search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை- ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
    X

    டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை- ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்திலும் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

    நேற்று பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. குளுகுளு சீசன் நிலவியது. மொத்தத்தில் வெயில் தலை காட்டவில்லை.

    இதேபோல தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.

    Next Story
    ×