search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சென்னை சித்தர்கள்: காகபுஜண்டர்-கொரட்டூர்
    X

    காகபுஜண்டர் தியான மண்டபம்


    சென்னை சித்தர்கள்: காகபுஜண்டர்-கொரட்டூர்

    • காகபுஜண்டர் அருள்பாலிக்கும் மற்றொரு ஆலயம் கொரட்டூரில் அமைந்துள்ளது.
    • கொல்லி மலை, பொதிகைமலை, சதுரகிரிமலை, வெள்ளியங்கிரிமலை உள்பட பல மலைகளில் அவர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    சென்னையில் உள்ள சித்தர்கள் ஜீவ சமாதிகளில் மிக மிக பழமையான ஜீவ சமாதி எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு காக புஜண்டரின் ஜீவ சமாதி என்று சொல்லி விடலாம். தமிழ்நாடு முழுவதும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் காக புஜண்டர் ஜீவ சமாதி அடைந்திருப்பதாக குறிப்புகள் உள்ளன.

    கொள்ளிடம் ஆச்சாள்புரம், சிதம்பரம் ஆலப்பாக்கம், காஞ்சிபுரம் சோதியம்பாக்கம், சின்ன சேலம் தென்பொன்பரப்பி, நாகை ஸ்ரீ பால்மொழி, ராஜபாளையம் திருவழுக்கு பாறை, திருப்பரங்குன்றம் மலை, கொல்லி மலை, உத்தரகோச–மங்கை, திருமலை ராயன்பட்டினம், வைரவன்பட்டி, வெள்ளியங்கிரி மலை, சீர்காழி உள்பட பல இடங்களில் காக புஜண்டர் ஐக்கியமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    சித்தர்கள் பல யுகங்களாக வாழ்ந்தவர்கள். சில சித்தர்கள் யுகங்களையும் கடந்து வாழ்ந்துள்ளனர். ஆனால் காகபுஜண்டர் சித்தர் பிரளயங்களையும் கடந்து வாழ்ந்தவர். அவர் 7 லட்சம் பிரளயங்களை கண்டவர் என்று சித்தர்கள் ஆய்வு நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் பல யுகங்கள் வாழ்ந்ததாக ஞானவாசிஷ்டம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்த ஒரே சித்தர் இவர்தான். இதனால் இவரை மகான்களுக்கு எல்லாம் மகான் என்று போற்றுகிறார்கள்.

    இந்த உலகம் ஒவ்வொரு தடவையும் அழியும்போது இவருக்கு மட்டும் மரணம் என்பதே ஏற்பட்டது இல்லை. மரணம் இல்லா பெரு வாழ்வு வாழ்பவர் என்ற சிறப்பு சித்தர்களில் இவருக்கு மட்டுமே உண்டு.

    இவரது பிறப்பு பற்றி எந்த உறுதியான குறிப்புகளும் இல்லை. இரண்டு விதமாக இவரது பிறப்பை சொல்கிறார்கள்.

    ஒரு தடவை இரண்டு அன்னங்கள் சிவபெருமான் முன்பு கலந்து இருந்தபோது அதை சிவபெருமான் பார்த்தார். இதன் காரணமாக அந்த அன்னம் 21 முட்டையிட்டது. அதிலிருந்து 20 அன்னங்கள் தோன்றின. ஒரே ஒரு முட்டையில் இருந்து காகமாக காகபுஜண்டர் தோன்றினார் என்று ஒரு வரலாறு உள்ளது. அந்த தோற்றம் சிவகலை தோற்றம் என்று கூறப்படுகிறது.

    சிவகலையில் பிறந்தவர்களுக்கு அழிவு என்பதே கிடையாது. அந்த கருத்தின் அடிப்படையில்தான் காகபுஜண்டர் பல பிரளயங்களுக்கு பிறகு இப்போதும் வாழ்ந்து வருவதாக சுகபிரம்ம ரிஷி தனது நூலில் எழுதி உள்ளார்.

    இதன் அடிப்படையில் பார்த்தால் சிவன்- பார்வதியின் மொத்த ஒருங்கிணைந்த அம்சமாக இவர் திகழ்வது தெரிய வரும்.

