search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50 லட்சம் நகைகளை மோசடி செய்த மேலாளர் கைது
    X

    தூத்துக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50 லட்சம் நகைகளை மோசடி செய்த மேலாளர் கைது

    • 22 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் 1,489 கிராம் எடையுள்ள நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அருள் ஞானகணேசை கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்த நிறுவன மேலாளராக சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த அருள் ஞானகணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை சரிபார்க்கும் பணிக்காக கடந்த 4-ந் தேதி தூத்துக்குடி சிறப்பு இயக்குனர் ராகவேந்திரா என்பவர் சென்றார்.

    நகைகளை சரிபார்த்த பின்னர் அவர் திரும்பி சென்றார். ஆனால் அவருக்கு நகைகளின் எடைகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டது இதனால் 5-ந் தேதி மீண்டும் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது 22 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் 1,489 கிராம் எடையுள்ள நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நகைகளின் மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராகவேந்திரா கிளை மேலாளர் அருள் ஞானகணேஷிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து கேட்ட போது அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தூத்துக்குடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அருள் ஞானகணேசை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடி வேறு நிறுவனத்தில் அடகு வைத்தது தெரியவந்தது. மேலும் நகைகள் உள்ள இடத்தினையும் போலீசார் கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×