம் கடவுள் என்று குதூகலிக்கிற வழக்கம் மனிதர்களிடம் உண்டு. அப்படியானால், அருவறுப்பும் அழகின்மையும் யார்? அவற்றில் கடவுள் இல்லையா? கடவுள்தன்மைதான் இல்லையா? இந்த வினாக்களுக்கான விடைதான் காளிதேவி! அழகின்மையிலும் இறைமை உண்டு என்பதைக் காட்டுவதற்காக அம்பிகையே அருவறுப்பும் அச்சமும் தருகிற வடிவத்தை ஏற்றுக்கொள்கிறாள்.

    சில நேரங்களில், சிவபெருமான்மீது ஏறி இவள் ஆடுவதுபோல் திருவுருவப் படங்களோ சிற்பங்களோ அமைந்திருக்கும். ஐயன்மீது அம்பிகை ஆடுவதா? இதென்ன விந்தை!

    இதற்கொரு கதையும் காரணமும் உண்டு. ஒருமுறை, அரக்கர்களையெல்லாம் அழித்துவிட்டு, அந்த ஆனந்தத்தில் காளிதேவி ஆட ஆரம்பித்தாள். ஆட்டமோ ஆட்டம் – ஆனந்தக் களிப்பின் ஆட்டம். இவள் ஆடிய வேகத்தில், அண்டமும் பகிரண்டமும் காலமும் வேகமும் எல்லாமும் ஆடின. அனைத்தும் ஆடின. அனைவரும் ஆடினர். ஆடிய ஆட்டத்தின் வேகமும் வீரமும் தாளமாட்டாமல், தேவர்களும் முனிவர்களும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அன்னையின் ஆட்டம் – அடங்குவதற்காக அப்பனை நாடினர். அவரும் வந்தார். அன்னையிடம் கூற முயன்றார். ஆட்டத்தின் வேகத்தில் காளியின் செவிகளில் எதுவும் விழவில்லை.

    ஐயனும் நின்று நின்று பார்த்தார். கடைசியில் யுக்தி ஒன்றைக் கண்டுபிடித்தார். என்னதான் வேகமானவள் என்றாலும், இவளின் அன்பும் பணிவும் அவருக்குத்தானே தெரியும்! இவளோ அரக்கச் சடலங்களின்மீது ஆடிக்கொண்டிருந்தாள். அந்தச் சடலங்களுக்கிடையில் தாமும் போய் ஐயன் படுத்துக் கொண்டார். ஆடிக்கொண்டே வந்தவள், ஐயன் என்பதை அறியாமல், அவர்மீதும் ஏறி ஆடத் தொடங்கினார். ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு எதையோ உணர்த்த, தன்னுடைய நிலையை திடீரென்று உணர்ந்தாள். நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு நாணத்தில் நின்றாள்.

    இதென்ன நாடகம் என்கிறீர்களா? இருட்டையும் கொடுத்து, அதிலிருந்து நாம் மீள்வதற்காக ஒளியையும் கொடுக்கிற பரம்பொருள், இப்படியெல்லாம் அன்னையும் பிதாவுமாக நாடகம் நடத்தி, நம்மைப் பணிகொள்கிறது.

    கைகளையே ஆடையாகக் கொண்டு காளிதேவி காட்சி தருவதற்குப் பின்னாலும், ஆழ்ந்த பொருள் உண்டு. இவள், உழைப்புக்குக் கட்டுப்பட்டவள். உழைப்பின் அடையாளமே, கரங்கள்! கரங்களின் ஆற்றல்தான் 'கிருத்யம்'; செய்(கை)யின் ஆற்றல்தான் 'செயல்'. ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தினால் சாதனை. தவறாக வீணடித்தால் சோதனை. இதைத்தான், தன்னுடைய வடிவின் வழியாகவே அம்பிகை வெளிப்படுத்துகிறாள்.

    திருமால் கிருஷ்ண அவதாரம் எடுத்தாரில்லையா? அப்போது, ஆற்றல் வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தித்தார். தன்னுடைய ஆற்றலைக் காளிசக்தி அப்படியே கொடுத்தாள். ஆகவேதான், குழந்தையாக விளையாடிய நிலையிலும், பல்வேறு அரக்கர்களை அழித்து விளையாடினார். காளிக்குக் கருப்பி (கருமையானவள்) என்றொரு பெயர் உண்டு; அதையே தாமும் சுவீகரித்துக் கொண்ட கண்ணன், கிருஷ்ணன் (கிருஷ்ண – கறுப்பு, கருப்பன்) ஆனார்.

    பரம்பொருள் எல்லா இடத்திலும் இருக்கிறது. எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறது. ஆனாலும் நம்முடைய கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஏன்? அறியாமை, மதர்ப்பு, குதர்க்கம், ஆணவம் போன்ற திரைகள் நம்முடைய கண்களை மறைப்பதால், இறைமையின் இருப்பை நம்மால் உணரமுடிவதில்லை. திரைகளைக் களைந்துவிட்டால், இறைமை என்னும் சத்தியம் புலப்பட்டுவிடும். இதை உணர்த்துவதற்காகவே, காளிதேவியும் திரைகள் இன்றி, ஆடை என்னும் மறைப்பு இன்றி காட்சி தருகிறாள். அஞ்ஞானத் திரையை அகற்றிவிட்டால், ஞானத்தின் பேரொளிப் பிரகாசம் புலப்பட்டுவிடும்.

    வாராகி படை நடத்துகிறாள். காளிதேவி ஆடுகிறாள் – அம்பிகையின் போரும் யுத்தமும், ஆட்டமும் பாட்டமும் அனைத்துமே நமக்காக!

    தொடர்புக்கு - sesh2525@gmail.com

    Next Story
    ×