    ஆனால் விதவை ஒருவருக்கு காக புஜண்டர் மகனாக பிறந்தார் என்றும் ஒரு வரலாறு உள்ளது. இந்த இரு வரலாறுகளையும் சித்தர் ஆய்வாளர்கள் மாறி மாறி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    காகபுஜண்டர் கன்னிராசி உத்திரம் நட்சத்திரத்தில் 2-ம் பாதத்தில் பிறந்தார் என்று போகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். வசிஷ்டர், வியாசர், போகர் ஆகியோருக்கு உபதேசம் செய்தது காகபுஜண்டர்தான்.

    இவர் மனித வடிவிலும், காகம் வடிவிலும் மாறி மாறி வாழ்ந்தவர். பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்போது இவர்மட்டும் காகம் உருவம் எடுத்து தப்பி விடுவார். அதனால் தான் இவருக்கு காகபுஜண்டர் என்ற பெயரே உருவானது.

    காகம் உருவத்தில் தப்பி செல்லும் இவர் அவிட்டம் நட்சத்திரமாக மாறி விடுவார். இதனால் பிரபஞ்சத்தில் அழிவே இல்லாமல் வானில் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டே இருப்பார்.

    உலகம் மீண்டும் தோன்றும்போது மீண்டும் மகரிஷியாக மாறி பூமிக்கு வந்து விடுவார். இப்படிதான் அவர் யுகம் யுகமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

    கொல்லி மலை, பொதிகைமலை, சதுரகிரிமலை, வெள்ளியங்கிரிமலை உள்பட பல மலைகளில் அவர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    ஜோதிடத்தில் இவர் எழுதிய குறிப்புகள்தான் இன்றும் உலக இயக்கத்துக்கு ஆதாரமாக உள்ளன. காகபுஜண்டர் நாடி என்பதுதான் நாடி ஜோதிடத்தில் முதன்மையானது.

    எனவேதான் இவரை வழிபட்டால் எந்த கிரக தோஷமும் ஏற்படாது என்பார்கள். காகபுஜண்டர் உபநிடதம், காகபுஜண்டர் காவியம், காகபுஜண்டர் ஞானம் உள்பட அவரது 8 நூல்கள் மிக மிக அபரிமிதமான பலன்களை தரக்கூடியவை.

    இவரது நூல் மூலம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஒருவரால் கண்டுபிடித்து விட முடியும். அதுபோல எதிர்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பற்றியும் காகபுஜண்டர் நிறைய எழுதி வைத்துள்ளார்.

    இத்தகைய சிறப்புடைய காகபுஜண்டர் சென்னையில் 2 இடங்களில் தொடர்புடைய வராக இருக்கிறார். வடசென்னையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள சித்தர் பீடத்தில் காகபுஜண்டர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். காக புஜண்டரின் சீடர்களில் ஒருவராக ரோமரிஷி முனிவர் கருதப்படுகிறார். இந்த ரோமரிஷி முனிவரின் சன்னதியும் காகபுஜண்டர் சன்னதி அருகில் இருக்கிறது.

    இதன் மூலம் திருவொற்றியூரில் காகபுஜண்டரும், அவரது சீடர் ரோமரிஷி முனிவரும் சேர்ந்து வாழ்ந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த சித்தர் பீடத்தில் கருவறை உள்ளே வரை சென்று வழிபட அனுமதி கொடுக்கிறார்கள். ரோமரிஷி முனிவரை தொட்டு வழிபடவும் அனுமதி தருகிறார்கள். இதனால் திருவொற்றியூர் எல்லையம்மன் தெருவில் உள்ள சித்தர் பீடத்தில் காகபுஜண்டரின் அருளை மிக எளிதாக பெற்று வரலாம்.

    காகபுஜண்டர் அருள்பாலிக்கும் மற்றொரு ஆலயம் கொரட்டூரில் அமைந்துள்ளது. பாடியில் உள்ள பிரிட்டாணியா பஸ் நிலையத்தில் இருந்து கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஜம்புகேஸ்வரர் நகரில் ஜம்புகேஸ்வரர் என்ற பெயரில் மிக மிக பழமையான சிறிய சிவாலயம் அமைந்திருப்பதை காணலாம். இந்த சிவாலயம் பாடி திருவல்லீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்ட காலத்தில் உருவான ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தின் கருவறையில் காகபுஜண்டர் ஜீவசமாதி அடைந்திருப்பதாக குறிப்புகள் உள்ளன. அங்குள்ள ஒரு சிவாச்சாரி யாரும் நம்மிடம் இதை உறுதி படுத்தினார். அந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் அனைத்தும் அங்கு காகபுஜண்டர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக உள்ளன.

