search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பக்கவாதத்தில் இருந்து மீள்வது எப்படி?
    X

    பக்கவாதத்தில் இருந்து மீள்வது எப்படி?

    • மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டு உள்ளதோ, அதை பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடு ஏற்படும்.
    • ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாடு இல்லாமல் வைப்பது, ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் படிமனாகும் கொழுப்பு.

    மூளைக்கு போகும் ரத்தம் தடைபட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது பக்கவாதம் ஆகும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டு உள்ளதோ, அதை பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடு ஏற்படும்.

    பக்கவாதம் நம்முடைய நடமாட்டத்தை, நினைவாற்றலை, ஏன் பேசும் திறனைக் கூட உடனடியாக முடக்கி வாழ்வினை தலைகீழாக மாற்றும் வல்லமை வாய்ந்தது. நீங்கள் அதிகம் பயப்படும் நோய் என்ன என்று உலகில் பலரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் கூறிய பதிலில் முதலிடம் வகித்தது புற்றுநோய், இரண்டாவது பக்கவாதம் ஆகும். பக்கவாதத்தினால் அன்றாட நிகழ்வுகளான குளிப்பது, சாப்பிடுவது, நடப்பது, நம்மை சுத்தம் செய்து கொள்வது போன்ற அன்றாட செயல்களுக்கும் மற்றவரை சார்ந்திருக்க நேரிடும். பக்கவாதம் ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகம் பாதிக்கப்படுவது வயது மூப்பில் உள்ளவர்கள் தான்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாடு இல்லாமல் வைப்பது, ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் படிமனாகும் கொழுப்பு. இவையே பக்கவாதம் வரக்காரணமாக அமைகின்றன. உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும், அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளைப்பகுதி. சாதாரணமாக மனித மூளை 2.2 கிலோவில் இருந்து 2.3 கிலோ வரை இருக்கும். அந்த மூளையானது பல கோடி நியூரான்கள் எனப்படும் திசுக்களால் ஆன உறுப்பாகும். மனிதன் வானில் பறக்கவும், நீரில் நடக்கவும், மற்ற கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் செயலும் மூளையில் இருந்து தான் உருவாகிறது. மூளையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு செயலை கட்டுப்படுத்துகிறது. சிந்தனைக்கு ஒரு பகுதியென்றால் சிரிப்பதற்கு ஒரு பகுதி, பேசுவதற்கு ஒரு பகுதி, பாடுவதற்கு ஒரு பகுதியென்று ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலையினை திறம்பட செய்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் இயக்கக் கூடியவையாக இருப்பது மூளை.

    இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ஒரே ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு ரத்தம் போகவில்லை என்றால் அந்த சென்டிமீட்டர் அளவுள்ள மூளையின் பகுதி எந்த பணியை செய்கிறதோ, அந்த பணியை நம்மால் செய்ய முடியாமல் முடக்கம் ஏற்படும்.

    உதாரணத்துக்கு வலதுபக்க மூளையில் கை, கால்களை அசைப்பதற்கான வேலையை செய்யக்கூடிய பகுதி உள்ளது. அந்த இடத்துக்கு ரத்தம் போகவில்லை என்றால் இடது பக்கத்தில் இருக்கும் கை, கால் முடங்கி விடும். வலதுபக்கத்தில் இருக்கும் மூளையின் பாகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால் இடதுபக்க கை, கால் செயல் இழக்கும். அவ்வாறு பாதிக்கப்படும் போது நம்மால் கால் ஊன்றி நிற்க முடியாது. கீழே விழுந்து விடுவோம். கையால் சிறு பொருளை கூட தூக்க முடியாது. வாயில் இருந்து வரும் வார்த்தைகள் குளறும். பேச்சு சரியாக வராது.

    மூளையின் நடுப்பகுதியில் மூளை தண்டுவடம் இருக்கும். அங்கு ரத்த ஓட்டம் சரியாக போகவில்லை என்றால் மூச்சு விட சிரமம் ஏற்படும். பின்மூளையில் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் கண் தெரியாமல் போகும். நன்றாக இருப்பார்கள். திடீரென கண் தெரியவில்லை என்பார்கள். கண் டாக்டரை போய் பார்த்தால் கண் நன்றாக இருக்கும். கண் நன்றாக இருந்தாலும் கண்ணில் தெரியக்கூடிய பிம்பங்கள் மூளைக்கு போய் சேரும் போது தான் எதிரில் உள்ளவைகளை நம்மால் பார்க்க முடியும். அந்த சமயம் மூளையில் பாதிப்பு ஏற்படுவதால் பார்க்கும் சக்தியை இழக்கிறோம். கண் இருந்தும் குருடனாகிறோம்.

