search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆவின் பால் திருட்டு: அதிகாரிகளை மிரட்டி வேனை எடுத்து சென்றனர்- வினியோகத்தில் கடும் கட்டுப்பாடு
    X

    ஆவின் பால் திருட்டு: அதிகாரிகளை மிரட்டி வேனை எடுத்து சென்றனர்- வினியோகத்தில் கடும் கட்டுப்பாடு

    • நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
    • ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×