    இந்த ஜம்பு கேஸ்வரர் ஆலயம் மற்ற ஆலயங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கட்டமைப்புடன் உள்ளது. இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் கிடையாது. அதுபோல கருவறை மேல் விமானம் இல்லை. சாதாரண அமைப்புடன் உள்ளது. சித்தர்களின் ஜீவ சமாதிதான் இத்தகைய அமைப்பில் இருக்கும். எனவே காகபுஜண்டர் இங்கு இருப்பது இந்த வடிவமைப்பின் மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

    ஆலயக்கருவறை வெளிப்புறச் சுவற்றில் காகபுஜண்டர் சிற்பத்துடன் திறந்தவெளி தியான மண்டபம் இருக்கிறது. ஜம்புகேஸ்வரர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த மண்டபத்திலும் வந்து தவறாமல் வழிபடுகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

    சில பக்தர்கள் காகபுஜண்டரிடம் வேண்டிக்கொண்டு வீட்டில் இருந்து இனிப்பு வகைகளை தயாரித்துக்கொண்டு வந்து அங்கு படைக்கிறார்கள். இது மற்ற ஜீவ சமாதிகளில் இருந்து முழுமையாக மாறுபட்டது போல் உள்ளது. காகபுஜண்டர் இந்த தலத்தில் இருக்கிறார் என்பது 1991-ம் ஆண்டு ஒரு நிகழ்வின் மூலம் உறுதியானது. 22.08.1991 அன்று நடந்த பூஜையின் போது காகபுஜண்டர் ஜோதி வடிவில் தோன்றி காட்சி அளித்தார். சில வினாடிகளில் மறைந்து விட்டார். இதனால் அவரது அருளை பெற அந்த பகுதி மக்கள் நம்பிக்கையுடன் வந்து செல்கிறார்கள்.

    தர்மலிங்கம் என்பவர் இந்த ஆலயத்தில் காகபுஜண்டர் வழிபாட்டை சிறப்பாக தொடங்கி வைத்ததாக தெரிகிறது. பங்குனி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் காகபுஜண்டர் அவதாரம் எடுத்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்துக்கு ஏராளமான சித்தர் ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள்.

    காகபுஜண்டர் ஜோதி வடிவமாக காட்சி கொடுத்த இடத்தில் சிறு சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கும் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

    வியாழக்கிழமைகளில் காகபுஜண்டரை தரிசிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த ஆலயத்தை உரிய முறையில் ஆய்வு செய்தால் காகபுஜண்டர் பற்றிய மேலும் பல ருசிகர தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது குறைவான தகவல்கள் உள்ள போதிலும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து அவரை வழிபட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிவாலயங்கள் உருவாக காகபுஜண்டர் காரணமாக இருந்துள்ளார்.

    காகபுஜண்டருடன் தொடர்புடைய சிவாலயங்களுக்கு சென்று ஆயில்யம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வழிபடலாம். அப்போது வறுத்தகடலை படைத்து வழிபடுவது நல்லது. மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் வழிபட்டால் குரு தோஷம் நீங்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் விலகும்.

    பொதுவாக ஆயில்யம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களது வீடுகளிலேயே காகபுஜண்டரின் போற்றியை சொல்லி வழிபடலாம். இது ஆயில்யம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களின் வீடுகளில் வளம் பெருக செய்யும்.

    "உத்திரத்தில் பிள்ளை பெற்றால் உறியில் சோறு" என்று சொல்வார்கள். உத்திரத்தில் பிறந்தவர்கள் கடைசி காலம் வரை தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று இதற்கு அர்த்தமாகும். அதே போல ஆயில்யம், உத்திரத்தில் பிறந்தவர்கள் காகபுஜண்டரை வழிபட்டால் காலமெல்லாம் அவர் துணை இருப்பார்.

    Next Story
    ×