    அதேபோலத்தான் நாக்கு பிறழாமல் பேச முடியாமல் போகும். உணவை விழுங்க முடியாது. எனவே மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுவதே பக்கவாதம்.

    பக்கவாதம் 3 வகையானது. நன்றாக இருந்தார். திடீரென வெறிக்க, வெறிக்க பார்த்தார். கையில் இருந்த டம்ளரை அப்படியே கீழே போட்டார். கண்ணை மூடி விட்டார். தட்டி எழுப்பினோம். 2 நிமிடம் கழித்து பழைய நிலைக்கு திரும்பி விட்டார் என்பார்கள். ஒரு நிமிடம், 2 நிமிடம் மூளை மற்றும் உறுப்புகள் வேலை செய்யாமல் போய் மீண்டும் பழைய நிலைக்கு வருவது தற்காலிக பக்கவாதம்.

    சிலருக்கு நாக்கு பேச முடியாமல் குளறும். கை, கால் செயல்படாது. டாக்டரிடம் அழைத்துச் செல்வோம். அவர் ஊசி போட்டு சிகிச்சை அளிப்பார். 24 மணி நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். அதற்கு பெயர் இடைநிலை பக்கவாதம்.

    கை, கால் செயல்படாமல் போகும்போது பக்கவாதத்தின் வீரியம் தெரியாமல் சிலர் எண்ணை போட்டு தேய்த்து டாக்டரிடம் செல்வதில் தாமதம் ஏற்படுத்துவார்கள். அப்போது நிரந்தர பக்கவாதம் ஆகி விடும். அந்த பக்கவாதத்தால் கை, கால்கள் நிரந்தரமாக முடங்கிப் போய் விடும்.

    மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஓட்டம் தடைபடுவதால் வருவது ஒரு வகையான பக்கவாதம் (இஸ்கிமிக் ஸ்ட்ரோக்). அதிக ரத்த அழுத்தத்தால் மூளையில் சின்ன ரத்தக்குழாய் உடைந்து போகிறது. அதில் ஒரு மில்லி ரத்தம் வெளியேறுகிறது. ரத்தம் வெளியேறுவதால் அந்த ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்வதில்லை. ரத்தம் செல்வது தடைபடுகிறது. ரத்தக்குழாய் வெடித்து அந்த இடத்தில் ரத்தம் வெளியேறி குறிப்பிட்ட பகுதிசெயலிழந்து போவது மற்றொரு வகையான பக்கவாதம் (ஹெமரேஜிக் ஸ்ட்ரோக்).

    மாரடைப்பு வந்தால் நெஞ்சு அதிகம் வலிக்கும். மூச்சு விட முடியாது. அதனை மாரடைப்பு அறிகுறிகளாக அறிந்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வோம். பக்கவாதம் வருவதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம். இதற்கு BEFAST என்ற பார்முலா ஒன்று உண்டு

    B. பலன் இல்லாமல் நின்றவர் அப்படியே சாய்வார். நிலைதடுமாறும் இந்த நிலையும் ஒரு பக்கவாதம் தான்.

    E- திடீரென கண் தெரியாமல் போவது. இவ்வாறு கண் தெரியாமல் போவது ஒரு வகை பக்கவாதம்.

    F- முகம் கோணலாகி போவது. ஒரு பக்க கண் சுருங்கி விடும். இவ்வாறு முகத்தில் ஏற்படுவதும் ஒரு வித பக்கவாதம்.

    A- கையை மேலே தூக்கினால் கீழே விழுந்து விடும். கைக்கு முழுவதும் பலன் இலலாமல் போய் விடும். கை அல்லது கால் பலவீனமாகி விடும். காலால் நடக்க முடியவில்லை என்றால் கீழே விழுந்து விடுவார்கள்.

    S- வாய் கோணலாகி பேச்சு குளறுதல்.

