search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தடை
    X

    குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தடை

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர்.

    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இன்று (1-ந்தேதி) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.

    விசைப்படகுகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர். கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் இன்று காலை மீன் பிடிக்க சென்றன. கரை திரும்பிய கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள், வேளா மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    Next Story
    ×