    T- நேரம் (3 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்)

    குளியல் அறைக்கு செல்லும் போது தானாகவே தடுமாறி கீழே விழுந்தாலோ, நடக்கும் போது கீழே விழுந்தாலோ, கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தாலோ, பேச்சு குளறினாலோ, முகம் கோணல் ஆனாலோ பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளாக கருதிக் கொள்ளலாம். இப்படி உடல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். எண்ணை போட்டு நீவி விடவோ, நாமே மாத்திரை வாங்கி சாப்பிடவோ கூடாது. உங்களுக்கு வந்தது ஆபத்தான நோய். எனவே நேரத்தை வீணடிக்கக் கூடாது.

    முதலில் பக்கத்தில் உள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது நரம்பு, மூளை மற்றும் இதயவியல் நிபுணர்களை கொண்டு செயல்படும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், இன்டர்பெல்ஸி ரேடியாலஜி போன்ற நவீன எந்திரங்களை கொண்ட ஆஸ்பத்திரிகளாக இருக்க வேண்டும். இந்த நவீன வசதிகள் எல்லாம் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட ஆஸ்பத்திரிகள், தாலுகா ஆஸ்பத்திரிகளில் கூட வந்து விட்டது.

    பக்கவாத அறிகுறிகள் தென்பட்டவுடன் குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக மருந்து செலுத்த வேண்டும். 3 மணி நேரத்துக்குள் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் முடங்கிய கை செயல்படத் தொடங்கும். வாய் குளறியதால் நின்ற பேச்சை மீண்டும் பேச முடியும். மொத்தத்தில் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இவ்வாறு சரியான நேரத்துக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளில் 90 சதவீதம் பேர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    ஆஸ்பத்திரிக்கு வர 4 மணி நேரம் ஆகிவிட்டால் மற்றொரு சிகிச்சை அளிப்போம். கை வழியாக சிறுகுழாய் செலுத்தி மூளையில் உறைந்து போன ரத்த கட்டியை உறிஞ்சி எடுப்போம். அதற்கு பெயர் இன்டர்வென்ஸ்னல் ரேடியாலஜி. இந்த முறையிலும் பலர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். 6 மணி நேரம், 7 மணி நேரம் தாமதம் ஆகி வந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. காலை 3 மணிக்கு விழுந்தவரை 7 மணி நேரம் கழித்து 10 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அது நிரந்தர பக்கவாதமாகி விடும். மூளை என்பது மென்மையான உறுப்பு. மூளைக்கு ரத்தம் போகவில்லை என்றால் ஒரு மணி நேரம் கூட தாங்காது. கெட்டியாக இருக்கும் மூளையாக கொழ, கொழவென மாறி செயல்படாமல் போய் விடும். அதன்பிறகு அதனை மீட்க முடியாது. இதயம், நுரையீரல், சிறுநீரகம், கண் கருவிழி போன்ற உறுப்புகளை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்ற முடியாது. உலகில் மூளை மாற்று சிகிச்சை என்பது இதுவரை நடைபெறவில்லை.

    சிலருக்கு பிறவிலேயே ரத்தக்குழாய் பலவீனமாக இருக்கும். திடீரென அந்த குழாய் உடைந்து ரத்தம் மூளையின் மேல் பரப்பில் பரவும் போது பயங்கரமான தலைவலி வரும். இடியானது தலையில் வந்து இடிப்பது போல் வலி இருக்கும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்றால் இதயத்துக்கு ஆஞ்சியோகிராம் செய்வது போல் மூளைக்கும் ஆஞ்சியோகிராம் செய்து சரி செய்யலாம். எனவே அச்சப்பட வேண்டாம். அனைத்து விதமான நோய்களுக்கும் பல நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. பக்கவாதம் வராமல் இருக்க ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்ட கொழுப்பினால் உடல் எடை அதிரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறட்டையும் பக்கவாதத்தின் அறிகுறிகளில் ஒன்று. தூங்கும்போது உடலுக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் குறட்டை வருகிறது. எனவே குறட்டை விட்டு தூங்குபவர்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள். சிலருக்கு பரம்பரையாக கூட பக்கவாதம் வரும்.

    இதை விட முக்கியமான ஒன்று மன பதட்டம். சிலர் எப்போதும் பதட்டத்துடனே இருப்பர். அவர்களை டென்சன் பேர்வழிகள் என அழைப்பர். அவர்கள் பதட்டத்துடன் அதிக சத்தம் போட்டு பேசும்போது மூளையில் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அது பக்கவாதத்துக்கு வழி வகுத்து விடும். எனவே எப்போதும் மன அமைதியை கடைபிடிப்பது நல்லது. உணவு பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் மாற்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்தால் நோயின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×